சூர்யப்பாவை – 23

தொடர் கவிதை

- Advertisement -

பிறப்பினின்று இறப்பினை நோக்கிப்
பயணம் செய்வதே வாழ்க்கை.
இருள்நீராடும் சுருக்குப்பைக்குள்
ஏறத்தாழ ஒன்பது திங்கட்காலம்
இன்னலுடன் முடங்கிக்கிடத்தலே
பிறப்புக்கு முன்னதான பட்டறிவு.
இறப்பென்பது அவ்வாறல்ல.
இறப்பிற்கு முன்னதான காலம்
கொண்டாட்டங்களால் நிறைந்தது.
வாழ்க்கையை வாழத் தந்துவிட்டு
கடைக்கோடியில் காத்திருக்கும்
இறப்புதான் பெருங்கொடையாளி.

சாவைநோக்கித் தள்ளுவதுதான் பிறப்பு.
வாழவைத்து அழகுபார்ப்பதோ இறப்புதான்.
இடைப்பட்ட பயணத்தைக்
கடந்திடும் தன்மையில்
வெளிப்படுகின்றது மனிதனின்
குணநலனும் கூறுபாடுகளும்.
வாழ்க்கையின் அளவுகோலில்
திறமைகளும் ஆற்றல்களும்
அளவீடுகள் அல்ல – மாறாக
அன்பும் அறமும் கனிவுமே ..
மகிழ்வினிலும் மனமுடைந்தும்
உகுக்கின்ற கண்ணீரினைக்
கையாளத் தெரிந்துவிட்டால்
கவலற்றுக் கடக்கலாம் வாழ்வை.

சமன்பாடுகளின் இடப்பக்கம்
எதிர்பார்ப்பினால் எழுதப்படுவதால்
வலப்பக்கக் கணிப்புகள்
சமனற்றே தடுமாறுகின்றன.
இடப்பக்கத்தில் அசையாநிலையில்
நம்மை நிறுத்திக்கொண்டு
வலப்பக்கத்து மனிதர்களை
அசைத்து அசைத்து நம்
பயணத்தின் சமன்பாட்டினைக்
குலைத்துவிடுகிறோம்.

சமன்பாட்டின் இருபுறமும் நாம்
நிற்கத் தேவையில்லை.
சமன்பாட்டின் மேல்கோடாய் நீயும்
கீழ்க்கோடாய் நானும் இருப்போம்.
இடவலப் பக்கங்களின்
ஏற்ற இறக்கங்களில் நாம்
காதல்சறுக்கு விளையாடலாம்
வாவென்கிறாய்.
காதலெனும் பாதையும் நீதான்
களிப்புமிகு பயணமும் நீதான்.
பயணக்காதலன் நீ சூர்யா ..!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -