ஆடிப் பட்டத்தில் விதைத்த வேர்க்கடலையை ஐப்பசியில் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். நிலத்திலிருந்து பிடுங்கிய செடிகளை தட்டிகளில் வாரி எடுத்து வந்து புளியமரத்தடியில் குவித்திருந்தார்கள். நாலைந்து பேர் உட்கார்ந்துக்கொண்டே குவிக்கப்பட்ட செடிகளை கையிலெடுத்து அதிலிருந்த கடலைக் காய்களைப் பிய்த்து தட்டிகளில் போட்டுக்கொண்டிருந்தார்கள். நிரம்பிய தட்டிகளை ஆம்பிளை ஆட்கள் எடுத்துக்கொண்டு போய் கொட்டாயின் உள்ளே கொட்டினார்கள். வழக்கமாக பறிக்கப்பட்ட காய்களை களத்தில் கொட்டி வெயிலில் காய வைப்பார்கள். பிறகு மூட்டை பிடித்து வியாபாரத்திற்கு போகும். நேற்றிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமாக இருப்பதால் களத்திற்கு கொண்டு போகாமல் காற்றோட்டமாக இருக்கும்படி கொட்டாயின் உள்ளே கொட்டினார்கள். பொழுது சாயத் தொடங்கியது. வேலையாட்கள் வீட்டுக்கு கிளம்ப தயாராகிகொண்டிருந்தார்கள். தமது சொந்த தோட்டத்து வேலை என்பதால் இன்னும் சிறிது நேரம் செய்துவிட்டு போகலாம் என்று பட்டு மட்டும் எழுந்திராமல் வேலை செய்துகொண்டே இருந்தாள்.
ஒன்னுக்கு ஒதுங்கிவிட்டு திரும்பிய பட்டுவின் ஓரகத்தி ஒலக்கி பட்டுவிடம் பேச்சு கொடுத்தாள்.
“ஆனது ஆச்சுடி.. இப்பிடியே எத்தனை மாசமா தான் மூஞ்சிய தூக்கி வச்சிருப்ப”
பட்டு லேசாக திரும்பி ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு கையிலெடுத்த செடியிலிருந்த கடலைக்காய்களை பிய்த்து தட்டியில் போட்டாள். பதிலேதும் பேசாமல் அடுத்த செடியை எடுத்தாள்.
கலகலன்னு பேசி ஊரையே சிரிக்க வைக்கிற பட்டு வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம் அவளது மொத்த சுபாவத்தையே மாற்றிவிட்டது.
பட்டுவிடம் எதிர்வசம் பேசுகிறவர்கள் தோற்று தான் போவார்கள். எந்த விஷயத்தைப் பற்றி அவளிடம் பேசினாலும் நையாண்டித்தனமாக சலிக்காமல் பேசுவாள். எதிர்தரப்பில் பேசுபவர்கள் கருத்து தவறு என்று தெரிந்தால் கடைசி வரை விட்டுகொடுக்காமல் பேசுவாள். தோட்டம் கொத்தும் போதும் பயிர் நடும் போதும் களை எடுக்கும் போதும் அவளது பேச்சு களைகட்டும். ஊர் பிரச்சினையிலிருந்து காமராசர் எம்ஜிஆர்ல ஆரம்பிச்சி கலைஞர் வரைக்கும் பேசுவாள். அவள் பேசும் பேச்சு கேட்பவர்களுக்கு இனிமையாக இருக்கும். இதற்காகவே தோட்ட வேலைக்கு ஆள் கூப்பிடுபவர்கள் பட்டு இருந்தால் நல்லா இருக்கும் என விரும்புவார்கள்.
பட்டுவும் அவளது கனவனும் இருக்கும் ஒன்றரை ஏக்கர் மேட்டு நிலத்தை வைத்துக்கொண்டு ரெண்டு பிள்ளைகளையும் வளர்க்க பெரும்பாடுபட்டார்கள். வானம் பார்த்த பூமி. மழை வந்தால் வேர்க்கடலை, பருத்தி, துவரை, அவரை என்று ஏதாவது போடுவார்கள். அந்த வருடம் மழை பொய்த்துவிட்டால் அவ்வளவு தான். சில வருடங்களில் விதைக்கும் போது மழை வரும். பிறகு ஒரு துளி மழை கூட வராது. போட்ட பயிர் காய்ந்துவிடும். ஏர் ஓட்டியது விதைத்த செலவு என்று அந்த வருடம் நஷ்டம்தான். தமது நிலத்தில் வேலை செய்யும் நாட்கள் போக மீதி நாட்களில் இருவருமே ஊரில் கிடைக்கும் வேறு வேலைகளுக்கு செல்வார்கள்.
கூலிக்கு வேலைக்கு போகின்ற காலம் மாறி குத்தகை பேசிகிட்டு வேலை செய்யற காலம் வந்துவிட்டது. குத்தகைக்கு செல்பவர்கள் குழுவாக இருப்பார்கள். அப்படியான ஒரு குழுவுக்கு பட்டுவும் ஒலக்கியும் தான் குத்தகை தொகையை பேசி முடிப்பார்கள். பட்டுவோடு வேலை செய்தால் அளுப்பும் தெரியாது. கணக்கு வழக்கும் சரியாக இருக்கும். எனவே ஊர் பெண்கள் பட்டு குழுவுடன் வேலைக்கு செல்வதை விரும்புவார்கள்.
காய்ச்ச காலத்துல எந்த வேலைன்னாலும் குறைஞ்ச கூலின்னாலும் சுளுவா ஆள் கிடைச்சிருவாங்க. மற்ற காலங்களில் கூலிக்கு ஆள் கிடைக்கிறது கொஞ்சம் கிராக்கிதான். குத்தகைக்கு என்றால் மட்டும் தான் ஆள் கிடைக்கும். கூலிக்கு ஆள் கிடைக்காத போது ஊரில் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களுக்குள்ளே ஈடாள் வேலை செய்துகொள்கிறார்கள்.
ஊரில் வேலையேயில்லாத நாட்களில் பெண்கள் காட்டுக்குப் போய் சுண்டைக்காய் அறுப்பது முருக்கன் இலை பறிப்பது சுக்கல் பெருக்குவது வேப்பங்கொட்டை பெருக்குவது என கிளம்பிவிடுவார்கள். அப்படித்தான் ஒரு நாள் காட்டிற்கு சென்றவர்கள் காய்ந்த சுள்ளிகளை கட்டி தலையில் சுமந்து கொண்டு வீடு திரும்பும்போது கார்டு வாட்ச்சர்கள் பிடித்துவிட்டார்கள். அவர்களுக்கும் பட்டுவுக்கும் சண்டை வந்துவிட்டது.
“காட்லந்து இதயெல்லாம் எடுத்துட்டு போவக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா”
“தெரியுந்தான். நாங்க இந்த சுக்கலை எடுத்துட்டு போல்ன்னா எங்க வூட்டு அடுப்பு எப்பிடி எரியும்!”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுமா”
“ஆமாமா.. இங்க அடுப்பெரிக்க சுக்கல் பெரிக்கிட்டு போறவங்கள புடிங்க. அந்தப்பக்கம் மரம்வெட்டிட்டு போறவங்கள வுட்ருங்க”
அவள் சந்தன மரத்தை குறிப்பாக சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டு உடன் வந்த பெண்கள் சிரித்துவிட்டனர். வாட்ச்சருக்கு கோபம் வந்து விட்டது. வேகமாக அருகில் வந்தவர் பட்டுவின் தலைக்கும் விறகு சுமைக்கும் நடுவில் துண்டை சுருட்டி வைத்திருந்த சீமாட்டை பிடித்து இழுத்துவிட்டார். சீமாடு தரையில் விழுந்தது. அப்போது விறகு கட்டு ஒலக்கியின் தலையில் இறங்கியது. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி வலியால் தலையில் இருந்த சுமையைக் கீழே போட்டுவிட்டாள். ரௌத்திரமானாள் பட்டு.
“பொம்பள மேல கை வைக்கிற. உம் பவுச்சி எங்களுக்கு தெரியாதா… ஊர்ல யாராச்சும் லைன் வுட்டு பன்னி உளுந்தா ரண்டு பங்கு கறியும் 100 ரூபாயும் வாங்கித் தின்ற நீ என் மேல கை வைக்கிறியா…. “
பட்டுவின் கோப பேச்சு வாட்ச்சருக்கு உள்ளூர ஒரு பயத்தை ஏற்படுத்திவிட்டது. அதை வெளிக்காட்டாமல்
“தேவல்லாத பேசாசம்மா. நான் நினைச்சா உங்க எல்லார் மேலயும் கேஸ போட்டு உள்ள தள்ளிருவேன். ஆமா”
“கேசா.. போடு. போட்டு பாரு. கேஸ் போட்டா உம்மேல தான் மொதல்ல போடணும். பேசினிருக்கும்போதே பொம்பள மேல கை வைக்கிற”
இப்படியாக அன்று அந்த காலத்து சைவ-வைணவ சண்டை மாதிரி கார்டு வாட்ச்சருடன் சண்டை போட்டு விட்டு வீடு திரும்பினாள் பட்டு. இப்படி வாய் பேசும் பட்டுவின் வாய் ஓய்ந்து நான்கு மாத காலமாகிறது.
நடிகர் சிவாஜி கணேசன் செத்த ரெண்டாம் நாளில் ஆடி பட்டத்தில் புருசன் ஓட்டும் ஏருக்கு பின்னால் கடலைக் கொட்டையை சால் விட்டு கொண்டிருந்தபோதுதான் அந்த செய்தி பட்டுவின் காதுக்கு எட்டியது.
அவசரமாக ஓடிவந்த ஓரகத்தியாள் ஒலக்கி தான் அந்த செய்தியை சொன்னாள். “மயில்வாணியை எங்கே தேடியும் காணவில்லை”என்று.
மயில்வாணி எங்கே போயிருப்பாள் என்று புரிந்துகொண்ட பட்டு கையிலிருந்த கொட்டை பாத்திரத்தை கீழே வைத்து விட்டு இரண்டு கைகளையும் தலைமேல் வைத்துக் கொண்டு அப்படியே புழுதியில் உட்கார்ந்து விட்டாள். “ஐயோ.. எந்தலையில மண்ண அள்ளி போட்டுட்டு போயிட்டாலே…”
“படுபாவி பையன்… இப்படி மோசம் பன்னிட்டானே.. எப்பிடித்தான் அவ மனச கெடுத்தானோ?” அழத் தொடங்கினாள் பட்டு.
அவளைத் தேற்றி ஒலக்கி தான் அன்று வீட்டிற்க்கு அழைத்து வந்தாள். இந்த நிகழ்வுக்கு பிறகு பட்டு யார் கூடவும் அதிகமா பேசுவதில்லை. இப்ப கொஞ்ச நாளாகத்தான் வேலை வெங்கடுன்னு வீட்டை விட்டு வெளியே வர தொடங்கியிருக்கிறாள்.
ஒலக்கி நேற்று அத்திப்பாடிக்கு சொந்தக்காரர்கள் கல்யாணத்திற்கு சென்றாள். அதே கல்யாணத்திற்கு எதிர்பாராத விதமாக பட்டுவின் மகள் மயில்வாணியும் வந்திருந்தாள். மயில்வாணியைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஒலக்கி அவளின் கையை பிடித்து கூட்டத்திலிருந்து விலகி தனியாக அழைத்துச் சென்றாள். பெண்களுக்கு பல நேரங்களில் ஆறுதலாக இருக்கும் ஒரே ஜீவனான அழுகை அப்போது மயில்வாணிக்கு வந்துவிட்டது. மயில்வாணி சிந்திய கண்ணீரானது அவளது உணர்வுகளை ஒலக்கிக்கும் கடத்தி விட்டது. ஒலக்கியும் அன்பின் மிகுதியால் அழத்தொடங்கிவிட்டாள்.
வாய் வார்த்தைகள் இன்றி இரண்டு இதயங்களும் அழுகை மொழியால் சிறிது நேரம் பேசிக்கொண்டன. அப்போது மௌனத்தை உடைத்த ஒலக்கி “மனசுல வர புண்ணும் ஒடம்புல வரப்புண்ணும் கால மருந்துல கரஞ்சி போய்டும்டி. கண்ண தொடச்சிக்க” என்று ஆறுதல் கூறினாள்.
அப்போது தமது கையில் மடித்து வைத்திருந்த பூப்போட்ட சிறிய வெள்ளைநிற கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மயில்வாணி. ஒலக்கியை தமது வீட்டுக்கு வர வேண்டும் என்று அழைத்தாள் . ஒலக்கி இன்னொரு நாள் வருவதாக சொல்லியும் விடுவதாக இல்லை. தூரத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கணவனை அழைத்த மயில்வாணி ஒலக்கியை சித்தி என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அவனும் ஒலக்கியை வீட்டுக்கு அழைத்தான். முதன்முறையாக அந்த புள்ளையாண்டான் ஒலக்கியிடம் பேசியதால் அவளுக்கு கூச்சமாக இருந்தது. அந்த பழைய நிகழ்வால் ஒலக்கியும் அவன்மீது கோபமாகத் தான் இருந்தாள். ஆனால் தற்போது அவன் பேசிய அந்த ஒற்றை பேச்சில் பழைய கோபம் எல்லாம் காணாமல் போய்விட்டிருந்தது.
மயில்வாணி வீட்டைவிட்டு வெளியேறி பிறகு அத்திப்பாடியில் தான் இருக்கிறாள் என்று தெரிந்தும் பட்டு வீட்டில் யாரும் போய் எட்டி கூட பார்க்கவில்லை. அப்போதிருந்த கோபத்தில் “எவ்வளவு சொல்லியும் ஓடுகாலி கழுதை ஓடிவிட்டாள்” என்று சொல்லி கைகழுவி விட்டார்கள். மயில்வாணியின் அண்ணன் ஒரு பிடிவாதக்காரன். இனி ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.
மயில்வாணி, சித்தியை வீட்டுக்கு வருமாறு மீண்டும் வற்புறுத்தி அழைத்தாள். மயில்வாணியுடன் அவளது வீட்டுக்கு சென்று வந்தால் பட்டுவின் குடும்பத்தினர் தன்னை தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்று தயங்கினாள் ஒலக்கி. பிறகு துணிந்தவளாய் ‘செல்லலாம்’ என முடிவெடுத்தாள்.
அத்திப்பாடியின் மேற்கே கொல்லைக்கொட்டாயில் இருந்தது மயில்வாணியின் வீடு. ஊரிலிருந்து பிரிந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் மூவரும் நடந்தார்கள். முதலில் மயில்வாணியின் கணவனும் பின்னே மயில்வாணியும் கடைசியாக ஒலக்கியுமாக நடந்தார்கள். வழிநெடுகிலும் மயில்வாணி தன் அம்மா அப்பா அண்ணனை பற்றியும் சினேகிதர்கள் சொந்தக்காரர்கள் பற்றியும் விசாரித்துக் கொண்டே நடந்தாள். என்னதான் தமக்கு பிடித்த வாழ்க்கையை தாமே அமைத்துக் கொண்டாலும் அப்பா அம்மா மீது பாசம் இல்லாமல் பிள்ளைகளுக்கு போய் விடுவதில்லை என ஒலக்கிக்கு தோன்றியது. ஒலக்கி மயில்வாணியுடன் பேசும்போது எச்சரிக்கையுடனே பேசினாள். ஊராரின் தூற்றலைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
தன் முன்னே செல்லும் மயில்வாணியின் தலையில் சூடியிருந்த முல்லைப்பூ வாசம் ஒலக்கியின் நாசிக்கு எட்டியது. அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசு நடந்தபோது எழுப்பிய ஜல் ஜல் என்ற ஒலி காதுக்கு இனிமையாக இருந்தது. கன்னங்கள் சற்று உப்பி உடல் சற்று பூசியிருக்கும் மயில்வாணியின் உடல் அழகு மெருகேறியிருப்பதைக் கண்டு உள்ளுக்குள் பூரித்தாள் ஒலக்கி. மயில்வாணி வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு ரூபாய் பணமோ ஒரு குண்டுமணி நகையோக் கூட உடன் எடுத்துச் செல்லவில்லை. இரண்டு ஜதை துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றதைப் பற்றிய நினைவுகள் ஒலக்கியின் மனதில் நிழலாடின.
வீட்டை அடைந்ததும் சமைக்க தொடங்கிவிட்டாள் மயில்வாணி. சோறு வடித்து கத்தரிக்காய் முருங்கைக்காய் போட்டு குழம்பு வைத்தாள். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து தாளித்தாள். மல்லி கொஞ்சம் தூக்கலாக போட்டு ரசம் வைத்தாள். வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலையை நறுக்கி அவற்றை கடலைமாவுடன் சேர்த்து நீர் விட்டு பிசைந்து போண்டாவிற்கு தயார்படுத்தினாள். பெரிய டின்னிலிருந்து கானாடிய கடலை எண்ணெயை வானலியில் ஊற்றினாள். போண்டா கடைசியில் சுட்டால் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும் எனக்கருதி அவற்றை அப்படியே விட்டுவிட்டு முந்தைய நாள் புரை போட்டு வைத்திருந்த எருமைத் தயிரை குண்டானில் ஊற்றி பிசைந்தாள். பிசைகையில் விரல்களுக்கு இடையே ப்ப்ச் என்று பீய்ச்சியடித்த தயிரானது அவளது நெற்றி மீதும் நெஞ்சின் மேலே சேலையில் இருந்த ரோஜா பூ மீதும் தெரித்தது.
திடீரென்று தெரித்ததால் கண்களை சடாரென மூடிக்கொண்டு பிசைந்த தயிரிலிருந்து கையை எடுத்துவிட்டு எதிர்ப்பக்கமாக திரும்பினாள். அதே சமயம் அவள் கணவனும் சமையல் கட்டுக்குள் நுழைந்தான்.
” அய்ய… என்னது” என்றவன் அவளை அப்படியே கட்டியணைத்து இருக்கினான்.
“ச்சி விடுங்க சித்தி வெளிய இருக்காங்க” என மெல்லிய குரலில் சிணுங்கி அவனது பிடியிலிருந்து உதும்பி வெளிப்பட்டாள். வலது கையில் ஒட்டியிருந்த தயிரை அவன் மூக்கின் மேல் பூசிவிட்டு வெளியே முகம் அளம்ப போனாள். திரும்பியவள் கணவனை சாப்பிட வாழை இலை அறுத்துக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டு போண்டா சுடப் போனாள்.
மதிய நேரமாகிவிட்டது. சாப்பிட எடுத்து வைத்தாள்.
“காலைலதான் கல்யாண வீட்ல விருந்து சாப்புட்டம். இப்பையும் எதுக்கு இவ்வளோ சமைச்சமா..” கடிந்து கொண்டாள் சித்தி. சாப்பிட்டுவிட்டு சில அறிவுரைகளைச் சொல்லி மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினாள் ஒலக்கி.
ஒலக்கி மயில்வாணியை சந்தித்ததையும் அவளுடன் வீடு வரைக்கும் சென்று வந்ததையும் பட்டுவிடம் தனியாக இருக்கும்போது சொல்லிவிடவேண்டும் என்று காலையிலிருந்து தக்க நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்தாள். வேலையாட்கள் எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். பட்டு தனியாக காய்களை பிய்த்துக் கொண்டிருந்தாள். ஒலக்கி அவளருகே உட்கார்ந்து காய்களை பிய்த்துக் கொண்டு பேச்சு கொடுத்தாள்.
பட்டு கோபப்பட்டாலும் சரி விசயத்தை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்த போது அவளது மூளை தகுந்த வார்த்தைகளைத் தேடியது. இருப்பினும் இந்த செய்தியை பட்டுவிடம் சொல்ல சிறிது தயக்கம் ஒலக்கிக்கு அடிமனதில் இருக்க தான்செய்தது.
“பட்டு ஏதாவது ஏடாகூடமாக கேட்டுவிட்டால்? நீ ஏன் அங்க போன ? நீ போய் திண்ணுட்டு வந்தத எங்கிட்ட ஏன் சொல்ற? என்று கேட்டுவிட்டால்!” பலவாறாக எண்ணங்கள் ஓடின.
அந்த பயம் கலந்த குழப்ப மனநிலையில் ஒலக்கிக்கு துணிவு மீண்டும் பிறந்துவிட்டது. பேசத்தொடங்கினாள்.
“அத்திப்பாடி கல்யாணத்துக்கு போன எடத்தில உம்மகள பார்த்தன்டி”
பட்டுவை உற்றுநோக்கி ஆழம் பார்த்தாள். உடனே பார்வையை விலக்கிக்கொண்டு பேச்சை தொடர்ந்தாள்.
“நல்லா இருக்காடி மயில்வாணி. சந்தோசமா இருக்கா… பழசையே நெனைச்சுட்டு பெத்த பொண்ணு மேல எத்தனை நாள்தான் பகம பாராட்டரது? ஆம்பளைங்களுக்கென்ன கௌரவம் அது இதுன்னு வீரப்பா பேசினு திரிவாங்க. நம்ம வவுத்துல பொறந்த புள்ளைங்கள நாம அப்படியே உட்ற முடியுமா? சின்ன வயசிலந்து நீங்க கொட்டுன பாசத்த, அவ ஒங்க மேல அப்படியே வச்சிருக்காடி. புள்ளைங்கள பெத்து வளக்கறது தான் எம்புட்டு கஷ்டம்னு நமக்கு தான் தெரியுமே. அவ வயித்துல புள்ள பூச்சினு ஒன்னு வரதுக்குள்ள வூட்டு ஆம்பளைங்க மனசை மாத்த பாருடி…” பேசிக்கொண்டே பட்டு மீது பார்வையை செலுத்தினாள் ஒலக்கி.
அப்போது அனிச்சையாக காய்களை பிய்த்து போட்டுக் கொண்டிருந்த பட்டுவின் கண்ணங்களில் வழிந்தோடிய கண்ணீர் மண்ணைத் தொட்டு உறவாடிக் கொண்டிருந்தது. பட்டுவின் மனமும் தான்.
************
நல்ல கதையாடல் தோழர்…
கதையின் காட்சிப்படுத்தல் சிறப்பாக இருக்கிறது. கதையினூடே கிராமத்து மக்களின் வாழ்வினை யதார்தமாக பதிவு செய்து போகிறது உங்கள் எழுத்து. இன்னும் கதையில் ஒரு அழுத்தமான திருப்பம் ,முடிவு இருந்திருந்தால்.. முதல் பரிசே வென்றிருக்கலாம்..வாழ்த்துகள்
கிராமபுறங்களில் இயல்பாக நடக்கும் நிகழ்ைவை கதையாக்கியிருப்பது சிறப்பு. பெற்றோருக்குத் ெதெரியாமல் திருமணம் புரிவதும் ெற்றோர்கள் ேசாமல் இருப்பதும் வழக்கமான ஒன்றுதான். ே பத்துடன் சிறிது காலம் கடந்தாலும் அகத்தில் உள்ள அன்பை அடைக்குந்தாள் இல்லை.
கதை அருமை.
நல்ல கதை தோழர்… பேரின்பராஜன் தோழர் சொன்னதை போல ஏதேனும் திருப்பம் வைத்திருந்தால் உண்மையில்
சிறப்பான கதையாக தேர்வாகியிருக்கும்…நல்ல எழுதும் நேர்த்தி உங்களுக்கு வாய்த்திருக்கிறது..தொடர்ந்து சிறப்பு செய்க???வாழ்த்துகள்?
சிறப்பு தோழர். கிராமத்து மண் வாசனையை கதையின் ஊடே ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. தாய் மகள் உறவு அருமை. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்
கிராமத்து வாசனை ரொம்ப நாள் ஆயிருச்சு இத மாதிரி கதை படிச்சு அருமையா இருந்தது ஒவ்வொரு கதாபாத்திரத்தோடு பேரு அழகா இருந்தது ஒரு அம்மா ஓட மனசுல ஏற்பட்ட வலியும் அது அழகா சொல்லி இருக்கீங்க ஒரு பெண் வேற இடத்துக்கு போயிருச்சுனா அவ நல்லா இருக்காளா எப்படி பார்ப்பாங்கன்னு அவளோட தோற்றத்தையும் பார்த்து கண்டுபிடிப்பாங்க அது அழகா சொல்லி இருக்கீங்க நாகரீகமான எழுத்து வடிவில் ஒரு கணவன் மனைவியோட அன்பு சொல்லி இருக்கீங்க முடிவும் சொல்லி இருந்திருக்கலாம் ரொம்ப ஆசையா இருந்துச்சு ஏமாற்றத்துடன் வாழ்த்துக்கள் தோழர்
அருமையான கதையாக்கம் தோழர் மனதுதுக்கு நெருடலாக இருந்தது
கிராமத்து சொல்லாடலும் அருமை
வாழ்த்துக்கள்
சிறப்பான சிறுகதை தோழர் கிராமத்து மண்வாசனை கதை முழுவதும் வீசுகிறது
கதையில் பயன்படுத்திய எதார்த்தமான வார்த்தைகள் படிப்பவர்களை கதையுடன் சேர்ந்து பயணிக்க வைக்கிறது ஒலக்கி மற்றும் பட்டுவிற்கு அருகே நம்மையும் கொண்டு சேர்த்து விடுகிறது சிறுகதை என்ற தலைப்பில் இருப்பதால் அதற்கேற்றவாறு சிறியதாகவே முடிந்திருக்கிறது
கதை படிக்கும்போதே காட்சிகள் ஒடியது என் மனதில். பட்டுவின் கண்ணத்தில் வழிந்தோடிய கண்ணீருக்கு அர்த்தம் என்னவோ?