நான்காம் பரிமாணம் – 35

7. சுவை அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். சுவை அதிகாரத்தில் இதுவரைக்கும் மனிதர்களும் மிருகங்களும் உணரும் பல்வேறுவிதமான சுவைகளை பற்றி கூறியுள்ளேன். இந்தப் பகுதியில் உங்கள் நாவால் நேரடியாக உணர முடியாத பல்வேறு சுவைகளைப் பற்றியும் அதற்கும் மனதுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறிவிட்டு சுவை அதிகாரத்தை முடித்துக்கொள்கிறேன்.

சுவையின் உருமாற்றம்

நீங்கள் உணர முடிந்த ஒவ்வொரு சுவைக்கும் ஒரு பண்பு இருக்கிறது என்று ஆரம்பத்தில் கூறினேன் அல்லவா? ஆனால் இந்த சுவையானது நீங்கள் சாப்பிடுவது முதல் செரிமானம் நடக்கும் வரையில் அப்படியே இருப்பதில்லை. சாப்பிடும்பொழுது இருக்கும் சுவை செரிமானம் அடைந்தவுடன் மாறிவிடுகிறது. இதற்கு எளிதான உதாரணம் நெல்லிக்காய் தான். நெல்லிக்காயை நீங்கள் வாயில் வைத்தவுடன் புளிப்பு சுவை உணர முடியும். ஆனால் நாக்கில் உள்ள உமிழ் நீரில் சிறிது நேரம் அப்படியே இருந்தால் அதில் ஒரு இனிப்பு சுவை தெரியும் அல்லவா? அதன் காரணம் உங்கள் உமிழ்நீர் நெல்லிக்காயை சற்று செரிமானம் அடைய வைத்துவிடுகிறது. இதனால் செரிமானத்திற்கு முன்பு புளிப்புச் சுவையாக இருந்த பொருள் பின்பு இனிப் ஆகிவிடுகிறது. மேலும் இது வயிற்றுக்குள் முழுமையாக செரிமானம் அடைந்த பின்பு புளிப்புச்சுவை முற்றிலுமாக மறைந்து இனிப்புச் சுவையாக மாறிவிடுகிறது. இப்பொழுது நெல்லிக்காய்க்கு இனிப்பு சுவைக்காண குணங்கள் உண்டா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்த இனிப்பு, செரிமானத்திற்கு முன்பு இருக்கும் இனிப்புச் சுவையின் அதே குணங்கள் கொண்டிருக்காது. பூக்களில் இருக்கும் சர்க்கரையின் சாதாரண இனிப்பு தேனீக்களின் உமிழ் நீர் பட்டு செரிமானமடைந்து தேனாக மாறும்பொழுது அதன் குண நலம் எவ்வாறு மாறுகிறதோ அதுபோலவே ஒவ்வொரு சுவையும் செரிமானம் அடைந்த பின்பு அதனுடைய குணம் வேறு மாதிரியாக இருக்கும். 

இப்படிப்பட்ட மாற்றத்தை பண்டைய மருத்துவ முறைகளில் “விபாகா” என்றழைப்பார்கள். சுவை எவ்வாறு உருமாறுகிறது என்பதை குறிக்கும் சொல் தான் இது. எந்த ஒரு உணவின் உருமாறும் குணத்தை வைத்து அதனை மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். உருமாறிய விபாகா சுவை உங்கள் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு உணவுப் பொருள் சுவை மாறுவதற்கு அந்தப் பொருள் மட்டுமே காரணம் இல்லை. அதை செரிமானம் அடைய வைக்கும் உங்கள் உடலில் உள்ள அமிலங்களும் உடலின் வெப்ப நிலையும் முக்கிய காரணிகளாக இருக்கிறது. அப்படியானால் ஒரு உணவுப்பொருளை இருவேறு மனிதர்கள் சாப்பிடும் பொழுது இருவருக்கும் வேறு விதமான சுவை மாற்றம் ஏற்பட்டு அதனால் ஏற்படும் விளைவுகளும் மாறுபடலாம் அல்லவா? இதனால்தான் சிலருக்கு நல்ல உணவை சாப்பிட்டாலும் உடலில் சென்று சேர முடியாமல் போய்விடுகிறது. சிலருக்கு மிகக் குறைவான உணவை சாப்பிட்டாலும் உடலில் நன்கு சேர்ந்து விடும். இந்த மாற்றத்திற்கு மூலகாரணம் என்ன தெரியுமா? உங்கள் மனம்தான்!

மனதும் சுவையும்

புத்தமதத்தின் கோட்பாடுகள் அனைத்தும் பண்டைய மொழியான பாலியில் எழுதப்பட்டது. அவற்றில் உங்கள் மனம் எவ்வாறு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி விளக்கமாக பல குறிப்புகள் உள்ளன. இந்த விளைவுக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? “விபாகா”! ஆம் உங்கள் உணவில் ஏற்படும் சுவை மாற்றத்திற்கும் நினைவுகளால் மனதிற்கு ஏற்படும் விளைவுக்கும் பண்டைய மொழிகளில் ஒரே சொல்தான். உங்கள் மனதில் கோபம் அதிகமாக குடி கொண்டிருந்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் தன்மையும் வெப்பமும் வேறுவிதமாக இருக்கும். கோபத்தினால் உங்கள் உடலில் சத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை குறைந்து போகிறது. இதனால்தான் உலகின் பண்டைய நாகரிகங்களில் கூட உணவை அருந்தும் முன்பு மனதை சமநிலைப் படுத்துவதற்கான சிறு முயற்சியாக பிரார்த்தனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். கோபம் மட்டுமன்றி உங்கள் மனதில் ஏற்படும் எந்த ஒரு சிந்தனையும் நேரடியாக நீங்கள் சாப்பிடும் உணவின் சுவையை மாற்றக்கூடியது. உளவியல் ரீதியாக ஏற்படும் இந்த மாற்றங்கள் உடலிலும் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நவீன மருத்துவம் கண்டுபிடித்தது இதன் மூலமாகத்தான். இப்படி மனதில் மூலமாக உடலுக்கு வரும் நோய்களை ஆங்கிலத்தில் Psychosomatic diseases என்று அழைக்கின்றனர். 

நாவை கட்டுப்படுத்தாமல் அதிகப்படியான சுவையை உணர வைப்பதனால் எவ்வாறு பல பிரச்சனைகள் வருகிறதோ அதுபோலவே செரிமானத்திற்கு பின்பு உடலுக்கு கொடுக்க வேண்டிய சுவையை சரியாக கொடுக்காமல் இருந்தாலும் நோய்கள் ஏற்படும். இதற்கு ஒரே விடை மனக்கட்டுப்பாடு மட்டும்தான். தேவையற்ற உணவை அதிகமாக சாப்பிடாமல் இருக்க எப்படி மனக்கட்டுப்பாடு தேவையோ, சாப்பிட்ட பின்பு உணவை சரியான சுவைக்கு மாற்றுவதற்கும் மனக்கட்டுப்பாடு அவசியம். சுருக்கமாக சொல்லப்போனால் வாழ்வின் மொத்த சுவையும் உங்கள் மனதில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதனை முழுமையாக கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

கடந்த ஐந்து பகுதிகளாக கூறிவந்த சுவை அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -