இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரத்யேகமாக ஒரேயொரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் தன்னுடைய முகத்தை மட்டுமே அவனால் காணமுடியும் என்ற வரையறை இருந்தால், அவன் எவ்வளவு பத்திரமாக அக்கண்ணாடியை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கண்ணாடியின் மேல் தூசி படிந்தால் ஒருமுறை மட்டுமே துடைத்துவிட்டு சந்தோஷப்படமுடியாது. தொடர்ந்து தினமும் துடைத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் முகம் பார்க்க முடியாமல் போய் ஒரு நாள் நமக்கு நம் முகமே மறந்துவிடுமல்லவா. அப்படித்தான் ஆகிவிட்டது நம் எல்லோருடைய நிலையும். மனம் என்ற கண்ணாடியை தினமும் துடைக்க மறந்ததோடல்லாமல், மேலும் மேலும் குப்பைகளைக்கொட்டி நாம் யார் என்கிற அடையாளத்தையே அடியோடு புதைத்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பழுப்பேறி பிரதிபலிக்கும் தன்மையையே இழந்துவிட்ட நம் கண்ணாடியை தேய்த்து சுத்தம் செய்யும் ஒரு சிறு முயற்சிதான் இந்தத் தொடர்.
கடந்த சில மாதங்களாக, பரபரப்பான மனித வாழ்க்கை நாலு சுவர்களுக்குள் மொத்தமாக முடங்கிவிட்டது. எப்போதும் எதையாவது செய்தே பழக்கப்பட்ட மனிதர்கள் எதையும் செய்ய முடியாமல் தவித்தார்கள். ஏன் இந்தத் தவிப்பு..? வெளியே எதை நோக்கி ஓடவேண்டுமென்று தோன்றுகிறது..? காரணம் நம்முடன் நாம் இருப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதுவரை நாம் நம்முடனே தனிமையில் இருந்து பழக்கப்பட்டதில்லை. போர் அடிக்கிறது, பொழுதுபோகவில்லை இதைச் சொல்லாத ஆட்களே இருக்கமாட்டார்கள். மாட மாளிகையாக இருந்தாலும் சரி, இயற்கை கொஞ்சும் மலையடிவாரம் என்றாலும் சரி, தனிமையில் இருக்கச் சொன்னால் ஒரு நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்காது.
நம்மோடு நாமே இருக்க முடிவதில்லையே பிறரால் எப்படி இருக்க முடியும் என்று நாம் எப்போதும் யோசித்ததில்லை. நம்மை ஓரிடத்தில் நிற்க விடாமல் தொடர்ச்சியாக எது ஓடவைக்கிறது..? இதற்கு பதில் தேடினால் கடைசியாக நாம் வந்து நிற்கும் இடம் “மனம்”. நம் மனம் தான் இத்தனை போராட்டங்களை உருவாக்குகிறது. இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று பிரயோஜனம் இருக்கிறதோ இல்லையோ எதையாவது செய்ய நம்மை தொடர்ந்து உந்தித் தள்ளுகிறது இந்த மனம். விடாமல் தொடர்ச்சியாக ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது.
உடல் சோர்வடைந்தால் நாம் தூக்கம் என்ற ஒன்றால் மீண்டும் புத்துணர்ச்சி பெறுகிறோம். ஆனால் உள்ளம், நாம் பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதற்கு எவ்விதமான ஓய்வும் கொடுக்க நாம் முயற்சித்ததே இல்லை. தூக்கத்தில்கூட மனம் தொடர்ந்து செயல்பட்டு கனவுகளாக வெளிப்படுகிறது. இவ்வாறு 24 மணிநேரமும் செயல்படும் மனம் சோர்வடைகிறது. அந்த மனச் சோர்வு மனிதர்களாலும், சூழ்நிலைகளாலும், பொருட்களாலும் ஏற்படுவதாக தவறாக கருதிக்கொண்டு நாம் சுற்றத்தை மாற்றவே முயற்சித்து தொடர்ந்து தோல்வியடைகிறோம். ஏனென்றால் புதிய இடத்திலும் அதே சோர்வுடைய மனதோடுதான் நாம் அணுகப்போகிறோம்.
சிறிது நாட்களில் அதுவும் பழகி நமக்கு “போர்” அடிக்கும். இப்படித்தான் மனிதன் தொடர்ந்து தான் வாழும் சூழ்நிலைகளை நிலையில்லாமல் மாற்றிக்கொண்டே சென்று இறுதியில் நிறைவில்லாமலே வாழ்ந்து சாகிறான். அவன் தேடல் எப்போதும் வெளிப்புறமாகவே இருப்பதால்தான் பிரச்சனை. கண்களுக்கு தெரிவது நன்றாக இருக்க வேண்டுமென்றால், கண்களுக்கு தெரியாதது நன்றாக இருக்க வேண்டும். ஒரு மரம் நன்றாக பூத்துக்குலுங்குகிறது என்றால், கண்களுக்குத் தெரியாத அதன் வேர் நன்றாக இருப்பதால்தான் முடிகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிவி செல்போன் எடுத்துக்கொண்டாலும் கூட, வெளியே அது நன்றாக வேலை செய்யவேண்டுமென்றால் அதன் உள்ளே இருக்கும் எத்தனையோ சிறு பாகங்கள் நன்றாக இயங்கவேண்டும். ஒரு இயந்திரத்திற்கே இந்த லாஜிக் பொருந்துமென்றால், மனிதன் மட்டும் விதிவிலக்கா என்ன..? கண்ணுக்குத் தெரியும் மனிதன் தன்னுடைய வாழ்க்கையை நன்றாக முழுமையாக வாழவேண்டுமென்றால், அதற்கு கண்ணுக்குத் தெரியாத அவனுடைய மனம் நன்றாக இருக்க வேண்டும். மரம் சரியாக பூக்கவில்லையென்றால் வேர்களை கவனியுங்கள். வேர்களை எவ்வாறு கவனிப்பது…?
-தொடரும்
மனம் என்னும் கண்ணாடி அழுக்காகமல் பாதுக்காத்து சுத்தமாக வைத்திருக்க வந்திருக்கும் அழுக்கு கண்ணாடிக்கு வாழ்த்துகள்…
மிக்க நன்றி திரு.ஜெயக்குமார்.