உற்றுழி

சிறுகதை

- Advertisement -

அன்று பௌர்ணமி. வெள்ளிப் பந்தாக ஒளிர்ந்த நிலவின் ஒளி நிலவுலகை ஒளிர்வித்துக் கொண்டிருக்கக் கபிலாவின் மனமோ அந்த வானம்போல இருண்டு கிடந்தது, பூங்காவின் ஓரத்தில் கிடந்த இருக்கையில் சோக சித்திரம்போல் அமர்ந்திருந்த அவளின் கண்கள்மட்டும் நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது

இவளின் நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு அன்று பூங்காவின் சூழலோ மகிழ்ச்சி அலையில் பரவி கிடந்தது. வீசிய மெல்லிய பூங்காற்று தாலாட்டு பாட இயற்கையின் அமுதைப் பருகியபடி மெது நடை செல்வோர் மெல்ல நடை போட்டுக் கொண்டிருந்தனர். சற்று வயது முதிர்ந்த பெரியவர்கள் கை, கால்களை அசைத்துச் சீனப் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான ‘தைச்சியை’, செய்து கொண்டிருந்தார்கள். விளையாட்டுத் திடலில் சிறுவர்கள் இவ்வுலகத்து இன்பத்தையெல்லாம் ஒட்டு மொத்தமாக அனுபவித்து விட்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறுவர்களின் மகிழ்ச்சி ஒலியும், அவர்களின் கள்ள கபடமற்ற சிரிப்பும் காதில் விழும் போதெல்லாம் இனம் புரியாத வேதனையில் அவள் தத்தளித்தாள். அவளின் எண்ணமெல்லாம், கவினைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அவனிடம் அப்படிக் கேட்டிருக்கக்கூடாது. ஏற்கனவே மனச்சஞ்சலத்தில் இருப்பவனிடம் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பேசியிருக்க வேண்டும். பாவம்! பிள்ளையின் முகம் துவண்டுபோய், கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது.

நான்கு மாதங்களுக்கு முன்பு வரை, இந்தப் பிள்ளைகள் போன்று எவ்வளவு மகிழ்ச்சியாகத் துள்ளித் திரிந்துகொண்டிருந்தான். கன்னத்தில் குழி விழ, அவன் சிரிக்கும் சிரிப்பை நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். உலகமே அப்பா என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, அவரின் எதிர்பாராத மரணம் அந்தப் பிஞ்சு மனதை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவன், இப்பொழுதெல்லாம் பேசுவதையே மறந்தவன்போல் அமைதியாகி விட்டான்.

இதோ! இந்தப் பௌர்ணமி நிலவைப் பார்த்தால் போதும் அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஒரே குஷியாகி விடுவான். “அப்பா! அதில பாருங்க முயல் தெரியுது. அம்மா! இப்போ பாருங்க யானை தெரியுது” என்று நிலவில் தோன்றும் காட்சிக்கெல்லாம் தன் மனதில் தோன்றும் உருவங்களைக் கொடுத்துத் துளைத்தெடுத்து விடுவான்.

அவள் கணவன் இளங்கோவோ இன்னும் ஒருபடி மேலே போய்க், கபிம்மா! என்ன இருந்தாலும் அந்த வெண்ணிலவோட அழகு உன்னை விடக் கம்மிதான் என்று கூறி, அவள் கன்னம் சிவக்க வைத்திருப்பான்.

இளங்கோவை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சுக்குழிக்குள் துக்கம் நீருற்றாய்ப் பீறிட மனத்தில் சொல்லவொண்ணா வேதனை அழுத்தியது. கண்களில் கண்ணீர் திரையிட தன்னை இப்படித் தனியே தவிக்கவிட்டுச் சென்ற தன் கணவனை எண்ணி ஒருபக்கம் கோபமும், இயலாமையும் பொங்க, மறுபக்கம் அவன் பால் கொண்ட அன்பும், பாசமும் அதற்கு அணையிட்டது.

எத்தனை மகிழ்வான தருணங்கள். எத்தனை இனிமையான பொழுதுகள். அத்தனைக்கும் இந்த வெண்ணிலவே சாட்சி. அவளின் கண்கள், மேகங்களுக்கு இடையே நகர்ந்து செல்லும் வெண்ணிலவை பார்த்தபடி இருக்க, மனமோ பழைய நினைவுகளின் ஊடே மெல்லப் பயணிக்கத் தொடங்கியது.

தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்த சமயத்தில், பிரபலமான கட்டுமான நிறுவனத்தில் காரியதரிசியாக அவளுக்கு வேலை கிடைத்தது. அதே நிறுவனத்தில், தலைமை பொறியாளராக வேலை செய்து வந்தான் இளங்கோ. ஆரம்பக் காலங்களில், பணிநிமித்தம் காரணமாக இருவரும் அவ்வபோது சந்தித்து உரையாடிக் கொள்வதுண்டு. அத்துடன் அவனுடன் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் அவனின் குணத்தைப் பாராட்டி கூறுவதைக் கேட்டிருக்கிறாள். அவ்வளவு தான். மற்றபடி அவனைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அப்பொழுது அவள் அறிந்திருக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் அவளுடைய தாத்தாவின் நினைவு நாளன்று முதியோர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி விட்டு வருவது அவளின் குடும்ப வழக்கம். அந்த ஆண்டு ‘ஜியான் ஹோம்’ முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்க சென்ற இடத்தில் அங்குள்ளவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டிருந்த இளங்கோவைப் பார்த்ததும் அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அதை அவனிடம் கேட்டும் விட்டாள்.

‘இதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை கபிலா. இங்க இருக்கிற பெரியவர்கள் எல்லாம் வசதி வாய்ப்பற்ற, மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்டவங்க. இவங்களுக்கு இந்தக் காப்பகமே, தேவையான உணவு, உடை போன்ற வசதிகளை எல்லாம் செய்து கொடுக்குது. இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி இவங்களுக்குத் தேவையானது பரிவும், கனிவான பேச்சு மட்டும்தான். இந்த வயதான காலத்துல இவங்க அத மட்டும்தான் எதிர்பார்க்குறாங்க. ஓய்வு நேரத்துல வந்து என்னால முடிந்த உதவிகளைச் செஞ்சுட்டு இவங்க கூட நேரத்தை செலவழிப்பேன். பள்ளிநாட்களில், புறப்பாடப் நடவடிக்கையின் பொருட்டுத் தொடங்கிய இந்தப் பழக்கம் பின்னர் என்னுடைய பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் இப்பவும் தொடர்ந்து செஞ்சிகிட்டு வர்றேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்று பலர் இதில ஈடுபட்டு வர்றாங்க. அது மட்டுமல்லாம, உங்களைப் போன்ற சில நல்ல உள்ளங்களும் அவ்வபோது வந்து உதவிக்கரம் நீட்டுறாங்க. ஆகையால, இது என்னுடைய தனிப்பட்ட முயற்சியல்ல. இது ஒரு கூட்டு முயற்சி’ என்றவனைப் பிரமிப்பு அகலாமல் பார்த்தாள்.

விடுமுறை கிடைத்தால் சினிமா, கடைத்தொகுதி என்று ஊர் சுற்றும் இளையர்களுக்கு மத்தியில், மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் அன்பாய், அடக்கமாய் மற்றவர்களுக்கு உதவும் அவனின் குணம் கண்டு வியந்து போனாள். அதன் பிறகு, அவளும் நேரம் கிடைக்கும் சமயத்தில் அவனுடன் காப்பகத்துக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

இதன் பிறகு, இருவருக்கும் இடையேயான நட்பு மெல்ல மெல்லக் காதலாக மாற, பெற்றோரின் சம்மதம் பெற்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தனர். அவர்களின் இன்ப வாழ்வின் அடையாளமாய்க் கவின் பிறந்தான்.

வாழ்க்கையின் ஓட்டத்தில், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் போன வேகம் தெரியவில்லை. இந்த நிலையில், எந்தக் குணத்தைக் கண்டு அவள் காதல் கொண்டாளோ, எந்தக் குணம் அவர்கள் வாழ்வை இணைத்ததோ, அந்தக் குணமே ஒரு நாள் அவனுக்கு யமனாகிப் போன செய்தியைக் கேட்டு நொறுங்கிப் போனாள். கட்டுமானத் தளத்தில் நடந்த விபத்தில், சக ஊழியரைக் காப்பாற்ற போய், அதே இடத்தில் அவன் பலியான செய்தியைக் கேட்டுத் துடித்துப் போனாள். அழுதாள்; புரண்டாள். அவன் நினைவுகளில் சிக்கித் தவித்த அவள் மனம் அவனில்லா நிலையை ஒப்புக்கொள்ள மறுத்தது.

இளங்கோவின் எதிர்பாராத இந்த மரணம் அவளை மட்டுமல்ல கவினையும் வெகுவாகப் பாதித்து விட்டது. எட்டு வயது என்பது இழப்பை உணரக் கூடிய வயதா? சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கும் அந்த இளங்குருத்தின் வேதனையைத் தேற்றுவதற்கு வழி தெரியாது திண்டாடிக்கொண்டிருக்கிறாள். தகப்பனைத் தேடும் தளிரின் உள்ளம் புரிந்தும், அதனைத் ஆற்றும் வழி அறியாது தவித்துக்கொண்டிருக்கிறாள். இளங்கோவை இழந்த வேதனை ஒருபுறம் என்றால், தந்தையின் இழப்பைத் தாங்காமல் தவிக்கும் கவினின் நிலைமை மறுபுறம் என்று துயரத்தின் விளிம்பில் நின்று தத்தளித்துக்கொண்டிருக்கிறாள்.

இரவு நேரங்களில், தூக்கத்தில் எழுந்துகொண்டு அப்பா! அப்பா! என்று அலறும் நேரத்தில், அவனைச் சமாளிப்பதற்குள் அவளுக்குப் போதும், போதும் என்றாகி விடும்.

வீட்டில் மட்டுமல்ல பள்ளியிலும் அதே நிலையில்தான் இருந்தான். யாருடனும் அதிகம் பேசாமல், படிப்பில் கவனமின்றி எப்பொழுதும் சோகமாக இருந்தான். கவினின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஆசிரியர்களும் அவனுக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கொடுத்து, அவனைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, தேவையான உதவிகளைக் செய்து வந்தார்கள்.

காலம் செல்லச் செல்லக் காயங்கள் ஆறும், அதுவரை சற்றுப் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும், என்று தன் வேதனையை வெளிக்காட்டாது அவனைப் பழைய கவினாக மாற்றப் படாதப்பாடு பட்டுகொண்டிருக்கிறாள்.

இந்நிலையில், இன்று காலையில் கவினின் பள்ளி ஆசிரியரிடமிருந்து அவளுக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. நாளை முடிந்தால் பள்ளிக்கு வாருங்கள், உங்களிடம் கவினைப் பற்றிப் பேச வேண்டும் என்றதும் பதறி விட்டாள்.

‘கவினுக்கு என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?’ என்று படபடப்புடன் கேட்டாள். அதற்கு அவர், ‘பதட்டப்படாதீங்க! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நாளைக்கு நீங்க பள்ளிக்கு வாங்க. விரிவாப் பேசலாம்’ என்று கூறித் தொலைப்பேசியை வைத்து விட்டார்.

அதன் பிறகு, அவர் எதற்காக வரச் சொல்லியிருப்பார் என்ற சிந்தனையிலேயே இருந்ததால், அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. மாலையில் வீட்டிற்கு வந்தவுடன்

‘கவின் இன்னைக்கு பள்ளியில ஏதாவது நடந்ததா? நீ ஏதாவது செய்தாயா?’ என்று இதமாகக் கேட்டாள்.

“நான் ஒன்னும் செய்யலம்மா” என்று மெல்லிய குரலில் பதிலளித்தான்.

“கவின், நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரனும்கிறது தான் அப்பாவோட ஆசை. நீ இப்படி இருந்தால் அப்பாவின் ஆசையை எப்படி நிறைவேற்ற முடியும்” என்று அவள் சொன்னதுதான் தாமதம் அவன் கண்கள் கலங்கி விட்டன. அதைப் பார்த்ததும் அவள் நெஞ்சம் பதறியது.

தேவையில்லாமல் இளங்கோவின் ஞாபகத்தைத் தூண்டி விட்டோமோ என்று தவித்துப் போனாள். பின்னர் அவனைச் சாமாதனப்படுத்தித் தூங்க வைத்த பிறகு, பூங்காவிற்கு வந்தவளுக்கு நிலவு பழைய கதைகளை நினைவுறுத்த, எதுவாக இருந்தாலும் நாளை ஆசிரியரிடம் பேசிய பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

மறுநாள் காலையில், கவினைப் பள்ளியில் விட்டுவிட்டு, ஆசிரியருக்காகக் காத்திருந்தாள். சிறிது நேரத்தில்,

“காலை வணக்கம் கவின் அம்மா, எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே கவினின் வகுப்பாசிரியர் காவ்யா அவளை நோக்கி வந்தார்.

“நான் நல்லாயிருக்கேன் ஆசிரியை. என்னாச்சு? கவின் ஏதாவது பண்ணினானா? அவன் வகுப்பறையில் எப்படி இருக்கான்? அவன் படிப்புல ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” என்று படபட வென்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

“நீங்க ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கீங்க? கொஞ்சம் அமைதியா இருங்க. வாங்க, வகுப்பறைக்குப் போய்ப் பேசலாம்” என்று அவளை அழைத்து சென்றார்.

வகுப்பறைக்குள் காலை வைத்ததும்தான் தாமதம், ஒரே கரவொலி சத்தம். “வாழ்த்துகள் கவின்! வாழ்த்துகள் கவின் அம்மா!” என்று பிள்ளைகளின் குரல் சங்கீதம் போல் ஒலித்தது.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கவினைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு வந்தால் இங்கே பிள்ளைகளின் வாழ்த்தொலி கேட்கிறதே? என்று திகைத்துப் போய் நின்றவளிடம்,

“என்ன கவின் அம்மா, அப்படியே திகைச்சு போய் நின்னுட்டீங்க. இதோ! இந்தப் பாராட்டைக் கேக்குறதுக்காகத் தான் உங்களை வரச் சொன்னேன். கவின்கிட்ட நான் எவ்வளவோ பேசியும், அவனோட நடவடிக்கையில் பெரிய அளவுல மாற்றம் இல்லை. எந்த ஆர்வமும் இல்லாம, மற்ற மாணவர்களுடன் ஒட்டாம தனியாதான் இருந்தான். அந்தச் சமயத்தில, அவன் பக்கத்துல உட்கார்ந்து இருந்த பையனுக்கு எதிர்பாராத விதமா கால் உடைஞ்சு, கட்டு போட்டுக்கிட்டு வந்தான். அந்தப் பையனை வகுப்பறைக்கு வெளியே கூட்டிட்டுப் போறது, உணவகத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போய் உணவு வாங்கிக் கொடுக்குறது என்று அவனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் இவனாவே போய்ச் செய்ய ஆரம்பிச்சான். அப்படிச் செய்யும் போது அவன் முகத்துல ஒரு சின்னச் சந்தோஷம் தெரிஞ்சத நான் பார்த்தேன். அப்போதான் எனக்கு அவனோட குணம் பிடிப்பட்டது. மற்றவர்களுக்குத் தேவையான சின்னச் சின்ன உதவிகளைச் செய்யக் கூடிய அவனுடைய ஆர்வம் எனக்குப் புரிஞ்சது”.

“இப்போ, அந்தப் பையனோட கால் சரியாகிப் பழைய நிலைமைக்குத் திரும்ப வந்துட்டான். இந்த ஒரு மாதக் காலமா, அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் கவின் தான் செய்தான். அவன் செய்த உதவிய பாராட்டும் விதமா தான் இந்த வாழ்த்தும், கரவொலியும். இந்தப் பாராட்டை அவனுக்காக மட்டும் செய்யல. படிப்புல, விளையாட்டுல, புறப்பாட நடவடிக்கைல, பண்பான செயல்களனால என்று பல நிலைகளில சிறப்பா செய்யுற பிள்ளைகளோட பெற்றோர்களை அழைச்சு பாராட்டுத் தெரிவிப்பது என்னுடைய பழக்கம்..”

“இந்த மாதிரிப் பெற்றோர்களைக் கூப்பிட்டு அந்தப் பிள்ளைகளைப் பாராட்டும்போது, அவர்களுக்கும் ஊக்கம் கொடுத்த மாதிரி இருக்கும். இதைப் பார்க்கும் மற்ற பிள்ளைகளும், இதே போலச் செய்து பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதல் வரும். ஏன்னா, சின்னச் சின்னக் கைத்தட்டல்களும், பாராட்டுகளும் தான் நம்மை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லுது.

“அந்த அளவில், கவினோட இந்தக் குணம் நிச்சயமா பாராட்டிற்குரிய ஒன்று. இந்தக் காலத்தில் வளரும் தலைமுறையினருக்குக் இத்தகைய மனிதநேயப் பண்பைத்தான் அதிகம் வளர்க்கனும். அந்தப் பண்பு கவினிடம் அதிகமாகவே இருக்கு. இந்தப் பண்பே அவனைப் பழைய கவினாக மாத்துறதோட அவன் வாழ்வை நிச்சயமாக உயர்த்தும். அதற்கு என்னாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்வேன் கவலைப்படாதீங்க’ என்று கூறிய ஆசிரியர் காவ்யா மறுபடியும் மாணவர்களைக் கரவொலி எழுப்பும் படி பணித்தார்.

அதைக் கேட்டதும், கபிலாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக, கைகள் அவளையறியாமல் தட்டிக்கொண்டே இருக்க கவினைப் பார்த்தாள்.

அவன் முகம் பௌர்ணமி நிலவாக ஒளிர்ந்தது..

பிரதீபா
பிரதீபாhttps://minkirukkal.com/author/pradeebhav/
நான் தற்பொழுது தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். கதை, கட்டுரை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -