மூன்று அறைகள் கொண்ட வீடு

கவிதை

- Advertisement -

தென்னை வேய்ந்த கூரை
செம்மண் பிசைந்து எழுப்பிய சுவர்கள்
சாணம் இட்டு மெழுகிய தரை
படுக்க சமைக்க முதலறையும்
பானைகளும் பீரோவும் இரண்டாவதில்
தாத்தா பாட்டி மூன்றாவதில்
மழை நாளில் ஒழுகும் நீரில் சுவரெங்கும்
தாரைகள் நெளியும்
பறிந்து போன மண்தரை மெழுகி
காப்பு காய்க்கும் அம்மாவின் கைகள்
ஆடிக் காற்றுக்கு கூரை பறக்க
நடுங்கும் எங்கள் ஈரக்குலைகள்
கூரை தாங்க நின்ற தூணும் தினமும்
எங்கள் பயிற்சிக்குதவும்
காலையில் ஒதுங்க மேட்டுக்காடு
குளிப்பதற்கு கூரைத்தடுப்பு
இத்தனை பெரிய வீடென்றென்னிய என்னுள்
இன்னும் நெஞ்சில் இடியாய் இறங்கும்
கல்லூரியின் கடைசி மாதத்தில்
சாப்பிட்டு முடித்து பேருந்து நிலையம்
திரும்புகையில்
நண்பன் சொன்ன அந்த வார்த்தை
‘குடுச வீடு’

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -