புதுத்தண்ணீர் – சிறுகதை

கார்கால சிறுகதைப் போட்டி - மூன்றாம் பரிசு

- Advertisement -

                   

வயசாளிகளுக்கு வேறு என்ன வேலை….பழசை நினைத்துப்பார்ப்பதுதானே ….?

அதுவும் தாங்கள் பிறந்த ஊர் பற்றி நினைப்பதென்றால்….?

நினைத்துக்கொண்டே இருக்கலாம்.

“ பண்டு காமர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்

              உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க உரைத்து இருமி….”

அடியேனுக்குக் கொஞ்சமே கொஞ்சம் திவ்யப்பிரபந்த வாசனை உண்டு.

கவலைப் படாதீர்கள் , உங்களுக்கு போர் அடிக்காமல்தான் அதையெல்லாம் சொல்லுவேன்.

இமயமலைக்கு மேல் இருக்கும் பத்ரிநாத் கோயிலுக்கு இளமையிலேயே போய்விடவேண்டும் என்கிறார் எங்கள் திருமங்கை ஆழ்வார்.

வயசாகிவிட்டால் அங்கெல்லாம் போகமுடியாதாம்.

ஏனாம்….?

“ ஒரு காலத்திலே நான் மன்மதன் மாதிரி இருந்தேன். ஏகப்பட்ட பெண்கள் என்னைச் சுற்றிவருவார்கள். கணக்கில்லாத சொத்துபத்து. நான் வாழ்ந்தது மாதிரி வேறு யாராலும் அவ்வளவு ஜாலியாக வாழ்ந்திருக்க முடியாது….” என்று தற்பெருமையடித்துகொண்டிருக்கும்போதே இருமல் வந்துவிடும். மேற்கொண்டு பேச முடியாமல் போகும். இரண்டு கால்களுடன் மூன்றாவதாக ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு ஊன்றிக்கொண்டுதான் நடக்கவே முடியும். இப்படிப்பட்ட வயசாளிகளால் எப்படி இமயமலைக்குப் போக முடியும். ஆகவே…..”

ஓகே. ஓகே. கதாகாலட்சேபம் போதும் என்கிறீர்கள். ஸாரி பிரதர். நான் காலட்சேபம் செய்ய வரவில்லை. என்னுடைய காதல் கதையைச் சொல்ல வந்தேன். பார்த்தீர்களா, காதல் கதை என்றவுடன் நான் சொல்வதை சுவாரசியமாகக் காதைத் தீட்டிக்கொண்டு கேட்கத் தயாராகிவிட்டீர்கள். அது சரி. காதல் ஒரு எவர் கிரீன் சம்ப்ஜெக்ட், இல்லையா ஸார்….?

                                                @@@@ @@@@ @@@@ @@@@

நான் பிறந்து வளர்ந்த ஊர் அது. அவசியம் அதன் பெயரைச் சொல்லத்தான் வேண்டுமா.

அவரவருக்கு அவரவர் பிறந்த ஊர் என்றால் ஸ்பெஷல்தான்.

நான் பிறந்த ஊரை ஊர் என்று சொல்வதைவிடப் பெரிய கிராமம் என்று சொல்லலாம். சிறிய நகரம் என்றும் சொல்லலாம். சுமார் நாற்பது வருஷங்கள் முன்பு பேரூராட்சியிலிருந்து ‘சி’ கிரேட் முனிசிபாலிட்டியாக மாறியபோது எங்கள் ஊர்த் தீவுத்திடலான தேரடித்தெருவில் கலர் விளக்குகள் எரியவிட்டுப் பெரிசாக விழா எல்லாம் எடுத்தது இப்போது நினைவில் இருக்கிறது.

முனிசிபாலிட்டி ஆனபிறகு   கொசுத்தொந்தரவு முன்பைவிட அதிகமானதுதான் நாங்கள் கண்ட உடனடி பலன்.

அதெல்லாம் இந்தக் கதைக்குத் தேவையில்லாத விஷயங்கள். முக்கியமான சமாச்சாரமே இனிமேல்தான் வரப்போகிறது.

எங்கள் ஊருக்குள்ளும் ஊரின் மூன்றுபக்க எல்லைகளிலும் நாலைந்து பெரிய பெரிய குளங்கள் உண்டு. அவற்றில் ஒரு குளம் எங்கள் வீட்டின் வாசலிலேயே இருந்தது.

பெருமாள் கோயில் குளத்தைச் சுற்றி நாலுபக்கத்திலும் நாலு மாடவீதி. கிழக்கு மாடவீதியில் குளத்தைப் பார்த்தபடி எங்கள் வீடு. பெருமாள் கோயிலுக்கு மேற்கே, ஊரைத் தாங்கிப் பிடித்தபடி ஒரு பிரும்மாண்ட ஏரி. மழைக்காலத்தில் அதில் சமுத்திரம் போல அலையடிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஏரி நிரம்பி வழியும்போது அதிலிருந்து பெருந்தண்ணீர் வெளியேறும் கட்டமைப்பைக் கலிங்கல் என்று சொல்லுவார்கள். அந்தக் கலிங்கல் மூலமாக வழிந்தோடும் உபரிநீர் ஒரு சிறிய ஆறாகவே பாறைகளைப் புரட்டிக்கொண்டு பத்துப்பதினைந்து கிராமங்களைத் தொட்டு நனைத்தபடி ஓடி வருடத்தில் ஒருமாதம் கூட தண்ணீர் ஓடாத  இன்னொரு பெரிய ஆற்றின் வயிற்றை நிரப்புவது வழக்கம்.

ஜூன் இறுதியிலோ, ஜூலை முதல் வாரத்திலோ கொஞ்சம் பலமாக மழை பெய்ய ஆரம்பித்தவுடன் அந்தப் பெரிய ஏரியிலிருந்து எங்கள் தெருவிலுள்ள குளத்தை இணைக்கும் ஒரு ரகசியமான நிலத்தடிக் கால்வாய் வழியாக சீயக்காய்ப் பொடியைக் கரைத்தது போன்ற நிறத்தில் புதுத்தண்ணீர் வர ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெரிய குளம் நிரம்பத்தொடங்கும். இரண்டு முதல் மூன்று நாட்களில் குளம் முழுவதிலும் தண்ணீர் ததும்பும்.

மீன்கொத்திகள் குளத்தை வட்டமிடத் தொடங்கும். “ கொர்ரோக் கொர்ரோக் “ என்ற ஓயாத தவளைகளின் சத்தம் அடுத்த சில மாதங்களுக்கு மாடவீதியில் வசிப்பவர்களைத் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும்.

 “ புதுத்தண்ணி மோசமானது. அது காவு வாங்காமல் விடாது “ என்று ஊர்ப்பெரியவர்கள்  பேசிக்கொள்ள ஆரம்பிப்பதில் தொடங்கும் எங்கள் ஊர்க் கார்காலம் டிசம்பர் வரைக்கும், சமயத்தில் பொங்கல் தாண்டியும் நீள்வது வழக்கம்.

பெரியவர்கள் பேசிக்கொள்வது போல ஒவ்வொரு வருடமும் ஏரியிலும் குளங்களிலும் ரெண்டுபேராவது மிதப்பது வழக்கமாக இருந்தது. ஒருமுறை எங்கள் தெருக்குளத்தில் தண்ணீர் நிரம்பிய நான்காவது நாளில், வடக்குமாட வீதியிலிருந்த ஹெட்மாஸ்டரின் மகன் சுந்தர் குளத்தில் விழுந்த ரப்பர் பந்தை எடுக்கப்போய் மிதக்கத் தொடங்கினான். இத்தனைக்கும் எங்கள் ஊர்ப் பெரிய ஏரியிலேயே அசால்ட்டாக நீந்தக்கூடியவன் அவன்.

                                                @@@@ @@@@ @@@@ @@@@

இதுவரை சொன்னதில் எங்கேய்யா உன்னுடைய காதல் கதை என்கிறீர்கள்.

கொஞ்சம் இருங்கள். குறுக்கே கேள்வி கேட்டால் அப்புறம் கோர்வையாக என்னால் சொல்ல முடியாது.

நிரம்பி வழியும் குளங்கள், ஏரி இவை மட்டுமின்றி, ஏரியிலிருந்து சின்னச்சின்ன மதகுகள் வழியாக வருடத்தின் பெரும்பாலான நாட்களில் சின்னச்சின்ன மதகுகளின் வழியே வெளிப்பட்டு வயல்களினூடே சில்லென்ற தண்ணீர் பாயும் குட்டி வாய்க்கால்கள், இவையும் போதாதென்று  ஆங்காங்கே வயல்களின் நடுவில் எப்பொழுதும் வற்றாத நீருடன் தரைமட்டக்கிணறுகள் என்று நீர்வளம் நிரம்பிய நாஞ்சில் பிரதேசத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் ஊர் எங்களுடையது. வெய்யில் காலத்தில் கூடக் கிணறுகளில் நீர்வற்றியோ, பொதுக்குழாயடிகளில் கூட்டம் கூடியோ நாங்கள் பார்த்தது கிடையாது.

இவை அனைத்திலும், “ புதுத்தண்ணி காவு வாங்கும் “ என்ற பெரிசுகளின் எச்சரிக்கையைக் கொஞ்சமும் மதிக்காமல் தொபீர் என்று குதித்து நீச்சல் பழகும் மீன் குஞ்சுச் சிறுவர்கள் நிரம்பிய அந்த ஊரில் நான் ஒருவன் மட்டுமே நீச்சல் பழகாதவன்.

உண்மையில் சொல்வதென்றால் நீச்சல் பழக அனுமதிக்கப்படாதவன். என்னை அனுமதிக்காதது யார் என்று நினைக்கிறீர்கள். நீச்சலில் கரை கண்ட என் அப்பாவேதான்.

சின்ன வயசில் எல்லாம்,  நீச்சல் கற்றுக்கொள்ளாதது என்னை ஒன்றும் பெரியதாகக் காயப்படுத்தவில்லை.

ஆனால், மெதுவாக அரை டிராயரிலிருந்து முழுப்பேண்டுக்கு மாறத்தொடங்கி, லேசாக மீசை அரும்புவதைக் கண்ணாடியில் பார்த்து ரசித்தபடி, அப்பாவின் ஷேவிங் செட்டையே பயன்படுத்திக்கொள்ளலாமா, இல்லை புதுசாக ஒரு செட் வாங்கித்தரச் சொல்லலாமா என்று யோசிக்க ஆரம்பித்த வேளையில்தான் என்னுடைய போதாமை என்னை காயப்படுத்தியது.

ஊர்ப்பெண்களைக் கவரும் விதமாக ஸ்கூல் ஃபர்ஸ்ட் ரேங்க், விளையாட்டு வீரம், கவிதை கதை என்று எதையாவது கிறுக்கி அது பெயர் தெரியாத பத்திரிகை ஒன்றில் பிரசுரம் ஆனதும் நாலு பேரிடம் சுற்றில் விட்டு, அதைப் பொம்பளைப்பெண் யாராவது படிப்பதை ஓரக்கண்ணால் பார்த்துத் திருப்திப்படுவது இப்படி எந்த பாக்கியாம்சமும் இல்லாத என்னைப் போன்ற  பையன்கள் பலருக்கும் இருந்த ஒரே வாய்ப்பு ஏரி, குளம் போன்றவற்றில் தொபீர் என்று குதித்துத் தங்களுடைய நீச்சல் திறமையைக் காட்டுவதுதான். துணி துவைப்பதற்குத் தத்தமது பத்ரகாளி அம்மாக்களுடன் நீர்நிலைகளுக்கு வருகை தரும் தாவணிப்பெண்கள் டைவ் அடித்து நீச்சல் அடிப்பவனைத் தங்கள் அம்மாக்களின் கட்டுக்காவலையும் மீறிக் கட்டாயம் காதலிப்பார்கள் என்றதொரு மூட நம்பிக்கை அந்தக்காலத்தில் என் வயசுப் பையன்களை ஆட்டிப்படைத்தது.

அதைவிடப் பெரியதொரு மூடநம்பிக்கை என்னுடைய அப்பாவை ஆட்டிப்படைத்தது.

“ இந்தப்பையனுக்குத் தண்ணீரில்தான் கண்டம் “ என்று எந்த ஜோசியரோ தன் பெண்டாட்டி தன் மேல் கோபித்துக்கொண்ட ஒரு சுப வேளையில் என்னுடைய இரண்டாவது வயதிலேயே சொல்லிவிட்டதால் வந்த வினை.

நான் பிறப்பதற்குச் சுமார் இருபது வருஷங்கள் முன்பு அண்ணன் வீட்டில் சீராட வந்த எங்கள் அத்தையின் சிறுவயதுப் பையன் எங்கள் தெருக் குளத்தில் மூழ்கி இறந்து போனதும் எனது நீச்சல் ஆசைக்கு ஆப்புவைத்தது.

இத்தனைக்கும் என் அப்பா குளத்தின் கிழக்குப் பக்கச்சுவற்றில் ஏறி ஏகப்பட்ட டெசிபல் சப்தங்களுடன் குளத்துநீரைத் தலையால் பிளந்து உள்ளே நுழைந்து மூச்சை ‘தம்’ கட்டிக் குளத்தின் மறுகரையைத் தொடும்போதுதான் தலையைத் தண்ணீருக்கு வெளியே காட்டுவார். இப்படிப்பட்ட படே நீச்சல் பயில்வானாகிய என் அப்பாவுக்குத் தன்னுடைய ஒரே மகனுக்குத் தண்ணீரில்தான் கண்டம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதற்கு என்னுடைய விதியைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

சரியாகக் காலை எட்டு மணிக்கெல்லாம் தன் அம்மா மற்றும் அக்கா சகிதமாகத் துணிதுவைக்கக் குளத்தில் ஆஜராகிவிடும் ஒன்பதாம் கிளாஸ் ஜெயக்கொடியின் எதிரில் நானும் ஸ்டைலாக ஒரு டைவ் அடித்து அவளைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமலே போய்விடுமோ என்ற பயம் என்னைப் பிளஸ் டூவிலும் துரத்தத் தொடங்கியது.

அது சரி, அப்பா தனது நாற்பத்தைந்து வயதில் அடிக்கடி இப்படி எங்கள் தெருக் குளத்தில் டைவ் அடிப்பது யாரைக் ‘ கவர் ‘ பண்ண….? இந்தச் சந்தேகம் வேறு என்னை ஒரு புறம் அரிக்கத் தொடங்கியது.

ஒருவேளை அப்பா எங்கள் தெருக்குளத்தில் டைவ் அடிக்கும்போது எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்தபடி என் அம்மா அதனை ரசிக்கக்கூடும்.

                                                   @@@@ @@@@ @@@@ @@@@

கடப்பாரை நீச்சல் கூட எனக்குத் தெரியாது என்ற விவரம் மெதுவாக என்னுடைய பள்ளிக்கூட சகாக்களிடையே பரவத்தொடங்கியது. இந்த பூமியில் வாழ்வே லாயக்கற்றவன் என்பதைப் போல என்னுடைய பிளஸ்டூ வகுப்புத்தோழர்கள் கேலிப்பார்வை பார்க்கத் தொடங்கினார்கள்.

இதைவிடம் கேவலம் –

“ யூஸ்லெஸ் ஃபெலோ “ என்று தான் புதிதாகக் கற்றுக்கொண்ட ஆங்கில வார்த்தைகளை உமிழ்ந்தான் செல்வசேகரன். இத்தனைக்கும் மாதாந்திர இங்கிலீஷ் பரீட்சை இரண்டு தாள்களுக்கும் எப்படியாவது எனக்குப் பின்சீட்டைப் பிடித்துக்கொண்டு, “ டேய் பேப்பரைக் கொடுறா “ என்று என்னுடைய முதுகைச் சுரண்டுபவன்.

                                                   @@@@ @@@@ @@@@ @@@@

துணிந்து விட்டேன்.

லேசாக மழைமேகங்கள் தென்படத் தொடங்கிய அந்த ஜூலை மாதத்தில், பள்ளியின் மதிய உணவு இடைவேளையில் அம்மா கொடுத்திருந்த தக்காளி சாதத்தை அவசர அவசரமாக உருட்டி விழுங்கிவிட்டுத் தேரடித் தெரு ராஜப்பாவை அணுகி அவனிடம் சரணடைந்து, “ டேய், எங்கப்பாவுக்குத் தெரியாம நீதாண்டா எனக்கு நீச்சல் கத்துக்கொடுக்கணும் “ என்று கெஞ்சினேன்.

படிப்பு ஏறாமல் எட்டாவதுடன் நின்றுவிட்டவன் என் நண்பன் ராஜப்பா. நீச்சலில் அவன் கில்லி.

“ முடியாதுடா, நான்தான் உனக்குச் சொல்லிக்கொடுத்தேன்னு தெரிஞ்சு உங்கப்பா எங்கப்பா கிட்டே வந்து சொல்லிட்டால் யாரு இங்க உதை வாங்குவது…! “

வளர்ந்த பிள்ளைகளும் அம்மா அப்பாவின் சொல்லுக்கும் உதைக்கும் பயந்த காலம் ஒன்று இருந்தது. எங்கள் தலைமுறையுடன் முடிந்துபோனதொரு பொற்காலம் அது. இப்போது என் பேரக்குழந்தைகளே என்னை மதிப்பதில்லை.

அதை விடுங்கள். சரியான போர். என்னோட காதல் கதைக்கு வருவோம் –

பலத்த யோசனை, கெஞ்சல், பிஸ்கட் பாக்கெட் மற்றும் இருபத்தந்து ரூபாய் லஞ்சம் இவை அனைத்தின் பயனாக ஒரு திட்டம் தயாரித்தளித்தான் ராஜப்பா –

“ நாளைக்குக் காலைல ஸ்கூலில் ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லி சீக்கிரமே எங்க வீட்டுக்கு வந்துடு. வரும்போது இன்னொரு செட் யூனிஃபார்ம்  ஒரு பையில் எடுத்துக்கோ. நாம் ரெண்டுபேரும் அஞ்சாம் கால்வாய் மதகுக்குப்போவோம். அங்கேதான் நம்ம ரெண்டு பேர் தெரு ஆளுங்களும் வரமாட்டங்க. அங்கே ஒனக்கு நான் நீச்சல் கத்துக்கொடுக்கிறேன். எப்படியும் ரெண்டு வாரமாவது ஆகும் நீ சுமாரா கத்துக்க. நீசல் முடிஞ்சதும் நீ கொண்டு வந்த உலர்ந்த யூனிஃபார்மை போட்டுக்கிட்டு அப்படியே ஸ்கூல் போயிடு. என்னோட டிரஸ்ஸோட சேர்த்து உன்னோட டிரஸ்ஸையும் நான் எங்க வீட்டு மொட்டை மாடியில யாருக்கும் தெரியாம காயப்போட்டு மறுநாள் உனக்குக் கொடுக்கிறேன்….”

“ சூப்பர்றா ராஜப்பா. தேங்க் யூ வெரி மச் “ என்று சொல்லி அவன் கையைப் பிடித்து ஐந்து நிமிடம் உலுக்கிவிட்டு, பேசியதற்கு மேலாக இன்னொரு பத்துரூபையை அவன் சட்டைப் பையில் திணித்தேன்.

இரண்டே வாரத்தில் சூப்பராக நீச்சல் கற்றுக்கொண்டு எங்கள் தெருவிலுள்ள குளத்தில் அந்த ஜெயக்கொடியின் கண்னெதிரில் டைவ் அடித்து அசத்தப்போவதாகக் கனவு கண்டு கொண்டே ஸ்கூல் வந்து சேர்ந்தேன்.

அதற்குள் ‘ லஞ்ச் ‘ நேரம் முடித்து வகுப்பு தொடங்கியிருந்தது.

“ வாருங்கள் மகாராஜா. நகர்வலம் முடித்துவிட்டுத் தற்போதுதான் அரண்மனைக்குத் திரும்ப வருகிறீர்களோ….” என்று கிண்டல் தொனிக்க வரவேற்ற மதியம் முதல் பீரியட் தமிழாசிரியர், தன் கையில் பிரம்பை உருட்டியபடியே, “ ராஸ்கல் ஏறுடா பெஞ்சு மேலே “ என்று மரியாதை பொழிந்தார். நல்ல வேளை பெண்கள் சைடில் இரட்டை ஜடை வாணிஸ்ரீ இன்றைக்கு லீவு.

சொல்லப்போனா ஜெயக்கொடியை விட வாணிஸ்ரீ மீதுதான் எனக்கு அதிக ஈடுபாடு. அதற்காகப் பக்கத்து கிராமம் வரை சென்று வாணிஸ்ரீ குளத்துக்கு வரும்வரையில் காத்திருந்து டைவ் அடிக்கவா முடியும். முதலில் அந்த குக்கிராமத்தில் குளம் கிளம் ஏதாவது இருக்கிறதா என்ன.

ஏகப்பட்ட கேள்விகளுடன் அடுத்த பீரியட் ஆரம்பிக்கும் வரையில் பெஞ்சு மேலேயே நின்றுகொண்டிருந்தேன்.

எப்படியும் ராஜப்பா என்னைக் கைவிட மாட்டான்.

                                                   @@@@ @@@@ @@@@ @@@@

ஹோம் ஒர்க்கின் ஒரு பகுதியை முடித்துவிட்டு, அம்மாவுக்குத் தெரியாமல் என்னுடைய ஒரு செட் யூனிஃபார்மை ஒரு துணிப்பையில் திணித்தேன். பையை பந்தோபஸ்தாக என்னுடைய புத்தக அலமாரியில் வைத்துக் கதவைச் சாத்திவைத்தேன்.

நாளைக்குச் சீக்கிரம் எழுந்து ஏழுமணிக்கெல்லாம் ராஜப்பா வீட்டுக்குப் போய்விட வேண்டும்.

“ அம்மா, சாப்பாடு போடறியா ? “

சுற்றுவட்டாரமெல்லாம் சாம்பார் மணக்கச் வமையலறையிலிருந்து வெளிப்பட்ட அம்மா, “கொஞ்சம் இருடா, அப்பா கைகால் கழுவிண்டு வரட்டுமே ! “ என்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்தாள்.

வாசல் கதவருகே நிழலாடியது.

“ யாரு போய்ப் பாரேண்டா….! “

கதவைத் திறப்பதற்குள் என்னைத் தள்ளிக்கொண்டு உள்ள நுழைந்த குருக்கள் மனைவி கௌரி, “மாமி, இந்த அநியாயத்தைப் பார்த்தேளா, நேத்துதான் கொஞ்சம் மழை பெய்ய ஆரம்பிச்சுது. அதுக்குள்ளே இந்த புதுத்தண்ணி வேலையைக் காட்டிடுத்தே….” என்றாள் பெரிய குரலில்.

“ அப்படியா மாமி. என்ன சமாச்சாரம் ? “ என்று அம்மாவும் தன் குரலில் அதிர்ச்சி காட்டினாள்.

“ ஈசுவரன் கோயில் குளத்துச் சகதியிலே மாட்டிண்டு இந்தப் பிள்ளை அநியாயமா போயிடுத்தே “ என்று குருக்கள் மாமி உச்சுக்கொட்ட –

“ போய்ட்டது யாராம் ? “ என்றாள் அம்மா சுவாரசியத்துடன்.

“ வேற யாரு, நம்ம தேரடித்தெரு சமையல் பட்டப்பா பிள்ளை ராஜப்பாதான். சின்ன வயசு….” என்று குருக்கள் மனைவி உருகிக்கொண்டிருக்க எனது காலடியில் பூமி பிளந்தது.

“ மைக்காட். ராஜப்பா “ சற்றே தடுமாறிச் சுவற்றைப் பிடித்துக்கொண்டேன்.

அம்மா இன்னும் பேசிக்கொண்டிருந்தாள். குருக்கள் மாமி போவதாகத் தெரியவில்லை.

நேரே சமையலறைக்குச் சென்று ஒரு சொம்பு தண்ணீர் குடித்தேன்.

“ கண்ணே ஜெயக்கொடீ. நீச்சல், டைவ் இந்த இரண்டைத் தவிர வேறு எதற்கு நீ மயங்குவாய், கொஞ்சம் சொல்லேன்….! “ என்று என் மனசிற்குள் கேள்வி எழுப்பினேன்.

அடடே, அதைவிட முக்கியமான ஒன்று –

அந்தப் படுபாவி ராஜப்பா எனக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதற்கு குருதட்சிணையாக ஒரு இருபத்தைந்தும், போனஸாக ஒரு பத்தும் ஆக மொத்தம் முப்பத்தைந்து ரூபாயை அப்பாவுக்குத் தெரியாமல் கொடுத்திருக்கிறேன். அதை இப்போது யாரிடம் வசூல் செய்வது.

அந்தக்காலத்து முப்பத்தைந்து ரூபாய் கிட்டத்தட்ட இந்தக் காலத்து ஆயிரம் ரூபாய்க்கு சமம், தெரியுமா ஸார்….?

என்ன ஸார் டக்குனு கிளம்பிட்டீங்க. என்னோட தெய்வீகக் காதல் கதை அதற்குள் உங்களுக்கு போரடித்துவிட்டதா என்ன….?

காயார் கோமடம் ஸேஷாத்ரி
காயார் கோமடம் ஸேஷாத்ரி
பிறந்த ஊர் மதுராந்தகம். இலக்கிய வீதியின் சிறப்புப்பரிசுடன் 1979 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். தமிழில் வெளிவரும் பிரபல இதழ்கள் பலவற்றிலும் எழுதியுள்ளேன். இது வரை சுமார் நூற்றைம்பது சிறுகதைகள், ஐம்பது கவிதைகள், முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மிக மற்றும் சமுதாய நலன் சார்ந்த கட்டுரைகள் மற்றும் ஒரேயொரு நகைச்சுவை நாடகம் ஆகியவை வெளியாகி உள்ளன. சாதனையாளர்கள் பலரை நேர்காணல்கள் செய்த பேட்டிக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். ஆனந்த விகடன், கல்கி, தினமணி நாளிதழுடன் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிகள், கோவை சிறுவாணி வாசகர் மையம், காணி நிலம் காலாண்டிதழ், சங்கப் பலகை முகநூல் குழுமம், இலக்கியப் பீடம் மாத இதழ், மஞ்சரி மாத இதழ், அமுதசுரபி மாத இதழ், சென்னை பாரதி கலைக்கழகம் மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தின் இந்து தமிழ்க் கவிஞர் மன்றம் ஆகிய இதழ்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்திய நாடகம், சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகளில் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளேன். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தினமணி நாளிதழின் தலையங்கப் பக்கத்தில் தொடர்ந்து சமூக நலன், விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகளை வழங்கி வருகிறேன். " கனாக்கண்ட தோழி " ( இரண்டு பதிப்புகள் ), " மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்தராமன் " மற்றும் "ஸ்ரீ திருமங்கையாழ்வார்" ஆகிய மூன்று ஆன்மிக நூல்களும், "அக்ரஹாரத்து ஹெர்குலிஸ்" என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. இலக்கிய வீதி, தமிழ் அரசி வார இதழ், கோவை சிறுவாணி வாசகர் மையம் ஆகியவை வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நூல்களில் தலா ஒரு சிறுகதை வெளியாகி உள்ளது. தொடர்ந்து எழுத்துலகில் உற்சாகமாக இயங்கி வருகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -