காத்திருப்பு

கவிதைகள்

- Advertisement -

வார்த்தைகளால் கொட்டித் தீர்க்க
முடியாத பொக்கிஷங்கள் என்
பயணத்தில் உன் நினைவலைகள்

என்னைத் தாங்கிப் பிடித்து
கலங்காதே என்று உலகையே
மீட்டுக் கொடுத்த உன்னத உறவு நீ

பாச மழை பொழிந்து மதிமயங்கி
ஒன்று கலந்த நெஞ்சங்கள் மறக்க
மறந்து புலம்பித் தவிக்குதே

நீ பேசாத ஒவ்வொரு பொழுதும்
நரகமாகி நகன்கின்றதே என்னானதோ எதானதோ என்ற ஏக்கத்துடன்

உலகமே இருண்ட மனிதனின்
வாழ்வில் ஒளியைப் பாய்ச்சி விட்டு
இருளில் தள்ளுவது தகுமா

உயிர் கரைந்து கசியும் நிமிடங்கள்
ஆழியின் கரைகளில் சேர்த்து விட்டு
அதற்கே எனை கொடுப்பது தகுமா

உன்னால் முடியும் என்று தட்டிக்
கொடுத்து பட்டை தீட்டிய நாட்களும்
கசந்து போகுதே

முடக்கிய வழிகள் நேராக்கி
பிறவியின் அர்தம் சொல்லிய
வாழ்கை வலுவிழந்து தவிக்குதே

சுவாசம் இன்றித் தவிக்கும் உயிரின்
ஏக்கம் அறிந்து உயிர் கலந்து
மூச்சுக் காற்றை அளிப்பாயோ..!

??????????????????????????

முதுமை

கனிந்து_கடந்த பெற்றோர்களை
வாழ்கை முடிந்ததென்று விரட்டியதேன்
முதியவர் இல்லம் தஞ்சமென்று
வீட்டை விட்டும் ஒதுக்கியதேன்

பொக்கிஷமான கண்களாக உம்மை
பெருமையாக நினைத்தோம்
பெற்றவர்கள் எங்களை
பெருங்குழியில் விட்டதேன்

இயலாமையால் எம்மை
இடைஞ்சலாய் நினைத்தீர்கள்
இனிமையான நாட்களை
இம்மியேனும் நினையுங்கள்

பத்தியம் எனும் பதம் பகிர்ந்து
பத்திரமாய் வளர்த்தோம்
பருவத்தின் மாற்றத்தால்
புறக்கணித்துச் சென்றீர்கள்

எம்முடைய பிள்ளைகளே
எமக்காக வாழவேண்டாம்
என்றுமே முதிர்ந்தபின்
எம்நிலைக்கு வந்திடாதீர்

??????????????????????????

தந்தையால் மகனுக்கு

கயவர்கள் சதி வலை நெய்து
வீசிய போதும் துவண்டு ஒழியாது
தூற்றியவர்கள் சோரும் வரை
பயணத்தை தொடர்ந்திடு மகனே…!

செல்லும் பாதையில் கற்கள் முற்கள்
புலிகள் பன்றிகள் ஓநாய்கள் பல
முட்டுக்கட்டைகளாக தொடரும்
சிந்தை தளர்ந்திடாதே மகனே…!

நேர்மை தைரியம் நிலை பிறந்தாலும்
கைகால் ஆகாதவர்கள் விமர்சிக்க
உடல் சோர்ந்து முன் வைத்த காலை
பின் வைத்து விடாதே மகனே…!

வெற்றி கண்டு பெருமை கொண்டு
தோல்வி நிலை துவண்டு ஓடி
வாழ்கை கசந்து இலட்சியம் மறந்து
அலட்சியமாய் எண்ணாதே மகனே….!

வீண் பேச்சுக்கள் குறைத்து கேளிக்கை
வினைகள் களைந்து அன்பென்ற
விதையை போகும் இடம்தனில்
விதைத்து அறுவடையில் சிறப்பாய் மகனே…!

அயராது உழைத்து தந்தை நாமம்
சொல்லும் மகனாய் பல் துறை
சிறந்து நற்செயல் பல செய்து
மானிடர் மனம் கவர்ந்து சிறப்பாய் மகனே…!

தந்தை சொல் அழியாத கல்வெட்டாய்
சிந்தையில் செதுக்கி அணுவும் தவறாமல்
அது வழி நடந்தால் வாழ்வில் விளையும்
செயல் முழுதும் துணை செய்யுமே மகனே….!

??????????????????????????

காட்டு வழிப் போறபுள்ள
ஒத்த வழி பாதையில
பத்திரமா போற புள்ள

வாழை இலை சாப்பாட்டு
பசியும் கொஞ்சம் கூடுதடி

மொகத்த நீயும் சுழிக்கயிலே
உசுரும் ஏனோ கலங்குதடி

வழியோரம் பாய் போட்டு
இளப்பாற வாடிக் கண்ணே

கொண்டக் காத்து அடிக்குது
உடம்பெல்லாம் முறிக்குது

ஒன் வாசம் உடல் சேர
மனசும் ஏனோ மயங்குதடி

வெத்தில பாக்கு வெட்டயிலே
மச்சான் நானும் சிவந்தன் புள்ள

சுண்ணாம்பா என்ன தடவி
சுளுக்கையே போக்குறியே

கொசுவத்துல என்ன மடிச்சு
மாராப்புல ஒளிச்சிட்டியே

தை மாசம் சேதி சொல்ல
தாம்பூலம் மாத்துரன் புள்ள

புல்மோட்டை கவி நவீத்
புல்மோட்டை கவி நவீத்https://minkirukkal.com/author/muhammathunaveeth/
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் அழகிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் எழுத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் கவரப்பட்டு பல்வேறு விதமான ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தேன் ஈரம் காயாத எழுத்துக்கள் எனும் புத்தகம் தற்போது எழுதி வருகின்றேன் சில நாட்களில் வெளியிடப்படும். இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நீருயிரின கைத்தொழில் நீர்வள முகாமைத்துவம் முதலாவது ஆண்டின் கல்வி கற்கின்றேன்

3 COMMENTS

  1. எழுத்துலகில் சாதிக்க துடிக்கும் உம் லட்சியம் நிலைக்க இன்னவளின் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -