காத்திருப்பின் வேதனை

மூன்று கவிதைகள்

- Advertisement -

(1) காத்திருப்பின் வேதனை

வாசல் முற்றத்தில்
நீர்க்குமிழிப் படகுகள்
நகர்ந்து நகர்ந்து
மிதந்து செல்கின்றன.

அவற்றின் ஒன்றில்
பயணித்து
களப்புக் கடைக்குச் செல்ல
ஆவல் கொள்கிறேன்.

திண்ணையை விட்டு
இறங்க முனைகையில்
பட் ..‌ பட்டென்று படகுகள் வெடித்து
ஓடும் நீரில் உருக்குலைந்து போகின்றன.

காபியும் டீயும் கலந்தது போன்ற
நீரோட்டத்தில்
நெல்லுச்சோறு , கறிக்குழம்பு , ஜவ்வு மிட்டாய்
நிரம்பிய படகுகள் எதாவது
நீந்துகிறதாவென
உற்று உற்றுப் பார்க்கிறேன்.

மழை வலுப்பதால்
படகுகள் நிறைகின்றன
ஆனால்
நான் எதிர்நோக்கும் படகு மட்டும்
தென்படவேயில்லை.

காட்டுக்குச் சென்ற பெற்றவர்கள்
தினமும் போல்
இன்றைக்கும்
திரும்பி வருவார்களோ… ?
நள்ளிரவில்.

– வசந்ததீபன்

??????????????????????????

(2) இதயத்தைத் தொலைத்த சூரிய வம்சத்தினர்

நிழல்தின்று
வெறிக் கூத்தாடும் சூரியன்
வழியெங்கும் கனல் உமிழ்ந்தபடி
சுழன்று சுழன்று கெக்கொலிக்கிறான்.

தகிப்பின் கூரிய வாட்கள்
வீசும் வீச்சில்
இயற்கை கசிந்து கசிந்து
அனல் மிகுந்து பொங்குகிறது.

மூச்சொலியின் பாழ் வெளித் தனிமை
திரண்டு
கனத்த மௌனம் கவிய
சுடரும் சூழலில்
நீந்தித் திளைக்கிறது ஒளிப்பிழம்பு.

இளகி உருகும் சூனியத்தைக் கடந்து
கொதிக்கும் பாதைகளைத் தாண்டுகையில்
கறுப்புக் கோளமாய் குவிந்திருக்கிறது
அந்தச் சதைக் குவியல்.

அதன் மேல்
மஞ்சள் துணி சுற்றிய
தகர உண்டியல்.

நெருங்குகையில்
கை கால்களற்ற
அந்த உயிரிடமிருந்து
பிச்சை கேட்கும் குரல்…
பிசைகிறது
என் மென் உயிரிழைகளை.

கரையாத மனங்கள்
சலனமற்று விரைகின்றன
கருமாரியின்
பொன் அலங்கார தரிசனம் பார்க்க.

– வசந்ததீபன்

??????????????????????????

(3) நிழலாட்டம்

குளத்தங்கரையில்
நின்றிருந்தோம்
நானும்
பட்டுப் போன வாகை மரமும்.

நீர்த்துளிகளை
விசிறியடித்து விட்டு
துள்ளிப் பாய்ந்தன
வெள்ளி மீன்கள்.

தாமரைப் பூக்கள்
இடைவெளியின்றி
இலைகள் மிதக்க
பூத்தபடியே
பெருகத் தொடங்கின.

விதவிதமான பறவைகள்
நீரில் படகுகளாக…
நீந்தியும் .. முக்குளித்தும்
திரிந்தன.

காலிக் குடங்களோடு
தாகம் தீர்க்க அலைபவர்கள்
புற்றிலிருந்து வெளியேறும்
ஈசல்களாய்
பறக்கிறார்கள்.

எவனோ ஒருவன்
தான் வேட்டையாடிய எலிகளை
கயிற்றில் தொங்க விட்டபடி
பசியால் தள்ளாடி
எங்கோ… விரைகிறான்.

எதிர் .. நீரற்ற குளத்தில்
முளைத்திருக்கும்
வீடுகளின் ஜன்னல்கள் வழியே
ஒளிபிம்பங்கள்
குளமாய்..மீன்களாய்.. பூக்களாய்..
குடங்களாய்..மனிதர்களாய்..
தோன்றி மறைவதை
நானும்.. வாகை மரமும் பார்க்கிறோம்.

– வசந்ததீபன்

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -