அக்னிச்சிறகுகள்

சிறுகதை

- Advertisement -

“எப்படி உன்னால அவ முகத்த பக்கத்துல பாத்து பேச முடியுது ரம்யா?”

சொல்லும் போதே மாநகராட்சிக் கழிப்பறைக்குள் நுழைந்த முகபாவனை வைத்திருந்தாள் சுதா.

“உம் முகத்தையே பாக்குறேன். அவள பாக்குறதுக்கு என்ன?”

நினைத்ததை வாயால் சொல்லவும் செய்தாள்.

“எங்க முகரைக்கு என்ன இப்பக் குறைச்சல்? உன்ன மாதிரி முசுடுக்கிட்ட பேச்சு வச்சேன் பாரு. என்னைச் சொல்லணும்.”

கடைசிக் கவளத்தை டிபன் பாக்ஸில் அப்படியே வைத்து மூடி விட்டு அங்கிருந்து ஒரு முகத் திருப்பலுடன் நகர்ந்தாள் சுதா.

சுதாவிற்கு மட்டுமல்ல அந்த அலுவலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் இந்த சந்தேகம் உண்டு என்பது ரம்யாவிற்குத் தெரியும். மஞ்சு அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள் அவள் நினைவுக்கு வந்தது. நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தாள். அதே நிறத் துப்பட்டாவைத் தலையைச் சுற்றி முக்காடு போட்டிருந்தாள். அவளின் சிவந்த முகம் பாதி உருகிய மெழுகுவர்த்தியைப் போல இருந்தது. ஒருபுறம் பள்ளமும் மறுபுறம் மேடுமாக இருந்தது மூக்கு. கண்களில் கருப்பு நிறக் கண்ணாடி. தடித்திருந்த உதடுகளில் நிரந்தரமாய்த் தங்கிவிட்ட புன்னகை. அவளைப் பார்த்த அனைத்து முகங்களிலும் அதிர்ச்சி தெரிந்தது. அவள் பாவனையில் அது பழகிப் போயிருந்த அலட்சியம் தெரிந்தது. அவள் ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது முகத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

அவளை நேருக்கு நேராய்ப் பார்க்க நேர்ந்த போது வேறுபுறம் திரும்பிய அவர்களின் கண்கள் அவள் பார்க்காத போது அவளையே அளவெடுத்துக் கொண்டிருந்தன. அங்கே அவளை வித்தியாசம் பாராமல் ஏற்றுக் கொண்டது ரம்யா மட்டும்தான்.

அவர்கள் பணிபுரிந்தது ஒரு பெரிய கணினி பயிற்சி மையத்தில். எல்லோருமே ஷிப்ட் முறையில் வந்து பாடம் எடுப்பவர்கள். மஞ்சுவிற்கு நிரல் மொழிகள் தெரிந்திருந்தாலும் மாணவர்கள் அசௌகர்யமாக நினைக்கலாம் என்பதால் அவளை அக்கௌண்ட்ஸ் பிரிவில் ரம்யாவுடன் போட்டிருந்தார்கள்.

அங்கிருந்த அனைவருக்கும் மஞ்சுவின் கதையைத் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருந்தது. நிச்சயமாக ஏதோ காதல் விவகாரம் தான் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவளோடு சிநேகமாய்ப் பேசுவது போல் ஜாவா சொல்லிக் கொடுக்கும் மஹா பலமுறை அவள் வாழ்க்கையைப் பற்றி அவளிடம் துருவப் பார்த்திருக்கிறாள். “நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு அதுல இன்ட்ரஸ்டிங்கா ஒன்னும் இல்லக்கா.” என்று முடித்துவிடுவாள்.

“நாம வேணா உங்க ஆறு மணி கிளாஸ்கு வரானே விக்னேஷ். அவன் கதைய பேசலாமா? எல்லோருக்கும் கிளாஸ் முடிஞ்ச பிறகும் அவனுக்கு மட்டும் தனியா பாடம் நடக்குதாமே. அவ்ளோ ஸ்பெஷல் ஸ்டூடண்டா மேம்?” என்ற ரம்யாவின் தாக்குதலில் அவள் இவர்கள் இருவரோடும் பேசுவதையே நிறுத்திவிட்டாள் அவள்.

“உனக்குக் கோபமே வராதா மஞ்சு?” ஒருநாள் ரம்யா கேட்டாள்.

“ஏன் வராம. அதல்லாம் நெறயவே வரும். அதுக்கு ஏத்த மாதிரி இதோ இந்த வலது மூக்குல இதுக்கு முன்னாடி ஒரு பெரிய மச்சமே இருந்துச்சு. தொட்டதுக்கெல்லாம் கோபம்தான்.”

“சும்மா விளையாடாதே…”

“இல்ல ரம்யா… நிஜமாத்தான் சொல்றேன். ஆனா இந்த ரெண்டு வருஷத்துல எல்லாமே பழகிருச்சு. வீட்டை விட்டு வெளிய வரணும்னு நெனச்சப்பவே இந்தக் கோபம் எரிச்சல் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டேன். உண்மையச் சொல்லனும்னா என்னைப் பாத்ததும் அதிர்ச்சியாகுற ஒவ்வொரு முகத்தையும் பாக்கும் போது சிரிப்பு தான் வரும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தினுசா அதைக் காட்டும். அவங்க முன்னாடி சிரிக்காம இருக்கத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்.” சொல்லும் போது அவள் சிரிதாற்போல் இருந்தது. ஆனால் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை தவிர மாற்றம் தெரியவில்லை.

“உன் தம்பி மேல கூட கோவம் இல்லையா?” மெல்லிய குரலில் ரம்யா கேட்டாள்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் பார்வையை சன்னல் வழி ஓடவிட்டாள்.

“சொல்ல வேணாம்னா விட்ரு.”

“இதுல சொல்றதுக்கு என்ன? கோபம்னு சொல்றத விட, அதிர்ச்சினு தான் சொல்லணும். அவன நான் சித்தப்பா பையனா என்னைக்கும் பாத்ததில்ல. சொந்தத் தம்பியா தான் நெனைச்சிருக்கேன். அவனுக்குள்ள இவ்வளவு வன்மம் எங்கே ஒளிஞ்சிருந்ததுன்னு தெரியல.”

“எங்க வீட்டில என் கூடவே தான் வளர்ந்தான். என் பின்னாடியே அக்கா அக்கானு சுத்துவான். சின்ன வயசுல அவங்க அப்பா அடிச்சிட்டா எங்க வீட்டுக்குத் தான் ஓடிவருவான். நாலஞ்சு நாளைக்கு திரும்பிப் போகமாட்டான். நான் தான் அப்புறம் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பேன். இன்னைக்கு அவங்க அப்பாவுக்காக எதையும் செய்யத் துணிஞ்சிட்டான். தான் ஆடாட்டாலும் தன் தசை ஆடும் இல்லையா? யோசிச்சா அதுகூட சிரிப்பா தான் இருக்கு.”

“உனக்கு எல்லாமே சிரிப்பு தான்.”

“ஆமா.. கோவப்பட்டு என்னவாகப் போகுது? எல்லாம் பழைய மாதிரி ஆகிடுமா?”

“அப்படி இல்ல. ஆனா நம்மைக் காயப்படுத்துறவங்களுக்கு அந்த வலிய கொஞ்சமாவது காட்ட வேணாமா?”

“காட்டினா? நம்ம வலி குறையுமா? குறையுற வலியா அது? இதுவரைக்கும் இந்த முகத்துல எத்தனை ஆபரேஷன் பண்ணிருப்பாங்கனு நினைக்குற?”

 “மூணு.. நாலு.???” தயக்கத்துடன் ரம்யா கூறினாள்.

கடகடவென சிரித்தாள் மஞ்சு.

“கூடச் சொல்லிட்டேனா?”

‘இல்லை’ என்பதாய்த் தலையாட்டிவிட்டு இரு கைகளையும் விரித்துச் சொன்னாள்,

“பத்து”

ரம்யாவின் கண்கள் விரிந்தது.

“ஆமா. பத்து தான். அதுக்கு மேல ஒவ்வொரு ஆபரேஷன் முடிஞ்ச பிறகும் அடுத்த ஆறு மாசத்துக்கு சொல்ல முடியாத வலியும் வேதனையும் இருக்கும். அதைத் தாண்டி வரதுக்குள்ள உயிரே வெறுத்திரும். இன்னும் பண்ணனும்னு சொன்னாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆமா என்ன செஞ்சாலும் ஒரு ஒட்டுப் போட்ட துணி மாதிரிதான் இருக்கப் போகுது. அப்புறம் எதுக்கு பணத்த வீணடிச்சிட்டு? இந்த முகத்த தெனம் கண்ணாடில பாக்குறத விட மற்ற எந்த வலியும் ஒன்னும் பெரிசில்ல.” அவளின் விரல்கள் இறுகுவது தெரிந்தது.

“அன்னைக்கு அவன் என்னை பாக்கனும்னு சொன்னப்ப ரெண்டு வீட்லயும் சுத்தமா பேச்சு வார்த்தை இல்லை. பெரியவங்க சொத்துக்காக அடிச்சிக்கலாம். எங்களுக்கு அதுல எந்தப் பங்கும் இல்ல. அப்படித்தான் நான் நெனச்சேன். அவனுக்குப் பிடிக்குமேனு ஒரு டப்பால யாருக்கும் தெரியாம அம்மா செஞ்ச கருப்பட்டி பணியாரம் எடுத்திட்டு போனேன். அந்த டப்பானாலதான் ஒரு பக்க கண்ணாவது தப்பிச்சது.”

மீண்டும் சிரிப்பு.

“அவன் நான் பக்கத்துல வந்ததும் ஒரு சின்ன பாட்டில் மூடியத் தொறந்து ஏதோ வீசினான். முகத்த டப்பா வச்சி மூடுறதுக்குள்ள ஒரு பக்கம் முழுக்க பட்ருச்சு. முதல்ல ஏதோ விளையாடுறான்னு நினைச்சேன். பட்டவுடனே ஜில்லுனு ஐஸ் தண்ணி மாதிரி ஒரு குளிர்ச்சி. அடுத்த நிமிஷமே யாரோ என் முகத்தைக் கிழிச்சு மிளகாப் பொடிய வச்சி நல்லா தேச்ச மாதிரி எரிச்சல். அப்புறம் தீ புடிச்சு எரியுற மாதிரி இருந்துச்சு. அவன் பைக்ல ஏறி ஓடுன பிறகுதான் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சது.” எல்லாவற்றையும் அன்றே கொட்டிவிட வேண்டும் என்பது போல் அவள் தொடர்ந்து பேசினாள்.

“அவன் புத்திசாலி. அவனுக்குத் தெரியும். எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு. அப்பாவுக்கு தன் பொண்ணு அழகா இருக்காங்கிறதுல அவ்ளோ கர்வம். என் பொண்ணோட லட்சணமான மொகத்துக்கு மாப்பிள்ளை வரதட்சணை கொடுத்து கட்டிட்டு போவான்டின்னு அம்மாட்ட பெருமையாச் சொல்லுவாரு. ட்ரீட்மென்ட் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பின்னாலும் அப்பா மட்டும் ஒரு மாசம் என்னை நிமிர்ந்து பாக்கல. எப்பவும் தலையக் குனிஞ்சிட்டு தரையைப் பாத்துதான் பேசுவாரு. அதுவும் ஒன்னு ரெண்டு வார்த்தை தான். ஒரு நாள் தாங்க முடியாம அவர் முன்னாடி போய் நின்னு ‘என்னைப் பாருங்கப்பானு சொன்னேன். அவர் நிமிரல. ‘இதுதான்பா ரொம்ப வலிக்குது’ன்னு சொன்னேன். துண்ட எடுத்து முகத்தை மூடிட்டு ‘என் அழகுச் செலைய இப்படி அலங்கோலமாக்கிப் புட்டானே பாவி’னு கதறுனாரு. நான் அமைதியா நின்னேன். ஒரு நாள் இல்ல ஒருநாள் அவர் இப்படி அழுதுதான் ஆகணும். அது இன்னைக்கா இருக்கட்டும்னு நெனச்சுக்கிட்டேன்.”

“எனக்கு உண்மையிலேயே படிக்கறப்ப எந்தவொரு பெரிய கனவும் இல்ல. அதுவரைக்கும் சராசரி பொண்ணுங்க மாதிரி படிப்பு முடிச்சதும் கல்யாணம், நல்லா சம்பாதிக்குற கணவன், குழந்தை சீரியல்னு செட்டில் ஆகனும்னு தான் ஆசைப்பட்டேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எல்லாமே மாறிப் போச்சு. எதுக்காக இதைச் செஞ்சாங்க? நாங்க முடங்கி மூலையில உக்காரணும்னு தானே. அந்த சந்தோஷத்தை அவங்களுக்குத் தரக் கூடாதுன்னு தோணுச்சு. அந்தச் சம்பவத்திற்கு அப்புறம் எதையும் ஒரு கை பாக்கனும்னு துணிச்சல் வந்துச்சு. அந்த முகம் மட்டுமே நான் இல்லைன்னு காட்டணும்னு ஒரு வைராக்கியம் உண்டாச்சு. ஒவ்வொரு அவமானமும் அந்த வைராக்கியத்தை கூட்டிக்கிட்டே தான் இருக்கு” அவள் கண்களில் என்றும் இல்லாத கடுமையைக் காட்டி பின் சட்டென கனிந்தது.

“சரி.. சரி.. இன்னைக்கு செண்டிமெண்ட் காட்சிகள் போதும். கொஞ்சம் வேலையையும் பார்க்கலாம்.” அதிகமாக பேசிவிட்டோமோ என்று தன்னையே கட்டுப்படுத்துபவள் போல பேச்சை நிறுத்தினாள். ரம்யாவும் அதற்கு மேல் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.

அன்று வீடு திரும்பும் போது மின்சார ரயிலில் உட்கார இடம் கிடைத்தது. அலுவலகத்தில் அன்று நடந்த விஷயங்களை இருவரும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு வந்தனர். சிறிது நேரம் கழித்து அவர்களின் எதிர் இருக்கை காலியாக, அங்கே நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி வந்து அமர்ந்தாள். தலையில் தூக்கிப் போட்டிருந்த கொண்டையில் சிறிய மல்லிகைப் பூச்சரம் வைத்திருந்தாள். கையில் ஒரு நைந்து போன கட்டப் பை.

அவள் கோணலான ஒரு பார்வையோடு மஞ்சுவையே மேலும் கீழுமாக பார்த்தாள். “நல்ல காரியத்துக்குப் போகும் போது கண்ட விடியா மூஞ்சிங்க முகத்துல முழிக்க வேண்டியிருக்கே..” என அவள் முணுமுணுத்தது தெளிவாகவே கேட்டது. பின் முகத்தைத் திருப்புக் கொண்டாள்.

ரம்யாவிற்குமே இந்தப் பார்வைகள் இப்போது சற்று பழக்கமாகி இருந்தன. அதனால் இருவரும் பேச்சில் மூழ்கியிருந்தனர். அப்போது அந்தப் பெண் மஞ்சுவைப் பார்த்து “தூ..” எனச் சப்தமாகவே வராத எச்சிலைத் துப்பினாள். அதற்கு மேலும் பொறுக்க முடியாதவளாய் ரம்யா கேட்டாள்,

“என்னம்மா.. என்ன வேணும் உங்களுக்கு?”

அதற்குத் தான் காத்திருந்தவள் போல குரலை உயர்த்தி அவள் கத்தத் தொடங்கினாள்.

“என்னா வேணுமா? என்ன நோயோ கருமமோ? அத வச்சிக்கிட்டு இப்படி எல்லார் கூடவும் சகஜமா வருதே இந்தப் பொண்ணு. உங்களுக்கே தப்பா தெர்ல. அது பாட்டுக்கு எதுனா இழுத்து விட்டுச்சுனா என்னா பண்றது? இது மாறி ஆளுங்க வீட்டுல சும்மா கெடக்க வேண்டியது தானே. சீவி சிங்காரிச்சு வெளிய வரணும்னு அவசியம் என்ன? பாத்தாலே குடலப் புடுங்…”

“ஏய்… யாருக்கு நோயின்ற? உன்ன மாதிரி ஆளுங்களுக்குத் தான் நோயி. கண்ணுல.. மனசுல…” இன்னும் பேசப் போனவளை மஞ்சு தடுத்துவிட்டாள். அவளது கையைப் பற்றி அங்கிருந்து எழுப்பி வெளிப்புறம் அழைத்து வந்தாள்.

அந்தப் பெட்டியில் இருந்த அத்தனை பேரின் பார்வையும் இப்போது மஞ்சுவை மேயத் தொடங்கின. பின்னால் அந்தப் பெண்ணின் குரல் ரயிலின் ஓசையோடு போட்டி போட்டுக் கொண்டு கேட்டது.

“விடு மஞ்சு. நல்லா அந்தப் பொம்பளைய இன்னும் கேட்டிருப்பேன். என்னா பேச்சு பேசிருச்சு..” கொதிப்பு அடங்காதவளாய் ரம்யா பேசினாள். அவளுக்கு அழுகை வரும் போல் தோன்றியது.

“அவங்க நம்ம கண்ணுக்கு முன்னாடி பேசுனதுனால கேக்கலாம். இன்னும் நமக்குப் பின்னாடி எத்தன பேர் இது போல நினைச்சிருப்பாங்க? அவங்க எல்லாத்தையும் கேட்க முடியுமா?”

மஞ்சு ரம்யாவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டாள்.

“இது மாதிரி ஆளுங்களோடு பேச்சும் பார்வையும் என் வைராக்கியத்திற்கு உரம் மாதிரி. நியாயமா பாத்தா அவங்களுக்கு நன்றிதான் சொல்லணும்.” அவளின் பிடி இறுகியது. நம்ப முடியாதவளாய் அவளை ஏறிட்டுப் பார்த்தாள் ரம்யா. அதே புன்னகை. பின்னால் மறைந்து கொண்டிருந்த சூரிய ஒளியில் அவள் முகம் பிரகாசித்தது.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -