சகடக் கவிதைகள் – 21

- Advertisement -

யுக புருஷன்

நீர்த்துளிகளின் சத்தம் கேட்டு
நித்திரை கலைத்து எழுந்தவன்
நீண்ட காலம் உறங்கியதை – சில
நொடிகளில் உணர்ந்தான்

காலமே தன் காலடியில்
காத்திருப்பது தெரிந்து
கட்டவிழ்த்துவிட்டான்

கண்களின் ஒளி பட்டு
காரிருள் நீங்கப்பெற
பகலும் இரவும் என இரு
பாகங்கள் உண்டானது

மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
முகத்தைத் திருப்புகையில்
முளைத்தவையாம் திசைகள்

என்ன செய்யலாம் என்று
எண்ண எண்ண உதித்தன
எண்ணற்ற கோடி
எல்லையற்ற பிரும்மாண்டம்

தன்னைப் போலவே பல கோடி ஜீவன்கள்
தனக்குப் பிடித்ததாய் பல கோடி ஜீவன்கள்
தனித்து விளையாடும் குழந்தையாம் அவனுக்கு
தந்தையும் அவனே தாயும் அவனே

பிடித்தவை பிடிக்காதவை
நன்மை தீமையென்ற
பாசாங்கெல்லாம்
நாடகத்தின் சுவாரஸ்யத்திற்கு
தானே போட்ட திரைகளாம்

அனைத்து கதாப்பாத்திரங்களும்
அவனே ஏற்று,
அவன் அதுவாகவே மாறும்
அற்புத விளையாட்டில்
பற்பல வேடங்கள்
பல்வேறு விசித்திரங்கள்
ஏகாந்த விளையாட்டின்
வெற்றியாளனும் அவனே
தோல்வியுற்றவனும் அவனே

ஆடிக் களைத்தபின்
அளவில்லா பசி ஏற்பட
படைத்த அனைத்தையும் தனக்கே
படையலாக்கி உண்டு களித்தான்

கண் அயரும் நேரம் வர
காலத்தை மீண்டும் பாயாக்கிக்
கருப்பைக்குள் ஒடுங்கினான்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -