நான்காம் பரிமாணம் – 61

13. அக அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -


ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். இன்று அக அதிகாரம் என்னும் புதிய பகுதியில் அகத்துக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அறிவியலையும் தெரிந்து கொள்ளப் போகிறோம். தொடங்கலாம் வாருங்கள்.

அகத்தின் அழகு


அகம் என்னும் சொல்லுக்கு தமிழில் வேறு எந்த ஒரு சொல்லுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை உண்டு. வேறு எந்த சொல்லை விடவும் அதிகப்படியான அருஞ்சொற்பொருள் கொண்டது இந்த அகம் தான்.  இதன் பொருளை சற்று உற்று நோக்கினால் சொல்லுக்குள் விரிந்திருக்கும் பலவிதமான பொருட்களை காணலாம். இவற்றுள் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சொற்கள் வீடு, இடம், மனம், வாழ்வியல், பாவம், நான் என்னும் எண்ணம் (அகந்தை), உயிர், உட்புறம் ஆகும். ஒரே ஒரு சொல்லுக்கு இத்தனை பொருட்களா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? இங்கே இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். நான் கூறிய அத்தனை சொற்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையவை. அந்தத் தொடர்பை புரிந்துகொள்வதற்கு அகத்தின் அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரையில் நடந்து இருக்கும் அனைத்து சம்பவமும் ஒரே ஒரு நியதியில் தான் நடக்கிறது. அதாவது ஒன்றாக இருக்கும் ஒரு பொருள் பிரிந்து இரண்டாக மாறுவது அல்லது பிரிந்து கிடக்கும் பொருள் ஒன்றாக சேர்வது. ஒன்றாக இருக்கும் பொருள் பிரிந்து இரண்டாக மாறுவதை நீங்கள் பிறப்பு என்று கூறுகிறீர்கள். அதுபோல பிரிந்து கிடக்கும் பொருள் ஒன்றாக சேர்வதை இறப்பு என்று கூறுகிறீர்கள். உதாரணமாக சூரியனில் இருந்து ஒரு சிறு துண்டாக பிரிந்து பூமி உருவாகியதை நீங்கள் பூமியின் பிறப்பாக கருதுகிறீர்கள். சூரியனின் ஆயுட்காலம் முடியும் தருவாயில் பூமி சூரியனுக்குள் சென்று கலந்து விடும் பொழுது பூமி என்னும் பொருள் முழுமையாக அழிந்து விடும். இவ்வாறு எந்த ஒரு பொருள் அழியும் பொழுதும் அதனை “வீடு”பேறு அடைவதாக கூட சிலர் கூறுவார்கள். தாயிடமிருந்து ஒரு குழந்தை பிரிந்து தனி உயிராக எப்போது பிறக்கிறதோ, அங்கே ஒரு புதிய “புற”ப்பொருள் உண்டாகிறது. “அக”வை அடைந்து விடுவதால் பின்பு இறப்பு ஏற்படுகிறது. இங்கே இறப்பு என்னும் சொல்லுக்கும் அகம் என்னும் சொல்லுக்கும் ஒரு தொடர்பு இருப்பது போன்று உங்களுக்கு தோன்றலாம். இந்தத் தொடர்பை தான் இந்த அதிகாரம் முழுவதும் பார்க்க போகிறோம்.

ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் உணவுக்காக நாள்முழுதும் வேட்டையாடிக் கொண்டிருந்தான். வேட்டையாடி கிடைக்கும் உணவில் கிடைக்கும் சக்தியின் மூலமாக அவன் உயிர் வாழ்ந்தால் கூட மற்ற மிருகங்களால் தன்னுடைய உயிருக்கு இருக்கும் ஆபத்தை அவன் உணர்ந்து தான் இருந்தான். இதனால் வேட்டையாடும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஆபத்தில்லாமல் மறைவாக வாழ்வதற்கு அவனுக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. வேட்டையாடும் குணம் என்பது மனிதனுக்கு இயற்கையாகவே இருந்தாலும்கூட அந்த இயற்கை குணத்தை விடுத்து வேறு எதுவும் செய்யாமல் அமைதியாக முடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அல்லவா? அந்த எண்ணம் தான் இன்று வரை மனிதனுக்கு வீடு என்ற ஒன்று தேவைப் படுவதற்கான வித்தாக இருக்கிறது. வீடு என்னும் இடத்திற்கு வந்த பின்பு வேட்டையாடும் இயற்கை குணம் தற்காலிகமாக மறைந்து அல்லது இறந்து விடுகிறது. 

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். மனிதனுக்கு அதிகப்படியான அறிவு இருப்பதால் ஓய்வு, வீடு போன்ற எண்ணங்கள் தோன்றி இருக்கலாம். மிருகங்களுக்கு இது எவ்வாறு தோன்றும்? உயிரினங்களுக்கு மட்டும்தான் இந்த எண்ணம் இருக்குமா அல்லது உயிரற்ற பொருள்களுக்கும் இந்த எண்ணம் வருமா? ஓய்வு எடுப்பதற்கு மட்டும்தான் வீடு பயன்படுமா அல்லது இதற்குள் இன்னும் பல அர்த்தங்கள் உள்ளனவா? இதனைப் புரிந்து கொள்வதற்கு பல்வேறு விதமான வீடுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -