சகடக் கவிதைகள் – 19

கேட்பாரற்ற வயோதிகன்

- Advertisement -

மூத்தோன் சொல்

மாயாஜால வித்தை ஒன்றை
மனிதர்கள் பார்த்து வியக்கிறார்கள்

மயக்கும் ஜாலங்களால்
மனை திரும்ப மறக்கிறார்கள்

வித்தைகளில் மூழ்கியதால்
வீண் பொழுதாய்க் கரைந்தது காலம்
வீட்டு நினைவு வருகும் முன்னே
வேறு வித்தைக்கு நகர்ந்தார்கள்

வண்ண வண்ணக் கூடாரங்கள்
வானளாவ அலங்காரங்கள்

மேலே ஏற்றிக் கீழே தள்ளும்
காலமென்ற ராட்டினம்.

கண்முன்னே காணாமல் போகும்
காற்றைப் போல் கடந்து செல்லும்
கைக்குள் சிக்காமல் நழுவும்
கணம் என்ற மாயாவி.

இரட்டிப்பாய்த் தருவதாய்க் கூறி
இருப்பதையும் பிடுங்கிக்கொள்ளும்
வாழ்வென்னும் சூதாடி.

இன்பமென்ற விஷ முலாம் பூசி
இன்னலைத் தன்னுள்ளே புதைத்து
இளமைக்குள் முதுமையை வைத்து
இழுத்துச் செல்லும் தந்திரவாதி
இரக்கமற்ற மந்திரவாதி

வேடிக்கை என்னவென்றால்
வேடிக்கை காட்டுபவரும் – அதை
வேடிக்கை பார்ப்பவரும்
வேறு வேறு இல்லையாம்

விதையாய் இருக்கும் வரை
வெளிச்சம் இருப்பதை அறியோமென்பதால்
விவரமறிந்த வயோதிகன் ஒருவன்
வித்தைகள் செய்வதை நிறுத்தச் சொல்லி
விடாமல் கத்திக் கொண்டிருக்கிறான்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -