பொம்மைகள் நகரம்

மூன்று கவிதைகள்

- Advertisement -

பொம்மைகள் நகரம்

வேஷம் போடும்
நாசம் செய்யும்
சாதி மத பிசாசு
ஆயுதமா ? அகிம்ஸையா?
சமரமா? சாத்வீகமா?
சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறோம்?
அதிர்ஷ்டம் வராது
கஷ்டம் தான் வரும்
கனவுகள் ஒரு போதும் நிஜங்களல்ல.
கொலைகாரனை நம்பி உங்களை ஒப்படைத்தீர்கள்
மரணத்திற்கு பயப்படுவதால் தப்பிக்க முடியாது
கொலை வாளை ஏந்தினால் ஒருவேளை பிழைக்கலாம்
புதையலை பூதம் காக்கிறது
பூதங்கள் முதலாளிகள் என அழைக்கப்படுகின்றன
வாரிசுகளை விட்டு விட்டு
செத்துப் போகின்றன
பொய் சொன்னாய் சந்தோஷப்பட்டேன்
உண்மை சொன்னாய் வருத்தப்பட்டேன்
சொல்லும் விஷயத்தில்
இருக்கிறது மனசு
நதியை புறக்கணித்தோம்
நம்மை நதி புறக்கணித்தது
நீரின்றி சாகும் உலகம்
பொம்மைகளை விரும்பினாள்
பொம்மைகளை வெறுத்தாள்
பொம்மைகள் பேசாமலிருந்தன
அருவருப்பை உமிழ்கிறது
அந் நொடி
யாருமற்ற வீதி.

??????????????????????????

வெறிச் சோடிய பொழுதில் கசிகிற துக்கம்

இரவு சுடுகிறது
பகல் குளிர்கிறது
இதயமேன் தள்ளாடுகிறது.
உன் உதடுகள் அழகான பட்டாம்பூச்சி
படபடப்பதேன் ?
அமர என் உதடுகள் தேன் நிரம்பி பூத்திருக்கின்றன
போவதைத் தடுக்க முடியவில்லை
உருப்படியாக எதுவும் நடக்கவில்லை
கடப்பதை வேடிக்கை பார்க்கிறேன்
வார்த்தைகளை வேட்டையாடினேன்
செத்து விழுந்தவைகளை கண்டுகருணை சுரந்தது
மெளனமாய் இருந்து விடலாமென முடிவு செய்தேன்
புத்தகம் தின்றவனும் இருந்தான்
புத்தகம் தின்கிறவனும் இருக்கிறான்
புத்தகம் தின்பவனும் இருப்பான்
வாசிக்க புத்தகம் கையில் எடுக்கிறேன்
யாரோ அழும் சத்தம் கேட்கிறது
குரல் புத்தகத்திற்குள்ளிருந்து வருகிறது
ஆணும் பெண்ணும் நட்பு கொள்கிறார்கள்
பெண்ணின் மனதில் வாளும் கேடயமும் மின்னுகின்றன
ஆணின் கனவுகளில் எச்சில் ஒழுக நாக்கு
தொங்கப்போட்ட நாய்.

??????????????????????????

உலர்ந்த கனவுகளின் விகசிப்பு

தூங்குவதாய் தூற்றுகிறீர்கள்
விழிப்பின் போது கிட்டும் வேதனையை மறக்கிறேன்
ஏதும் அற்றவனுக்கு
வேறேது வடிகால்
காலம் கண்ணீர் வடிக்கிறது
கவிஞனின் ஆன்மாவில் துடிப்படங்கவில்லை
கனவுகளில் நரகம் மெல்ல வளர்கிறது
சந்தோஷங்களை காற்றில் அனுப்புகிறேன்
இதயங்களில் பெற்றுக் கொள்ளுங்கள்
ஆனந்தங்கள் பொங்கட்டும்
கழுகுகள் போடும் வைரத்திற்காக காத்திருக்கிறான்
பெரும் பாறைகள் வந்து விழுகின்றன
சிந்துபாத் போல தமிழ் எழுத்தாளர்கள் விருதுக்காக காத்திருக்கிறார்கள்
வெயில் என் கூடவே வருகிறது
விரட்டினாலும் போக மாட்டேனென்கிறது
நிழலுக்குள் ஒளிகையில் மரத்தைச் சுற்றித் தேடுகிறது
அன்பு காக்காவாய் பறக்கிறது
துளியளவு தாகம் தீரவில்லை
அதன் அணத்தல் யாரும் கேட்கவில்லை
மிரட்சியூனாடக பயணிக்கிறேன்
தனிமையின் துணை சுமையாயிருக்கிறது
காலொடிந்த முயலாய் நான்
ஒவ்வொரு நாளும்
கடந்து போகிறது
ஒன்றும் அறியாமல் இருக்கிறேன்
எல்லாம் அறிந்தவர்கள் எவராவது இருக்கின்றனரா?
மெழுகுத் தண்டிலிருந்து
உருகிய
மெழுகுத்துளிகள்
கேட்பாரற்று.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -