ஊரும் சேரியும்

நூலாசிரியர்: சித்தலிங்கையா

- Advertisement -

மூலம் : சித்தலிங்கையா
தமிழில் : பாவண்ணன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

கன்னட மொழிக் கவிஞரும், தலித் இலக்கியவாதியுமான சித்தலிங்கையாவின் சுயசரிதை நூல்தான் ‘ ஊரும் சேரியும் ‘. இவர் நவீன கன்னட இலக்கியத்தில் தலித் குரலைப் பதிவு செய்த முன்னோடி படைப்பாளர்களில் முக்கியமானவர். இவர் இயற்றிய ‘ ஹோலெமாதிகர ஹாடு ‘ எனும் கவிதைத் தொகுதி ஆயிரக்கணக்கில் விற்பனையாகி கர்நாடகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இவருடைய பேரும் புகழும் பரவக் காரணமாக இருந்தது.

சில நாட்களுக்கு முன் நாம்தேவ் நிம்கடேயின் ‘ புலியின் நிழலில் ‘ நூல் குறித்த பதிவை எழுதியிருந்தேன். அப்போது சித்தலிங்கையாவின் ‘ ஊரும் சேரியும் ‘ படித்துப் பார்க்குமாறு திரு. சரவணன் மாணிக்கவாசகம் பரிந்துரைத்திருந்தார். உடனே புத்தகம் வாங்கிவிட்டாலும் இப்போதுதான் வாசிக்க முடிந்தது. சமீப காலமாக தலித்திய படைப்புகளை வாசித்து வருகிறேன். அந்த எழுத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட எழுத்தாக சித்தலிங்கையாவின் எழுத்து அமைந்துள்ளது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புன்சிரிப்புடனும் உற்சாகத்துடனும் புரட்டினேன். ஒரு மனிதனின் வாழ்வில் இத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களா என முடிக்கையில் அசந்து போகுமாறு புத்தகம் நெடுக சித்தலிங்கையா தன் வாழ்வில் பார்த்த, அனுபவித்த சம்பவங்களைச் சுவையுற அடுக்கியுள்ளார்.

சுயசரிதை நூலாக இதனைக் கொண்டாலும், இது பெரும்பான்மையான சுயசரிதைகள் போல் அல்லாமல் சித்தலிங்கையாவின் நினைவில் தேங்கிய அனுபவங்களின் தொகுப்பாக கொள்ளலாம். அதனூடே அவர் வாழ்கையின் பயணத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

இதனை ஒரு தன்வரலாற்று நூல் என்ற எண்ணமின்றி படிக்கையில் சுவை மிகுந்த புதினம் ஒன்றைப் படிக்கும் உணர்வே மேலோங்குகிறது.

அவர் காட்டும் முதல் காட்சியே சித்தலிங்கையாவின் தந்தை, கழுத்தில் நுகத்தடி சுமக்க நிலத்தில் உழுது கொண்டிருந்ததை இவர் தூரத்திலிருந்து பார்த்ததைத்தான். ஆனால் இந்தச் சம்பவத்தை எந்தவித ஏற்ற இறக்கங்கள் இன்றி உணர்ச்சிகள் துடைத்த வரிகளில் பதிவு செய்துள்ளார். அந்த நடையே நூல் முழுவதும் தொடர்கிறது. பல இடங்களில் நம்மை வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறார். திகிலூட்டும் அமானுஷ்ய அனுபவங்களுக்கும் நூலில் பஞ்சமில்லை. அவர் சந்தித்த பெரிய மனிதர்கள் பற்றிய தனது கருத்தையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார்.

தெருக்கூத்து கலைஞர்கள் சிலர் சித்தலிங்கையா எழுதிய வரிகளைப் பாடக் கேட்ட பாவண்ணன், அந்த வரிகள் கவர்ந்திழுக்க, அவற்றை வடித்தவரைத் தேடி அறிந்திருக்கிறார். பின் சித்தலிங்கையாவின் இந்நூலைப் படித்தவர், அதனை மிகவும் ஆர்வத்துடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மூலத்தை படிக்கும் உணர்வைத் தருகிறது அவரது தேர்ந்த மொழிபெயர்ப்பு.

உணர்ச்சித் ததும்பல்கள் இல்லா எழுத்தாக அமைந்தாலும் அதன் ஆழத்தில் பொதிந்துள்ள உண்மை நம்மைச் சுடாமல் இருப்பதில்லை.
நரஹள்ளி பாலசுப்பிரமண்ய, முன்னுரையில் குறிப்பிடும் இவ்வரிகள் புத்தகத்தின் தன்மையை சரியாகச் சுட்டுகின்றன.
//இந்தச் சுயசரிதையில் நான் என்னும் அகம் இல்லை. மாறாக, ‘ நான் ‘ என்னும் இருப்பை உணர்ந்து கொள்ளும் மனிதனின் கதையாக வளர்ந்து இது முக்கியத்துவம் பெறுகிறது. நமது இலக்கியத்தைப் படித்திருக்கும் ஒவ்வொருத்தருக்கும் இக்கதையில் உள்ள குறும்புத்தனம், கிண்டல், தன்னைத்தானே கண்டுகொள்ளக் கூடிய தேடல் முறை அனைத்தும் சட்டென கவனத்தை கவர்ந்ததிழுக்கின்றன. ஆனால் அவற்றுக்கு அப்பால் ஒலிக்கிற கட்டுரையின் குரல் மட்டும் சித்தலிங்கையாவுக்கே உரிய தனித்துவம் மிகுந்தது. //

பொதுப் போக்கிலிருந்து வேறுபட்ட மனநிலையில் எழுதப்பட்டிருக்கும் இந்தச் சுயசரிதை, தலித்திய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -