அற்றது பற்றெனில்

கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி

- Advertisement -

“அற்றது பற்றெனில் உற்றது வீடு” எனும் நம்மாழ்வாரின் வரிகளிலிருந்து தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்திரா பார்த்தசாரதி, கதை முழுவதும் ஒரு வீட்டிற்கும் அதனைச் சார்ந்தோருக்குமான பற்றைப் பற்றியே பேசுகிறார்.

சபேசன் தன் பரம்பரைச் சொத்தான வீட்டை விற்க டெல்லியில் இருந்து கும்பகோணம் வருகிறார். கும்பகோணத்தில் அந்த வீடு ஒரு வயதான தம்பதியினருக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. பாட்டி நீலாம்பிகைக்கு எண்பத்திரண்டு தாத்தா சங்கரய்யருக்கு எண்பத்தெட்டு. பாட்டிக்குத் தாத்தாவையும் தாத்தாவுக்குப் பாட்டியையும் தவிர உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. கிட்டத்தட்ட வாழ்வின் விளிம்பை எட்டிவிட்டவர்களைக் காலி செய்து அந்த வீட்டை விற்றுவர வேண்டிய பெரும் தர்மசங்கடத்துடன் சபேசன் கும்பகோண இரயில் நிலையத்தில் இறங்குகிறார்.

எத்தனையோ முறை வந்திறங்கிய அதே இரயில் நிலையம் தானென்றாலும் இத்தனை நாள்களில் இல்லாத ஒரு தயக்கம். தடுமாற்றம். சபேசனின் நினைவலைகள் நிகழ்காலம் கடந்தகாலம் எதிர்காலம் என பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நினைவலைகளில் அவரின் மனைவி வருகிறார், அவர்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாமல் இருக்கும் வீட்டை விற்று வரச் சொல்கிறார். நண்பர்கள் வருகிறார்கள். ‘முட்டாளாய் இருக்காதே. டெல்லியில் நல்ல வீடு வாங்கும் வாய்ப்பொன்று வருகிறது விட்டுவிடாதே’ என்கிறார்கள்.

மனித மனம் எப்போதும் வாழ்க்கையின் நிதர்சனத்தை மட்டுமே சொல்வதில்லை அது அவ்வப்போது மனித மனமாக தன் சுயத்தில் ஒளிந்திருக்கும் தர்ம சிந்தனைகளையும் எடுத்துக்காட்டும். நினைவலைகளின் ஊடே சபேசனின் காலம்சென்ற தந்தை வருகிறார். முப்பது வருடங்களுக்கு முன் அவர்தான் வீட்டை இந்தத் தம்பதியினருக்கு ஐம்பது ரூபாய் வாடகைக்கு விட்டவர். தந்தையின் ஒரு சொல்லிற்காக இப்போது வரை வாடகையை ஏற்றாமல் காலி செய்யச்சொல்லாமலும் இருந்தார் சபேசன். சபேசன் மகளின் கல்யாணத்தின் போது கூட தன் ‘பிராவிடன்ட் ஃபண்ட்’ பணத்தை எடுத்துப் பண நெருக்கடியைச் சமாளித்திருக்கிறார்.

இரயில் நிலையத்திலிருந்து சாரங்கபாணி சன்னதித் தெருவில் இருக்கும் வீட்டிற்கு வந்திறங்கும்போது நினைவலைகள் ஓய்ந்திருந்தன. அதன் பின் நிகழும் எதார்த்தமான உரையாடல்களில் அந்த வயதான தம்பதியினர் சபேசன் மீதும் இவர் அவர்கள் மீதும் வைத்திருக்கும் அன்பு நம்மை உருக்கிவிடுகிறது.

கதை முழுவதுமே நம்மை ஒரு கனத்த மனத்துடனேயே பயணப்படுத்துகிறது. கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் காட்சியில்லை. அடித்து விரட்டும் அடாவடித்தனங்கள் இல்லை. அழுதுவடியும் அழுகாச்சிகள் இல்லை. அவரவர் இயல்பிலிருந்து இம்மியளவும் மாறாமல் அப்படியே நமக்கு அவர்களின் உணர்வுகளைக் கடத்துகிறார்கள். இந்திராவின் விவரணைகளில் கும்பகோணமும் கதை மாந்தர்களும் நம் முன்னே உலாவிக் கதையை நிகழ்த்துகிறார்கள்.

என்ன தான் சபேசன் நல்லவராக இருந்தாலும் அவர் அந்தப் பெரியவர்களை வீட்டை விட்டு அனுப்பப்போகிறாரே என்று படித்து முடிக்கும் வரை ஒருவிதப் பதற்றத்திலேயே நம்மை வைத்திருக்கிறார் இந்திரா. ‘அடப்பாவமே இந்தப் பாட்டி இப்படிப் பண்ணியிருக்கிறாரே?’ என்றொரு திருப்பமும். வீட்டை வாங்கும் ஹமீதை வைத்து இன்னொரு திருப்பமுமாக கதை அதன் போக்கில் நம் மனதில் மகிழ்ச்சி மலர முடிகிறது.

வீடுபேறடைய காத்திருக்கும் தம்பதியினரை சபேசனின் வீட்டில் வைத்து, படிப்பவர்கள் மனதிற்குள் ஒளிந்திருக்கும் மனிதாபிமானத்தை வெளிக்கிளருகிறது இந்திராவின் அற்றது பற்றெனில்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -