பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 14

ஒரு நந்தவனப் பூதானே… புது சந்தனமும் நீதானே..!

- Advertisement -

வாடிப்போன வான்பிறைக்கு ஆறுதல் சொல்லித் தேற்றச் செல்கிறாரோ எஸ்.பி.பி? என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும். பாடும்நிலா தேற்றினால் பால்நிலா கேட்காதா என்ன! 

இன்பமோ துன்பமோ எதுவானாலும் அதைப் பகிர்ந்துகொள்ள கவிஞர் பெருமக்கள் சட்டென துணைக்கழைப்பது நிலாவைத்தான்.. ஆனால் அந்த நிலாவுக்கே ஏதோவொரு கவலை இருக்கிறது என்றால் அதை யார் சரிசெய்வது? இதோ நானே சரிசெய்கிறேன் என்று பாடும்நிலா சொல்லிவிட்டுப் பாடத் தொடங்குகிறார்.

**** மேகம் தான் நிலவ மூடுமா

மவுசு தான் குறையுமா? ****

என்று கேள்வி கேட்டு ஆறுதல் சொல்கிறார்.. சிற்றூர்ப் பின்னணியில் அமைந்த படத்தின் பாட்டென்பதால் இயக்குநரும் பாடலாசிரியருமான ஆர்.வி.உதயகுமார் பேச்சுவழக்கு மொழியிலேயே பாடலை எழுதியிருக்கிறார். பாடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்த நம் எஸ்.பி.பிக்கு எந்த மொழிவழக்காக இருந்தாலென்ன? இலகுவாகப் பாடிவிடுவார்.

***** கொலுசு தான் மௌனமாகுமா

மனசு தான் பேசுமா ****

என்று நாயகி பாடியதற்குப் பதிலாகத்தான் மேற்சொன்ன வரிகளைப் பாடுகிறார் எஸ்.பி.பி.

கொலுசு பேசாமல் இருக்குமா? கொலுசின் மொழியே சிணுங்கல்தானே. நாயகியின் கொலுசானது பேசிக்கொண்டே இருப்பதால் அந்த ஒலியில் அவளின் மனம் கிசுகிசுவென்று மெல்ல பேசுவது நாயகனுக்குக் கேட்கவில்லை என்று நாயகி வருந்திக் கூறுகிறாள்.  

அடடா .. இதுதான் உனது கவலையா? என்னதான் மேகம் மூடிமறைத்தாலும் நிலாவினை நிலையாய் மறைத்திட முடியுமா? அதுபோலத்தான் கொலுசொலி எத்தனை பெரிதாய் இருந்தாலும் உன் மனம் பேசுவது எனக்கு கேட்காமலிருக்குமா? என்று நாயகியைத் தேற்றுவதாக அமைந்த வரிகளை எஸ்.பி.பியின் குரலில் கேட்கும்போது ஆயிரம் கொலுசொலிகள் இணைந்து கேட்பதைப்போல் இனிமையாக இருக்கிறது..

****வாக்கபட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசவே**** – பொதுவாக மொழியினை இரண்டு வகையாகப் பிரித்து அறியலாம்.. சிற்றூர்களில் பேசும் மொழிவழக்கு.. நகர்ப்புறங்களில் பேசும் மொழிவழக்கு. சிற்றூர்களில் பேசும் மொழிவழக்கானது பல அரிய தொன்மையான சொற்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். நகர்ப்புறங்களில் நாகரிகம் என்ற பெயரில் மொழியினை வடிகட்டி வேற்றுமொழியோடு கலந்துகட்டிப் பேசத் தொடங்கிவிட்டனர். அப்படியொரு மண்மணம் வீசும் சொல்தான் வாக்கப்படுதல் என்ற சொல்லும். வாழ்க்கைப்படுதல் என்ற சொல்தான் மருவி வாக்கப்படுதல் என்றாகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எந்தச் சொல்லாயிருந்தாலும் அதை முழுமையாய் உள்வாங்கி அதன் பொருளை அறிந்து பாடும் சூழலையும் உணர்ந்து பாடினால் மட்டுமே அப்பாடல் கேட்பவர்க்கும் அப்பாடலின் தன்மையைக் கடத்தமுடியும். அப்போது பாடத்தொடங்கிய பாடகர்கள் எல்லோருமே அந்தவொரு ஈடுபாட்டுடன்தாம் பாடினர்…

*****காலிலே போட்ட மிஞ்சி தான்

காதுல பேசுதே***** —

என்று இரண்டாம் சரணத்தில் கொஞ்சலுடன் எஸ்.பி.பி தொடங்க அதற்குப்பதிலாக

கழுத்துல போட்ட தாலி தான்

காவியம் பாடுதே –

என்று பெண்குரல் ஒலிக்கிறது. மெட்டி என்ற சொல் நிறைய பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.. ஆனால் இங்கே கவிஞர் மிஞ்சி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது அவரது வட்டார வழக்குச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற தாகத்தையும் மற்றவர்களிலிருந்து நாம் வேறுபட்டு நின்று மக்களை ஈர்க்கவேண்டும் என்ற தனித்துவத்தையும் காட்டுகிறது.

நெத்திச் சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டு வச்சதாரு நான் தானே – இவ்வரிகளை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழ்ந்து பார்க்க வேண்டும். வெறுமனே நெத்தியில் பொட்டு வைத்தது நான்தான் என்று சொல்லாமல் ஏன் நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில் என்று சொல்ல வேண்டும்? நெற்றியிலிருந்து உச்சிவகிடு எடுக்கும் இடத்தில் குங்குமம் வைப்பது வழக்கம். அது எல்லாப்பெண்களும் வைப்பதில்லை.. மணமான பெண்கள் மட்டுமே வைப்பர். நாயகி மணமானவள் என்பதை இவ்வரியில் குறிப்பால் உணர்த்துவதுபோல் கவிஞர் எழுதியிருக்கிறார். இப்போது பாதிபேர் நெற்றியில் பொட்டே வைப்பதில்லை.. மீதியிருப்பதில் பெரும்பாலானோர் ஒட்டு பொட்டு வைக்கின்றனர்.  அதையுமே புள்ளி அளவில்தான் ஒட்டிக்கொள்கின்றனர். காலமாற்றத்தில் மாறிப்போன ஒன்றாகிவிட்டது.

இப்போது நான்தானே உன் மணவாளன்.. மனவாளன் என்றெல்லாம் உரிமையைச்சொல்லி உறுதி செய்தபின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல  மெல்ல அடியெடுத்து வைக்கிறார்.

**** ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற ****

என்று சொற்களில் தாபமும் தாகமும் ஒன்றாய்க் கலந்து மூச்சுக்காற்றின் சூட்டைப் பூசி அனுப்புகிறார். அதிலும் சூடேற என்று சொல்லும்போதெல்லாம் குரல் உள்ளேபோய் ஏக்கம்தான் பேரலையாய் வெளியேறுகிறது என்பதுபோல பாடியிருப்பார்…

**** முத்து மணி மாலை

உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே ****

துரட்டிக்குச்சியால் சட்டென்று புளியங்காய் பறிப்பதுபோல.. மெதுவாகவும் அழுத்தமாகவும் சுற்றிய கயிற்றினைப் பட்டென்று சொடுக்கிப் பம்பரத்தைச் சுற்றுதல்போல “முத்துமணி மாலை” என்று பல்லவியின் முதல்வரியிலேயே தம் குரலால் சொடுக்கி நம் மனத்தை இழுத்து பாட்டில் விட்டுவிடுகிறார் எஸ்.பி.பி. அடுத்து என்ன என்னும் பேராவலைத் தூண்டிவிட்டு ” உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட ” என்று மயங்க வைக்கிறார்.

உடுத்தும் உடைக்கே வெட்கம் வந்தால் என்னவாகும்? அழகான வளமான கற்பனை இது.. சேலைக்கே வெட்கம் வந்துவிடுகிறதாம்.. ஆனாலும் அது ஒரேயடியாய்ப் போராடவில்லை. விட்டுவிட்டுப் போராடுகிறதாம்.. அந்த விடுதலுக்கு இடையே என்ன நிகழ்ந்திருக்கும்? வேறென்ன.. ஆசை வந்து நுழைந்திருக்கும்! ஆசை குறுக்கே வந்து வந்து போவதால் வெட்கம் விட்டு விட்டுப் போராடுகிறதாம்..

மனைவியைச் சந்தனம் என்று சொன்னால் கூட போதாதாம்.. புதுச்சந்தனம் என்றுதான் சொல்லவேண்டுமாம். புதிதாய் அரைத்த சந்தனத்தின் மணம் தூக்கலாக இருக்கும்.. அப்படியிருக்கும்போது வெறுமனே சந்தனம் என்று சொல்வது குறைத்து மதிப்பிடுவதுபோல என்று உருகியிருக்கிறார் கவிஞர். கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் பிணைப்பினை இலைமறை காயாக கவித்துவமாய்ச் சொல்லும்போதுதான் எத்துணை பேரழகாய் இருக்கிறது! பாடல்களில் அடுக்குத்தொடரைப் பயன்படுத்தும்போது வரிகளின் வனப்பு கூடுதலாய் மிளிர்கிறது…

அடிதடி நடிப்பினில் ஊறிக்கிடந்த நடிகர் விஜயகாந்தை ” நீங்க சும்மா நடந்தா மட்டும் போதும்” என்று தோளில் கிடக்கும் துண்டுகூட அதிராமல் நடக்கவைத்து எடுத்த படம் சின்ன கவுண்டர். விஜயகாந்தின் படங்களில் முற்றிலும் மாறுபட்ட மாபெரும் வெற்றிப்படம் அது.

நடிகை சுகன்யா நடிகர் விஜயகாந்த் இணைந்து நடித்த இப்பாடலை நம் எஸ்.பி.பி, அவர் போற்றி வணங்குகின்ற பெரும்பாடகியான சுசீலாம்மாவுடன் இணைந்து பாடியிருப்பார்.

இசைஞானி இளையராஜாவின் இசைதான் இங்கேயும். பாட்டு தொடங்கும்போது செல்லச்சிணுங்கலாய் சிணுங்கும் இசைக்கு நாம் விரும்பி அடிமையாகி விடுவோம். விரல்கள் மட்டுமல்ல , விட்டால் இளையராஜாவின் நகக்கண்களில் இருந்தும்கூட இசை கசியும்போல..! ஓர் அழகான முத்துமணி மாலையைக் காஞ்சிப்பட்டு நூலில் கோத்தெடுக்கும் கலையைத் திறம்படவும் அழகாகவும் செய்வதில் இப்பாட்டில் இசைஞானிக்கு நிகர் அவர் மட்டுமே!

இளையராஜா-ஆர்.வி.உதயகுமார்-எஸ்.பி.பி என்ற முத்தமிழ்க்கூடலில் விளைந்த நன்முத்துதான் இந்த முத்துமணி மாலை பாடல்.

முத்துமணி மாலையோடு எஸ்.பி.பி எங்கே போகிறார்? யாருக்கேனும் பரிசளிக்கப் போகிறாரா? தெரியவில்லையே.. வானத்து நிலாவை வேறு பார்த்துக்கொண்டே போகிறார்.. விட்டால் நிலாவுக்கே போய்விடுவார்போலும்.. சரி என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். எஸ்.பி.பியையும் நாள்களையும் எண்ணிக்கொண்டே இருங்கள்.. செவ்வாயன்று ஓடோடிவந்து உங்களுக்கு விடை பகிர்கின்றேன்…

வானவில் உதயத்தில் நிலா விண்மீன்கள் நெய்யும் …!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

3 COMMENTS

    • பின்னூட்டம் அளித்தமைக்கு மகிழ்நன்றி. அடுத்த பாட்டு என்னவென்று கண்டுபிடிக்கவும்.

  1. அருமை.. இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம், ஆர் வி உதயகுமார்அவர்கள் முத்துமணி மாலையை கோர்த்திருக்கீறார்கள் என்பதையும் இவ்வளவு நேர்த்தியாக ஒரு வட்டார வழக்கை கையாண்டால் கவிதையாகும் என்பதையும் எளிமையாகவும் ரசிக்கும்படியாக மீண்டும் எடுத்துரைத்த “கவிதாயினி” பிரபா அவர்களுக்கு வாழ்த்துகள் ??

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -