எழுத்தே வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் – 176
விலை – ரூ.175
பல்வேறு தருணங்களில் எஸ்.ரா தனது வாழ்வனுபவங்கள் குறித்து எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஏதோ ஒரு ஆசையில் எழுதத் தொடங்கிவிட்டாலும் எப்படி எழுதுவது, யார் வழிகாட்டுவார்கள் எனத் தெரியாமல் தட்டுத் தடுமாறி அலைந்த நாட்களையும் அச்சமயம் வழிகாட்டிய இலக்கிய ஆளுமைகள் மற்றும் பயண அனுபவங்கள் பற்றியும் இந்தக் கட்டுரைகளில் பதிவு செய்கிறார் அவர்.
நூலகத்தில் புத்தகத்தைத் திருப்பித் தரும் தேதி நெருங்கியபோதுதான் படிக்கக் கையிலெடுத்தேன். குறைவான நேரக் கெடுவோடு படிக்கத் தொடங்கினேன். பிற வேலைகளின் குறுக்கிடுகளால் தொடர்ச்சியாகப் படிக்க முடியாவிட்டாலும், எடுத்துப் படிக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது அவரது எழுத்து. கீழே வைக்க முடியாமல் ஒரே நாளில் படித்துமுடித்துவிட்டேன்.
எழுதுவதற்கு அவருக்கு என்றும் உறுதுணையாக நிற்கும் குடும்பம், புத்தகங்களுடன் தனக்கு இருக்கும் நீண்ட உறவு, பல இலக்கிய ஆளுமைகள் தனது முன்னேற்றத்திற்கு ஆற்றிய உதவிகள், மேற்கொண்ட சில பயணங்கள், சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட அனுவங்கள் என்று கலவையான பல விஷயங்கள் பற்றி ஒவ்வொரு கட்டுரையிலும் எழுதியுள்ளார் எஸ்.ரா.
மனைவி வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் கைக்குழந்தையைக் கவனித்தபடி படிப்பதும் எழுதுவதுமாக அவர் இருந்ததைப் படிக்கையில் ஒருநொடி, பாலகுமாரன் கண் முன் வந்து போனார். தனது வெற்றிகரமான எழுத்துப் பயணத்தில் தனது மனைவிக்கு இருக்கும் பெரும்பங்கு பற்றி எழுதும் இடத்தில் நெகிழ்ந்து போகிறார். காய்கறி வாங்க சைக்கிளில் கிளம்புபவர் திடீரென ஏற்பட்ட உந்துதலால் எந்தத் தகவலும் தராமல் பஸ் பிடித்து ஹம்பியோ, திருவனந்தபுரமோ சென்றுவிடுவாராம் . பிறகு பயணம் முடிந்து வீடு திரும்புபவரிடம் அவர் உடல்நலன் சார்ந்த கேள்விகளை மட்டுமே அவர் மனைவி வினவுவாராம். அவரே இவருக்குப் பணம் தந்து ஊர் சுற்றிவரவும் அனுமதித்திருக்கிறார்.
அவரின் அசுரத்தனமான புத்தக வாசிப்பு எப்போதுமே மலைக்க வைப்பது. ஆனால் அதற்காக அவர் மேற்கொள்ளும் சீரிய திட்டமிடலையும் காலக்கெடு வகுத்துக் கொண்டு புத்தகங்களை வாசிப்பதையும் அறிந்து மேலும் வியந்து போனேன். வாசிப்பு என்பது பொழுதுபோக்கான விஷயமாக பலருக்கு இருக்கையில், அவர் அதன்பொருட்டு செய்யும் கடின உழைப்புதான் அவரை இந்த உயரத்தில் கொண்டு சென்று வைத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. தினமும் குறைந்தபட்சம் ஐம்பது பக்கங்களாவது வாசிக்கும் அவர், ஐநூறு பக்க நாவலைக் கூட இரண்டு நாளில் வாசித்துவிடுவேன் என்கிறார். படிப்பில் வேகமும் கூர்ந்த கவனமும் இருந்தால் இத்தகைய வாசிப்பு சாத்தியம்தான் எனக் கூறுகிறார்.
பழைய புத்தகக் கடைகளுக்கும் அவருக்குமான உறவை விவரிக்கும் கட்டுரை சுவையானது. பழைய புத்தகக் கடைகளுக்குள் அதிகம் அலைந்து சுவாச ஒவ்வாமையைத் தேடிக் கொண்ட போதிலும் அது அவரது தேடலைப் பாதிக்காமல், எப்படி அந்த ஒவ்வாமையே பிறகு பழகிபோனது என்பதை எழுதுகிறார். மூர் மார்க்கெட்டில் அவர் கண்டெடுத்த பொக்கிஷங்களைக் கூறுகையில், அதே வகையான அனுபவங்கள் பேசும், விட்டல் ராவின் ‘வாழ்வின் சில உன்னதங்கள்’ புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் தான் படித்த கட்டுரைப் புத்தகங்களில் மிக முக்கியமானது என்று அதனைக் குறிப்பிடுகிறார்.
உப பாண்டவம் நாவலை வெளியிட அவர் பட்ட சிரமங்களை அதே வலியுடம் பதிவு செய்திருக்கிறார். ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருந்த கைப்பிரதியுடன் ஒவ்வொரு பதிப்பகமாக ஏறி இறங்கியது, தானே அச்சிடலாம் என்று முடிவு செய்த பின் அதில் ஏற்பட்ட சிக்கல்கள், நண்பர்களின் ஆதரவு என்று அது தொடர்பான அவரது அனுவத்தைப் படிக்கையில் அன்று அவருக்கிருந்த வேதனையும் ஆதங்கமும் ஆற்றாமையும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன.
நெருக்கடியான ஒரு தருணத்தில், வீட்டைவிட்டு ஓடி வந்தவர், டெல்லி ரயிலைப் பிடிக்கும் முன்னர் விகடன் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கே யாரைப் பார்ப்பது என்று தெரியாத நிலையில், வரவேற்பாளரிடம் மதன் சாரைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அவரைச் சந்தித்த மதன், அவரது நிலைமையைப் புரிந்துகொண்டு அவருக்குத் தகுந்த ஆறுதல் சொல்லி விகடனின் எம்.டி பாலசுப்ரமணியம் அறைக்கு அனுப்பியிருக்கிறார். அவரை அன்போடு வரவேற்று அவரது எழுத்துத் திறமையைப் பாராட்டி, ‘நீங்க விரும்பினா உடனே ஒரு தொடர்கதை எழுதலாம். உங்களாலே நல்லா எழுத முடியுது. நிறைய ஊர் சுத்திப் பாருங்க. அப்போதான் லைப் புரியும். ஆனா எழுதறத விட்றாதீங்க.’ என்று அவர் பரிவோடு கூறிய வார்த்தைகளால் அன்று ரயில் டிக்கெட்டை தூர எறிந்ததை நினைவு கூறுகிறார்.
அவரது சிறுவம் பற்றிய கட்டுரைகளில் எஸ்.ரா என்கிற எழுத்தாளர் நமக்குத் தெரிவதில்லை. நாம் காணுவது சட்டை ட்ரவுசர் அணிந்த ஒரு பள்ளிச் சிறுவனைத்தான். அவனது ஏக்கங்களையும் கோபங்களையும் அழுகையையும் தான். அன்றிருந்த அதே உணர்ச்சிநிலையில் நின்று அவ்வனுபவங்களை எழுதியிருக்கிறார். அவர் நண்பர்களோடு தோள் மீது கைபோட்டு சுற்றிய தருணங்களில் நமது சிறுவயது நட்புகள் நினைவில் தோன்றி ஏக்கம் கொள்ள வைக்கின்றன. மனிதர் அவரோடு நம்மையும் உருமாற்றி அவர் செல்லும் காலங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்.
எல்லா எழுத்தாளர்களுக்கும் தங்களது எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாக இருப்பதில்லை. தங்களது சொந்த அனுபவங்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட படைப்புகள் பலவற்றையே பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அந்த வகையில் எஸ்.ரா சற்று வித்தியாசமானவர். தனது வாழ்க்கையிலிருந்து ஐந்து சதவீதம் மட்டுமே புனைவில் எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். கற்பனையின் முடிவற்ற சாத்தியங்களைத் தனது எழுத்தில் உருவாக்க முயற்சிப்பதாகக் கூறுகிறார்.
எந்த வாசகனுக்குள்ளும் இருக்கும் பேராவல் என்பது எழுத்தைத் தாண்டி, தான் ரசிக்கும் அந்த எழுத்தாளன் யார் என்பதை அறிந்து கொள்வதில் தான் இருக்கிறது. நூலில் உள்ள கட்டுரைகளில் தனது குடும்பம், தான் படிக்கும் முறை, எழுத்தையே வாழ்க்கையாக்கிக் கொள்ளும் இலட்சியத்தால் அடைந்த வேதனைகள் என தன் எழுத்தைக் கடந்து தனது சொந்த வாழ்க்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைத் தருகிறார் எஸ்.ரா. அசலான உணர்ச்சிகள் கலந்து அவர் அளிக்கும் அனுபவங்கள் ஒரு எழுத்தாளனின் போராட்டங்கள் கூறும் வாழ்க்கைச் சித்திரங்கள்.
-இந்துமதி மனோகரன்