மழை வரும் நாட்களின் கனவு

மூன்று கவிதைகள்

- Advertisement -

மழை வரும் நாட்களின் கனவு

பூக்கள் பூத்த வனத்தில்
உன் முகம் பூக்க
யுகங்களாய் நொடிகள் மாறிட
நெருப்பைச் சுமந்தபடி நான்.

பகலின் கொண்டாட்டம் முடிகிறது..
இரவின் கொடூர வாதை தொடங்க.

கானல் வரியை இசைத்தவாறு
காற்று வருகிறது
அதன் இசைச் சுரங்கள்
இருதயத்தை வருடிப் பிசைகின்றன.

நீ வரமாட்டாய் என
சொல்லிப் போனது
மேற்கு மலை காட்டுப் புறா.

என் வலியை அதிகப்படுத்துகிறது
இச்சி மரங்களில் அடையும்
கொக்கு ஜோடிகளின்
கொஞ்சல் ஒலிகள்.

என் வேதனையைக் கேலி செய்கின்றன
ஆற்றோர
தென்னை மரங்கள்.

வீணாக
தவமிருக்காதேயென
நீரோடையும்
புத்திமதி சொல்லியபடி போகிறது.

மழை வரும்
நாட்களின் கனவில்
மண்ணுக்குள் தியானித்திருக்கும்
தவளையாய்
நானும்.

??????????????????????????

உயிர்மையின் நாடி

காலங்களைப்
பட்டைகளாக
தரு
அணிந்து இருக்கிறது

கனவுகளைக்
கிளைகளாக
திசை எட்டும்
நீட்டுகிறது.

இலைகளாகக்
கிளைத்திருக்கின்றன
அதன்
நூறு இருதயங்கள்.

மண்ணில் ஊன்றியிருக்கும்
ஆணிவேர் வாயில்
சல்லிவேர்களாய்
ஆயிரம் நாவுகள்
நீர்மையைச் சேகரிக்கின்றன.

தொடர் நிலங்களுக்கு ஊடாக
செழிப்பைப் பரத்துகிறது.

பச்சையின் குளிர்மையாக
உயிர்களுக்குள்
ஊடுருவுகிறது.

காற்றின் மாசுகளை
உள்வாங்கி
அமுதத்தை
வெளிகளில் நிரப்புகிறது.

நிழலிட்டு
ஆற்றுப்படுத்திக்
கனிகளால்
உயிர்களுக்கு உயிரூட்டுகிறது.

கோடாரிகளும்
இரம்பங்களும்
அரிவாள்களும்
அறுத்தெடுப்பது
தருவையல்ல
இகத்தின்
வாழ்வை.

??????????????????????????

கவிதை : சில குறிப்புகள்

ரொட்டி அடுப்புக்குள்
வேகும் ரொட்டிகள்…
எரிக்கும் வெயிலில்
ஆற்று மணலில் நடப்பது
நீருக்குள் மூழ்கி
மூச்சடைக்கத் திணறுவது
முள்ளில் படுக்கை..
பனிக்கட்டிகள் மேல் விருந்து..
நெருப்பில் விரல் தோய்த்து
ஊழிக் காற்றில்
சித்திரம் தீட்டுவது
நீளும் மழை நாளில்
நெடிய மலை ஏறுவது
நெஞ்சுக்குள்
துளித்துளியாய்
நிச்சலனம்
ஊற்றெடுப்பது
மரங்களடர்ந்த
பள்ளத்தாக்கில்
பீறிட்டுக் கிளம்பும்
குளிர்ச் சுனைகள்…

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -