சகடக் கவிதைகள் – 15

படகோட்டியின் பாதம்

- Advertisement -

படகோட்டியின் பாதம்

வற்றாத ஊற்று ஒன்று
வழிந்தோடிக் கடலானது

தேவைக்கு ஊறினால்
தேனாய் இனித்திருக்கும்

ஆழிப்பேரலையாய்ப் பொங்கியதில்
அவ்வளவும் விஷமானதாம்

மலைபோல் குவிந்து பெருகுவதும்
அலையலையாய் அடித்துச் செல்லுவதும்
அன்றாடக் காட்சியாம்

எண்ணங்கள் என்று பெயராம்
எதற்கும் அடங்காத ஒரு துயராம்

மனிதனை நிலைகொள்ள விடாமல்
மடைமாற்றுதலே அதன் தொழிலாம்

உதவுவது போல் ஒன்று கிளம்பினால்
ஓராயிரம் சுயநலன்கள் பின்னுக்கிழுக்கும்

தற்பெருமையும் தன்னலமும் இணைந்து
தார்மீகத்தை முழ்கடிக்கும்

தனக்கென்ன லாபம் என்பதிலே
தானம்கூட விதிவிலக்கில்லையாம்

குறை காணுவது ஒன்றே அதன்
குன்றாத செல்வமாம்

ஒரு துளி அமுதத்தைச் சுற்றி
ஓராயிரம் உப்பு மேடுகள்

அமுதத்தை அடையும் வழியோ
ஆகாயத் தாமரையாம்

நச்சுக் கடலைக் கடைந்து
நன்முத்தெடுக்கும் முயற்சியில்
நாலடி எடுத்தால்
நாற்பதடி சறுக்குமாம்

ஆழ்கடல் தேடி – நில்லாது ஊறும்
ஊழ்கடலைத் தடுத்தாலன்றி
வாழ்வின் புதிர் விளங்காதாம்

படகொன்று உண்டாம்
பாதுகாப்பாய் கரைசேர

துடுப்புப் பிடித்தவன் கைகள்
துணைநிற்குமாம் எப்போதும்

கண்ணுக்குத் தெரியாததினால் அவன்
கண் நம்பிக்கை ஏற்படாதாம்
கண்ணே அவனால்தான்
காணுகிறதென்றாலும் கூட
காணும் வரை அது புரியாதாம்

திக்குத் தெரியாத காட்டில்
திடமாகப் பதிந்த பாதம் ஒன்று
திசைகாட்டும் முள்ளாகத்
திகழாதா என்ன..?

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -