ரஹிமி..

வரலாற்று சிறுகதைப் போட்டி - 2022

- Advertisement -

       பனிக்குடம் உடைந்து ஊற்றுவது போல, செங்கடல் நீர் சிந்து சாகரத்தில் கலந்து கொண்டிருந்தது. மோச்சா துறைமுகத்திலிருந்து கிளம்பிய ரஹிமி, தாயின் யோனியிலிருந்து எட்டிப்பார்க்கும் சிசுவைப்போல, ஏடன் குடாவில் தலையை நீட்டியது.

      நாற்பத்தியோரு கஜ நீளத்தில், பத்து கஜ கடலாழத்தில், பச்சை நிற துணியில் பொன்னிற சிங்கத்தின் முதுகில் எட்டிப்பார்க்கும் சூரியன் என முகலாய சாம்ராஜ்ய கொடி கம்பீரமாய் பறக்க, ஜுங்கா வகை ‘ரஹிமி’ கப்பல் கிழக்கு நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. பருவகாற்றினை சரியாகக் கணக்கிட்டே, கப்பலை துறைமுகத்திலிருந்து கிளப்பியிருந்தனர் மீகாமன்கள்.

     கப்பலில் சூரத்தின் பார்சி வணிகர்களும், ஆக்ராவிலிருந்து வந்த ஹஜ் பயணிகளும் நிரம்பியிருந்தனர். இரண்டு குழுக்களின் முகங்களிலும் பூரண திருப்தி நிலவியது.

      சிராஜ் மெய்மறந்து சொல்லிக்கொண்டிருந்தான், “திருக் கஃபாவினை தவாஃப் செய்யும்போது, ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடும் பேறைப்பெற்றேன்…அந்த கணம் என் பாவங்கள் விலகியதைப்போல உணர்ந்தேன். ரசூக்குட்டிதான் பாவம்..கூட்டத்தில் நுழைந்து ஹஜ்ருல் அஸ்வத்தை நெருங்க முடியவில்லை குண்டனால்…அப்போதே சொன்னேன் ஈத் பெருநாக்களில் குர்பானியை நாலு பங்கு வாங்கி சாப்பிட வேணாம்னு..”

“நையாண்டி வேணாம் தோஸ்த்… ஸல் அவர்கள் என்னை ஆசிர்வதித்து, இந்துஸ்தானத்தை அடையும் என்னை சாம்பல் போல இலேசாக்கி காற்றில் கரைந்துப் போகச் செய்வார் பார்..” ரசூக்குட்டி கோபத்தில் கப்பல் அதிர நடந்தான்.

“அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ருல் அஸ்வத்தை தொடும் பேறைத்தான் அருளியுள்ளான். எங்கள் பயானா கண்ணன், சொர்ணக் கட்டிகளை கொட்டியுள்ளான்…” பகவான்தாஸ் ஒரு மொஹரை சுண்டிவிட்டார்.

“புரியவில்லை பக்வான்..” சிராஜ் வெறுப்போடு பார்த்தான். 

“இந்த முறை பயானாவில் இண்டிகோ விளைச்சல் அமோகம். தரமும் வாரே வாஹ்..வியாபாரத்தில் இலாபம் இரட்டிப்பு…” 

“ஓ…பயானாவிற்கும் உங்கள் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?”

“மதுராவைச் சுற்றி இருந்த பகுதிகளெல்லாம் கண்ணனின் ஆளுமையில் தானே இருந்தன. கண்ணனின் பேரன் அனிருத்தாவிற்கும், பாணாசுரனின் மகள் உஷைக்கும் பயானாவில் தான் திருமணம் நடந்தது..கண்ணனின் நிலங்களிலெல்லாம் இண்டிகோ விளைச்சல்தான். அந்தப் பகுதி மக்களின்  தோல் நீலநிறத்திற்கு மாறும் அளவுக்கு…”

“அது சரி..அசுரனின் குடும்பத்தில் சம்பந்தம் எப்படி?..பாணாசுரன் சம்மதித்தானா..?”

“மிரட்டித்தான்…”

“பெண்ணை எடுத்து நாட்டைப்பிடுங்குவது…”

“இரஜபுத்திர பெண்களை மணந்து நீங்கள் செய்யவில்லையா?”

“பக்வான்..எங்கள் பேரரசை கிண்டல் செய்கிறாய்..”

“நீ எங்கள் கடவுளைக் கேலி செய்கிறாய்”

“சரி..

கருங்கல் தரிசனம் பெரிதா? சுவர்ணக் கட்டிகள் தரிசனம் பெரிதா..” அது வரை அமைதியாயிருந்த அமர்சிங் உள்ளே வந்தான். 

“தேவைக்கு மேல் பணம் சேர்க்க எங்கள்  இஸ்லாத்தில் அனுமதியில்லை. அநியாய விலைக்கு விற்றுப் பொருளீட்ட உங்களைப்போல நாங்கள் வியாபாரிகளல்ல..” ரசூக்குட்டிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“ஆமாம்…நீங்கள் கொள்ளைக்காரர்கள்…” அமர்சிங்கிடமும் அதே சூடு இருந்தது.

“நாங்கள் ஆட்சியாளர்கள்..”

“யார் நிலத்தை யார் ஆள்வது?”

“உங்களுக்கு ஆள்வதற்கான திறமை இல்லை…”

“பயானாப் போரில் பாபர் தோற்றோடியது நினைவில் இல்லையா? கன்வாப் போரில் செய்த சூழ்ச்சிகள் மறந்துவிட்டதா?”

“அது போகட்டும்..சிந்து சாகரத்தின் சாட்சியாக, எடு உன் வாளை..எரித்ரேயன் கடலில் யாருடைய தலை மிதக்கிறது பார்ப்போம்..” ரசூக்குட்டி கோபத்தில் வாளை உருவினான். 

“ரசூ…நாம் இப்போது ஹாஜிக்கள். பொறுமை..” சிராஜ் தடுத்தான். அதே சமயம் தூரத்தில் ஏதோ ஒன்று ரஹிமியை நோக்கி நகர்ந்து வந்தது.

         கரிய நிறத்தில், குறுகலான அகலத்தில் ரஹிமியின் நீளத்தில் பாதியளவு கொண்டு இருபுறமும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட கப்பலொன்று வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. கலங்கரை விளக்கத்தின் மேல் சுக்கான் இருப்பது போன்ற கொடி பறந்தது.

“போர்த்துகீசிய கடல்கொள்ளையர்கள்..” தலைமை மீகாமன் கப்பல் தலைவனிடம் ஓடிவந்தான்.

“சூரத் பட்டினம் எவ்வளவு தொலைவிலிருக்கிறது…”

“ஒரு நாள் தொலைவில்..”

“கொள்ளையர் கப்பல் நெருங்கும் முன் கரையை அடைய முடியுமா?”

“சாத்தியமில்லை ஹுஸூர்..அவர்களின் கப்பல் நம்மை விட இருமடங்கு வேகத்தில் பயணிக்கத்தக்க வகையில் கட்டப்பட்டிருக்கும்”

“பீரங்கிகளையும் மஸ்கட்களையும் தயார் நிலையில் வையுங்கள்”

“ஹுஹூர் கடந்த வாரம் பெய்த மழையில் வெடிமருந்துகள் நமத்துவிட்டது. எந்த அளவுக்கு பயன்தரும் என்று தெரியவில்லை”

          அடுத்த கால் நாட் பொழுதில், கொள்ளையர் கப்பல் ரஹிமியை நெருங்கியது. பீரங்கிகள் சுடத்தொடங்கின. ரஹிமியின் தலைவன் முகமது குஸ்ரூகான், பயணிகளை காப்பாற்றும் பொருட்டு ஆயுதங்களை கீழே போட்டு தங்கள் பேரரசின் கொடியை ஆட்டியபடி, சிறிய படகொன்றை இறக்கி கொள்ளையர் கப்பலை நோக்கிச் சென்றான். அதே சமயம் கப்பலின் மறுபுறம் மற்றொரு படகு இறக்கப்பட்டு, சூரத் பட்டினம் நோக்கி பயணப்பட்டது. 

“நான் முகமது குஸ்ரூகான். இந்துஸ்தானத்தின் பேரரசர் ஜஹாங்கீர் பாத்ஷாவின் உம்மா மர்யம்-உஷ்-ஸமானி அவர்களின் சொந்த கப்பலான ரஹிமியின் தலைவன். இதன் மீது கைவைப்பது, உங்களை நீங்களே இந்துஸ்தானத்திலிருந்து துரத்திக்கொள்வதற்கு சமம்..”

           கொள்ளையர் கப்பல் தலைவன் எரித்ரேயன் கடல் அதிர சிரித்தான், “நான் ஃபிகுவேரா டி சில்வா..உன் போல் யாருக்கும் அடிமையில்லை. இந்துஸ்தானம் மட்டுமே உங்களுக்கு சொந்தம். உலகில் கடற்கரை உள்ள எந்த நாடும் எங்களுக்கு சொந்தம்..”

“ஓரிடத்தை விட்டு ஓரிடம் ஓடும் நாடோடி வியாபாரிகளே…பேரரசரிடம் விளையாட வேண்டாம். எங்கள் கப்பலுக்கு வழியை விடுவது நல்லது”

          டிசில்வா எதையும் கேட்கும் நிலையில் இல்லை. குஸ்ரூகான் கைது செய்யப்பட்டான். ரஹிமியில் போர்த்துகீசிய கொள்ளையர்கள் சிலர், ஆயுதங்களுடன் தொற்றிக்கொண்டனர். கொள்ளையர் கப்பலை மணந்து கொண்ட மணமகளைப்போல பின்தொடர்ந்து செல்லத் தொடங்கியது ரஹிமி.

         சூரத் கடற்கரையில் தனது செல்லக்குழந்தையான ரஹிமியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார் பேரரசரின் தாயார் ஹர்கா பாய் என்கிற மர்யம்-உஷ்-ஸமானி. ரஹிமியலிருந்து தப்பித்த மீகாமன் ஒருவன் படகுடன் கரை சேர்வதைக் கண்டவர், “ரஹிமியை மலக்குகள் குட்டியாக்கிவிட்டார்கள் போல…” சொல்லி சிரித்தார்.

          போர்த்துகீசிய கொள்ளையரிடம் ரஹிமி சிக்கியதை கேட்டு, கோபத்தை நீண்ட நேர மௌனத்தில் சிவக்கவிட்டார். “முகலாயர்கள் முட்டாள்கள்…பரந்து விரிந்து மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட இந்துஸ்தானத்திற்கு வலிமையான கப்பற்படை அவசியம் என்பதை எத்தனை முறை புரியவைப்பது…வியாபாரம் செய்ய வந்தவனெல்லாம் வாலாட்டுகிறான்” உரக்கவே கத்தினார்.

“பேரரசிக்கு தெரியதாததல்ல…முகலாயர்கள் நிலப்பகுதிகள் சூழ்ந்த ஆப்கன் பகுதியிலிருந்து வந்தவர்களாலாதலால், அவர்களுக்கு கடற்படை குறித்த அறிவோ அதன் முக்கியத்துவம் குறித்தோ தெரிய வாய்ப்பில்லை. மேலும், எத்தகைய பாலைவனத்தையும் கடந்துவிடும் அவர்களுக்கு, கடல், கடல் பயணம் என்றாலே கொஞ்சம் பயம்தான்…” மரியம்-உஷ்-ஸமானியின் அந்தரங்க காரியதரிசி ஜீஜாபாய் சொன்னாள்.

“எத்தனை ஆண்டுகளுக்கு ஜீஜா…இந்துஸ்தானத்தை பிடித்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. மொகல் சாம்ராஜ்யம் நான் புகுந்த வீடு. என் திருமணத்தை அரசியலாக்கி, என் வயிற்றில் பிறந்தவனை பாதுஷாவாக்கியிருக்கிறது விதி. இல்லையெனில் இவர்களை ஒரு வழி செய்திருப்பேன்…போகட்டும். சலீமுக்கு செய்தி அனுப்பியாகிவிட்டதா?”

          கொங்கண கடற்கரையின் கோபகபட்டினத்தை நோக்கி ரஹிமி நகர்ந்து கொண்டிருந்த அதே நேரம், ஆக்ரா தீயில் தகித்துக் கொண்டிருந்தது. கோட்டையின் உப்பரிகையில், நூர்-உத்-தீன் முகமது சலீம் என்கிற பேரரசர் ஜஹாங்கீர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். “கோபகபட்டினம் சென்ற தூதுவர்கள் வந்துவிட்டார்களா? போன காரியம் என்னவாயிற்று? என் அன்னையின் முகத்தில் எப்படி விழிப்பேன்?”

          அடுத்த இரு தினங்களில், கவிழ்ந்த தலையுடன் தூதுவர்கள் பேரரசர் முன் நின்றனர். “பேரரசரே…நமது கப்பலை விடுவிக்க இரண்டு இலட்சம் மொஹர்களை பணயத் தொகையாக கேட்கிறான் போர்த்துகீசிய வைஸ்ராய் ஜெரோனிமொ டி அஸிவெடோ. கப்பலை சஷ்டி துறைமுகத்தில் நங்கூரமிட்டுருக்கிறார்கள். கப்பலை கடத்திய கொள்ளையர் தலைவன் டிசில்வா நம் பிரஜைகளிடம் மிகவும் இழிவாக நடந்து கொள்கிறான்”

          பேரரசரை எதிர் கொள்ள எல்லோருமே தயங்கினர். பயந்தனர். ராஜா ராய் சிங் மட்டுமே மெதுவாக நெருங்கிச் சொன்னார், “பாதுஷா அவர்களே, தற்போதைக்கு பணயத்தொகையைக் கொடுத்து மீட்டுவிடுவோம். பிறகு, அதை எப்படி வசூலிக்க வேண்டுமென நமக்கு தெரியாதா?”

        பேரரசருக்கும் அது சரி எனப்பட்டது. பணயத்தொகையுடன், பயண ஏற்பாடுகள் தயாராகின. மீட்புக்குழு புறப்படுமுன், பிஜப்பூர் சுல்தானின் செய்தி ஒன்று அதிவேகமாக பேரரசரை அடைந்தது.

“இந்துஸ்தானத்தின் பேரரசருக்கு வணக்கங்கள்… சிறை பிடிக்கப்பட்ட ‘ரஹிமி’ போர்த்துகீசியரால் எரிக்கப்பட்டது. மிகபெரும் வணிகர்களும், அல்லாஹ் அருள் பெற்ற ஹாஜிக்களும் என எழுநூற்று சொச்சம் பேரில் யாரும் தப்பித்திருக்கவில்லை. தங்களின் கீழ் படிந்த பிஜப்பூர் மாகாண துருப்புகள் ஜாகையிடுவதற்கு முன்னர் நிலைமை கைமீறிவிட்டது…

              ஒப்பம்

இப்ரஹிம் அடில் ஷா”

          பாதுஷாவின் நாவிலிருந்து ஆணைகள் வெளிவருமுன், கோட்டையிலிருந்து ஆயுதங்கள் வெளிவந்தன. எந்த ஒரு போர்த்துகீசிய வணிகனும் விடுபடவில்லை. எல்லோருடைய குருதியும் நிலத்தை நனைத்தன. அக்பர் சர்ச்சில் ஒளிந்த சிலர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். அனைத்து நகரங்களிலும், போர்த்துகீசியருக்கு வழங்கப்பட்ட வணிக உரிமைகள் பறிக்கப்பட்டன. அடுத்த சில நாட்களுக்கு, பேரரசின் கோபம் அடங்கவில்லை. “இளவரசர் குர்ரமிற்கு செய்தி அனுப்புங்கள். அஹமது நகரிலிருக்கும் அவனது படைகள் மாளவம் நோக்கி புறப்படட்டும். கொங்கண கடற்கரை வரை அனைத்து துறைமுகங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சொல்லுங்கள். போர்த்துகீசியப் பரதேசிகளைப் பரலோகம் அனுப்பச் சொல்லுங்கள்…”

           தூதுக்கடிதம் பறந்தது. இளவரசர் குர்ரம் இயல்பாகவே ஜீஸுட்களுக்கு எதிராக இருந்தார். மின்னல் வேகத்தில் குர்ரமின் படைகள் டாமனுக்குள் நுழைந்தது. டாமன், சூரத் என அனைத்து துறைமுகப்பட்டினங்களும் கைப்பற்றப்பட்டன. சூரத்தின் வணிக உரிமை, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் சர் தாமஸ் ரோவிடம் வழங்கப்பட்டது. கைமாறாக போர்த்துகீசிய கொள்ளைக் கப்பல்கள் காட்டிக்கொடுக்கப்பட்டன. ரஹிமியின் நினைவாக போர்த்துகீசிய கப்பல்களை கொளுத்திக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு கப்பலிலிருந்து ஃபிகுவேரா டி சில்வா வின் வந்த கதறல் சத்தத்தை அலைகள் கரையைக் கடக்கவிடாமல் செய்து கொண்டிருந்தன. ரஹிமியின் சாம்பல் நினைவுகள், போர்த்துகீசியரின் ஏகாதிபத்தியக் கனவுகளை கடலில் கரைத்துக்கொண்டிருந்தன.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -