அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல

நூலாசிரியர் : ச. மாடசாமி

- Advertisement -

ஆசிரியர் : ச. மாடசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை: ₹70

ச. மாடசாமி, ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வகுப்பறை, தொழிற்சங்கம், அறிவொளி இயக்கம், மனித உரிமைக் கல்வி எனப் பல தளங்களில் உழைத்தவர். இவருடைய பிற ஆக்கங்கள், எனக்குரிய இடம் எங்கே, சிவப்பு பால் பாய்ண்ட் பேனா, போயிட்டு வாங்க சார், குழந்தைகளின் நூறு மொழிகள், தெருவிளக்கும் மரத்தடியும், ஆசிரிய முகமூடி அகற்றி ஆகியன.

வகுப்பறைகளில் சுதந்திரமான உரையாடல் வெளி வேண்டும் என்று தொடர்ந்து முழங்கி வருபவர் ச.மாடசாமி. ” ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஸ்டேண்ட் போட்டு சைக்கிள் ஓட்ட சொல்லித் தருகிறார்கள். மாறாக, அவனை சைக்கிள் ஓட்டச் சொல்லி, அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு உடன் ஓடிக் கொண்டே சொல்லித் தருபவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும். ” என்று கூறியவர்.

இந்தச் சிறிய நூல் மாடசாமி பல இதழ்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் ஒரு நேர்காணலின் தொகுப்பு. பெரும்பாலும் மாற்று வகுப்பறை குறித்து விவாதிப்பவை.

அன்பென்பது மந்திரம் அல்ல என்கிற கட்டுரையில், இன்று வணிகம் நடக்கும் இடங்களில் கனிவு என்கிற போர்வையில் காசு பறிக்கும் வேலை நடப்பதைச் சுட்டிக் காட்டும் பேராசிரியர், இது பள்ளிக் கூடத்தில் இருந்து தான் தொடங்குகிறது என்கிறார். அறிவைப் பணமாக்கும் தந்திரங்கள் அங்கே தான் கற்றுத் தரப்படுகின்றன. காரியம் நகர்த்தும் தந்திரங்களில் ஒன்றாக அன்பு இருப்பதும் அதற்கு ஒரு வடிவம் தந்ததும் பள்ளிகள் தான் எனச் சாடுகிறார்.

அப்பாவியா? முட்டாளா? கட்டுரையில், அப்பாவிகளை ஏன் முட்டாள்கள் என்று சொல்ல வேண்டும்? மறைக்காமல் உண்மை பேசுகிறவன் முட்டாளா? பிறர் சொல்வதை உண்மை என நம்புபவன் முட்டாளா? இரக்கப்படுபவன் முட்டாளா? சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பவன் முட்டாளா? அப்படியானால் சூழ்ச்சி தான் இந்தச் சமூகத்தின் அடையாளமா? என சமூகத்தின் மனோபாவங்கள், மதிப்பீடுகள் மீதான கேள்விகளை அழுத்தமாக முன்வைக்கிறார்.

2019 கல்விக் கொள்கை பற்றியும் தனது விரிவான பார்வையை எழுதியுள்ளார். இதற்கு முன் வந்த பல கல்விக் கொள்கைகளை மேற்கோள் காட்டும் அவர் ஒரு கடினமான காலத்தின் முன்னறிவிப்பாக வந்திருக்கிறது இக் கல்விக் கொள்கை என்று வருத்தம் கொள்கிறார்.

கடைசி மைல்கள் கடினமானவை என்கிற கட்டுரையில், பணி ஓய்விற்கு பின் முதியவர்களின் மனப்பாங்கில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசுகிறார். எல்லோரும் கூறுவது போல் வயதானால் துறவு மனப்பான்மையோடு இருப்பதை அவர் எதிர்க்கிறார். வயோதிகம் படரப் படர, விலகல் அல்ல ஒட்டுதலே விரும்பத்தக்க தீர்வு. ஒடுங்குதல் அல்ல விரிதலே மகிழ்ச்சி என்கிற முற்றிலும் புதிய கருத்தை முன்வைக்கிறார்.

அவரது நேர்காணலில், சிறு வயதில் சமாதானத்தோடும் கோழைத்தனத்தோடும் இருந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த தான் ஒரு போராட்டக்காரனாக உருவெடுத்த கதையை சுவையாக கூறியுள்ளார்.

படிக்க படிக்க நம்முள் பல புதிய சிந்தனைகள் பாய்ச்ச வல்ல கட்டுரைகள் புத்தகம் முழுவதும் இருக்கின்றன. இலகுவான மொழியில் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -