சுஜாதா ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கி முதல் கதையை எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
-திருப்பாவை(27)
அன்று:
மார்கழி மாதம் என்றாலே அதிகாலை குளிருடன் சூடான கோயில் பிரசாதம் தான் எனக்கு ஞாபகம் வரும். எழுந்து கொள்வதற்கு சோம்பேறித்தனமாக இருந்தாலும் பெற்றோர்களின் வற்புறுத்தலால் ஒரு வழியாக எழுந்து குளித்து விடுவேன். மாதம் முழுவதும் இதே போல் ஓடினாலும் இதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் விதிவிலக்கு. அதுதான் மார்கழி 27 ஆம் நாள். அன்றைக்கு மட்டும் என்ன விதி விலக்கு என்று தானே கேட்கிறீர்கள்? அன்றைய திருப்பாவையில் ஆண்டாள் தாயார் கோவிந்தனுக்கு என்ன படைக்க வேண்டும் என்பதனை தெளிவாக கூறிவிட்டார். அதாவது நீரில் அரிசியை கொதிக்க விடாமல் பாலிலே கொதிக்க விட்டால் சற்று பாயாசம் போல் ஆகிவிடும். அதன்மேல் நாட்டுச்சக்கரை, ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற இன்ன பிற வஸ்துக்களையும் சேர்த்துவிட்டால் போதும். அடடா!! சொர்க்கத்தையே நேரில் பார்த்தது போன்ற சுவை. இதனை அக்கார அடிசில் என்பார்கள். ஆண்டாள் தாயார் அத்துடன் நிற்காமல் வேறு ஒரு குறிப்பையும் சொல்லி விடுகிறார். அந்த பால் சோற்றை கையில் எடுக்கும் பொழுது அதில் இருக்கும் நெய் வழிந்து முழங்கை வழியாக சொட்ட வேண்டுமாம்! அந்த மாதிரி ஒரு உணவிற்கு உலகில் ஈடு இணை ஏதாவது இருக்க முடியுமா சொல்லுங்கள். அன்று வீடு, கோவில், பஜனை மடம் என்று அனைத்து இடங்களிலும் சகட்டுமேனிக்கு சக்கரை பொங்கல் மட்டும்தான். ஆண்டாள் தாயார் கூறும் பக்திச் சுவையில் திளைக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை என்றாலும் அதிகாலை தொடங்கி நாள் முழுவதும் அக்கார அடிசிலை ஒரு கை பார்த்து விடுவேன்.
பள்ளிக் காலம் முடிந்த பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் ஒரு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆண்டாள் தாயார் அருகிலேயே சென்றுவிட்டேன். மார்கழி இருபத்தி ஏழாம் நாள் எப்பாடுபட்டாவது அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள் கோவிலில் ஆஜராகி விடுவேன். சில சமயம் எனது விடுதி நண்பர்களை வேறு இழுத்துக்கொண்டு வந்து விடுவேன். கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ளம். மார்கழி மாதம் ஆன பின்பு கூட அடை மழை பெய்யும் கார் காலமாக இருந்தது. மழையே பார்க்காத எங்கள் ஊரில் கூட தெருவெல்லாம் வெள்ளக் காடானது. சாதாரண குளிர் காலத்திலேயே தூக்கம் அருமையாக வரும். இதில் குளிர் மழை இரண்டும் கலந்தால் சொல்லவும் வேண்டுமா? மார்கழி 27 ஆம் நாள் காலை 4 மணிக்கு அடைமழை. கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்ததால் அடுத்த வருடம் சென்னைக்கோ பெங்களூருக்கோ வேலை தேடி சென்று விடுவோம். ஆண்டாள் கோயிலுக்கு போக முடியாது என்ற தவிப்பு வேறு. எப்படியோ கஷ்டப்பட்டு எழுந்து மழையையும் பொருட்படுத்தாமல் நானும் என் அறை நண்பன் பாபுவும் ஆண்டாள் கோவிலுக்கு போய் சேரும் போது அஞ்சரை மணி ஆகிவிட்டது. கோவிலில் சரியான கூட்டம். எப்படியோ வரிசையில் நின்று முண்டியடித்துக்கொண்டு கையில் அக்கார அடிசில் உடன் வெளியே வரும்பொழுது மணி 7 ஆகிவிட்டது. மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் சின்னத்தம்பி டிக்கெட் வாங்கிக்கொண்டு நுழையும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருந்தார்களோ அதே போல் நாங்கள் இருவரும் இருந்தோம். ஆனால் கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது எங்கள் தோழன் முத்து அதனை பார்த்து விட்டான்.
இங்கே முத்துவைப் பற்றி சொல்லியாக வேண்டும். அவன் வீடு ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் இருந்தது. நாங்கள் ஒரே வகுப்பில் படிக்கும் கடைசி பெஞ்ச் மாணவர்கள். நாள் முழுவதும் கல்லூரியில் ஒன்றாக அரட்டை அடித்தாலும் பல நாட்கள் கல்லூரி முடிந்தவுடன் சாயங்காலம் அவனது வீட்டிற்கு நான், குமார் மற்றும் சில கடைசி பெஞ்ச் நண்பர்கள் ஒன்றாக செல்வோம். அவன் வீட்டிற்கு செல்வதற்கு பல்வேறு சாக்குகளை கண்டுபிடித்தாலும் உண்மையான காரணம் ஒன்றே ஒன்றுதான். விடுதியில் தங்கியிருக்கும் பிள்ளைகள் என்று எங்கள் மேல் கரிசனம் கொண்டு முத்துவின் அம்மா எங்களுக்கு சூடாக சமைத்து போடுவார். ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவதைகளுக்கு பஞ்சமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாங்களும் முத்து வீட்டில் வஞ்சனையில்லாமல் சாப்பிட்டுவிட்டு தான் வருவோம். அவன் வீட்டில் சாப்பிட்டது போக மிச்ச குறைக்கு புளியமரத்து கடையில் பால்கோவா பால்அல்வா மற்றும் இன்னபிற பலகாரங்கள் வேறு. நாங்கள் சாதாரணமாகவே நன்றாக புசிப்போம் என்று முத்துவுக்கு தெரிந்தாலும் அன்று அதிகாலையில் வெற்றிப் புன்னகையோடு கோயிலிலிருந்து அக்காரவடிசல் உடன் வெளி வருவதை பார்த்த முத்து ஒருகணம் அரண்டு போய் விட்டான். பின்பு வகுப்பில் அதனை கூறிக்கொண்டே எங்களை வைத்து சில சீண்டலும் அரங்கேறியது.
இன்று:
கல்லூரியிலிருந்து எப்படியோ தேர்ச்சி அடைந்து பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் சொந்த ஊரில் மழை பெய்தால் அதனுடன் சேர்ந்து ஒரு புழுக்கமும் வியர்வையும் உண்டாகும். ஆனால் பெங்களூரில் அப்படி அல்ல. மழை பெய்தாலே உடனடியாக குளிர்ந்து விடும். கல்லூரி காலம் வரை மழையையும் குளிரையும் எப்பொழுதாவது தான் ஒன்றாக பார்ப்பேன். ஆனால் பெங்களூரில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 மாதங்களாவது அவ்வாறுதான் இருக்கும். இனிப்பும் கொழுப்பும் அதிகமாக சாப்பிட்டால் நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கு கொடுக்கப்படும் டயட்டீஷியன் செக்கப் முடிவில் ரத்த மாதிரி காட்டிக்கொடுத்துவிடும். ஹெல்த் செக்கப் எனும் பெயரில் நான் வேலை பார்க்கும் நிறுவனம் எனது உடலை உளவு பார்ப்பது தெரிந்தாலும் அதற்கு உட்பட்டே ஆக வேண்டும். அதனைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கிளைன்ட் மீட்டிங் என்னும் பெயரில் ஐந்து நட்சத்திர உணவகத்தில் நடக்கும் கொடுமைதான் இதில் உச்சகட்டம்.
நாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தகவல்கள் எதுவும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக உணவகத்தில் உள்ள ஒரு தனியறையில் எங்களுக்கு உணவு வழங்கப்படும். எங்களுக்கு என்று பிரத்தியேகமாக ஒரு சமையல் நிபுணர் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் மெனு கார்டில் உள்ள உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று விளக்கமாக எடுத்துரைப்பார். Cooking , Steaming போன்ற எளிமையான வார்த்தைகள் மட்டுமே தெரிந்த எனக்கு Sauté, blanch போன்ற பல்வேறு புதிய சமைக்கும் முறையைப் பற்றி அவர் விளக்கமாகக் கூறுவார். அரைவேக்காடு சமையல் என்பதன் நவீன வடிவம் தான் அது என்று புரிவதற்கு எனக்கு ரொம்ப காலம் ஆனது. அதுவும் முதல் முறை சாப்பிடும் பொழுது மெனு கார்டில் உள்ள எந்த ஒரு சாப்பாடும் எனக்கு புரியவே இல்லை. அதுவுமில்லாமல் நடுநடுவே பல பிராணிகளின் பெயர்களும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. நான் சுத்த சைவம்.
ஒவ்வொரு உணவாக விளக்கம் கேட்டால் சமையல் நிபுணர் மிகப்பெரும் பாடம் எடுத்து விடுவாரே என்ற பயத்தில் பேசாமல் ஒரு சாலட்(Salad) ஆர்டர் செய்து விடலாம் என்று முதலில் கண்ணில் பட்ட ஒரு சாலட்டை ஆர்டர் செய்தேன். ஆனால் என் கெட்ட நேரம் நான் முதலில் பார்த்தது Tuna salad எனும் பெயரைத்தான். Tuna என்றால் ஒரு வகை மீன் என்று அப்போது எனக்குத் தெரியாது. பின்பு அதனை மாற்றி வேறு கொண்டு வர சொல்வதற்குள் பசி கண்ணை பிடிங்கி விட்டது. வேறு உணவை ஆர்டர் செய்வதற்கு கூட ஒரே பயம். எங்கே மீண்டும் ஒரு பெயர் தெரியாத பிராணியை ஆர்டர் செய்து விடுவோம் என்று பயத்தில் சமையல் நிபுணரிடம் சைவ சாப்பாடு வேண்டும் என்று கேட்டுவிட்டேன். அவர் சுட்டிக் காட்டிய மெனுவை பார்த்தால் Artichoke heart platter என்று எழுதி இருந்தது. ஐயையோ ஏதோ ஒரு விலங்கின் இதயத்தைப் பிடித்துக் கொண்டு வருவார்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு சிறிய வகை பிரெஞ்சு முட்டைகோஸ் தாவரமாம்! ஒருவழியாக அதனை ஆர்டர் செய்து பார்த்தால் பல அரைவேக்காட்டு காய்கறிகளை ஒரு கனமான மரக்தட்டில் ஆங்காங்கே சிதறவிட்டு கொடுத்தார்கள். கிளையன்ட் முன்பாக அதனை சிரித்துக்கொண்டே சாப்பிட்டு வேறு ஆக வேண்டும். ஒருவழியாக அதனை முடித்துக் கொண்டு எப்படியோ வெளியே வந்தால் குளிரும் மழையும் வாட்டியது. மனம் முழுக்க நான் கல்லூரியில் சாப்பிட்ட அக்கார அடிசில் ஞாபகம் தான்.
என்ன தான் உணவு கட்டுப்பாடு என்று ஒன்று இருந்தாலும் பண்டிகை காலத்தில் கடவுளின் பிரசாதம் என்று கூறிவிட்டு எல்லா இனிப்பையும் கொழுப்பையும் நன்றாக சாப்பிட்டு விடுவேன். அதுவும் குறிப்பாக மார்கழி இருபத்தி ஏழாம் நாள் வந்தால் இறைச்சிந்தனை எனும் பேரின்பம் எவ்வாறு இருக்கும் என்பதை என்னைப் போன்றவர்களுக்கு தாய் உள்ளத்துடன் எளிமையாக அக்கார அடிசில் வாயிலாக எடுத்துரைத்த ஆண்டாள் தாயாரின் பெயரை கூறிக்கொண்டு நன்றாக சாப்பிட்டு விடுவேன். வருடம் ஒரு நாள் நடக்கும் அந்த வைபவத்திற்காக குளிரும் மழையும் ஒன்றாக தோன்றும் அனைத்து நாட்களும், பின்னணியில் “வேறு எதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்” என்று உச்சஸ்தாயியில் சித் ஸ்ரீராமின் பாடல் ஒலிக்க என் மனம் ஏங்கும்.
————————-