நான்காம் பரிமாணம் – 59

12. விட அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் விட அதிகாரத்தில் நஞ்சின் பல்வேறு குணாதிசயங்களை கூறிக் கொண்டு வருகிறேன். நஞ்சு என்ற உடனேயே உயிரைப் பறிக்கும் பொருள் என்ற உங்கள் எண்ணம் இதுவரை சற்று மாறியிருக்கலாம் என்றும் நம்புகிறேன். இந்தப் பகுதியில் விஷம் எப்படி ஒரு உயிரை காக்க வல்லது என்பதையும் கூறப்போகிறேன்.


அமுதமாகும் நஞ்சு


சிறு வயதில் நீங்கள் காகம் தண்ணீர் பானைக்குள் கல்லை போட்டு தண்ணீர் மேலே திரும்பியவுடன் குடிக்கும் கதையையும் அதன்மூலம் காகத்தின் சமயோஜித புத்தியையும் பாராட்டி இருக்கலாம். ஆனால் காகத்தின் அறிவு அதைவிட மிகவும் அபரிமிதமானது. காக்கைகளுக்குள் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றுள் அளவில் சிறிய ஒரு வகையானது ஜாக்டா(Jackdaw) என்றழைக்கப்படுகிறது. இந்த காக்கைக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை அதன்மேல் வந்து ஒட்டிக் கொள்ளும் ஒட்டுண்ணிகள் தான். பல சிறிய வகை பூச்சிகள் காகத்தின் உடலில் ஒட்டிக்கொண்டு அதன் ரத்தத்தை குடித்து உயிர் வாழும். இதனால் காகங்களால் சரியாக பறக்க முடியாமல் நாளடைவில் இறந்து விடக்கூடும். இதனை தவிர்ப்பதற்காக அந்த காகங்கள் செய்யும் அறிவுப்பூர்வமான செயல் என்ன தெரியுமா? விஷ எறும்புகள் வாழும் புற்றில் போய் வேண்டுமென்றே நின்றுகொண்டு அதனிடம் கடி வாங்கும். விஷ எறும்புகள் ஆபத்து வரும் நேரத்தில் தன் அருகில் வரும் மற்ற விலங்குகளின் மீது ஒருவிதமான விஷத்தை பீச்சியடித்து தன்னை தற்காத்துக் கொள்ளும். எறும்பு புற்றின் மேல் வந்து உட்காரும் காகத்தின் மேல் ஒரு சில எறும்புகள் மட்டும் ஏறி கடித்தாலும் பலநூறு எறும்புகள் தங்கள் வாயில் இருக்கும் விஷத்தை காகத்தின் மீது பீச்சி அடிக்கும். இதனால் காகத்திற்கு கடுமையான வலி ஏற்பட்டால் கூட அதன் உடலின் மீது ஒட்டியிருக்கும் ஒட்டுண்ணிகள் அனைத்தும் உடனடியாக இறந்து விடும். பின்பு காகம் வழக்கம்போல சந்தோஷமாக பறந்து உயிர்வாழ முடியும். குறைந்த அறிவு கொண்ட காகம் கூட விஷத்தை உயிர்காக்கும் கருவியாக பயன்படுத்த முடிந்தால் ஆறறிவு கொண்ட மனிதன் என்னவெல்லாம் செய்திருப்பான் என்று யோசித்துப் பாருங்கள்!

விஷத்தை அமுதமாகும் வித்தையை கற்றுக் கொள்ள மனிதன், தன்னை சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும் பார்த்து நஞ்சின் முழு சுழற்சியையும் உணர்ந்துகொண்டான். விஷத்தின் சுழற்சி என்றால் என்ன தெரியுமா? அதன் ரசாயன மூலக்கூறு ஒருவரது உடலில் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதுதான் அது. அந்த மாற்றம்தான் எதிராளியின் உடல் இயக்கத்தை மொத்தமாக நிறுத்தக்கூடிய சக்தியை உருவாக்குகிறது. நஞ்சு எந்த ஒரு மாற்றமும் அடையாமல் உடலை விட்டு வெளியேறி விட்டது என்றால் அதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. உயிரைக் குடிக்கும் அந்த மாற்றம் ஏற்படுவதற்கு இரண்டே பொருட்கள் தான் தேவை. முதலாவதாக நஞ்சு, இரண்டாவதாக அது செயல்படும் சுற்றுச்சூழல். நீங்கள் பாம்பு எலியை சாப்பிடுவதை பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரியும். முதலில் அந்த பாம்பு எலியை தன்னுடைய விஷப் பல்லால் கடித்துக் கொன்றுவிடும். பின்பு சாவகாசமாக அதனை விழுங்கும். தன்னுடைய விஷம் ஏறிய அந்த எலியை சாப்பிடுவதால் பாம்புக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் பாம்பு எலியை கடிக்கும்போது அதன் விஷம் நேரடியாக அதன் ரத்தத்தில் சேரும். ரத்தம் எனும் சுற்றுச்சூழலில் மட்டும்தான் பாம்பின் விஷம் வேலை செய்யும். இதனை ஆங்கிலத்தில் Venom என்று கூறுவார்கள். அந்த விஷத்தை உண்ணும் பொழுது வயிற்றில் உள்ள செரிமான சக்தியால் அது வேலை செய்யாமல் அமைதியாக போய்விடும். நீங்கள் கூட Venom வகையை சார்ந்த நஞ்சை எடுத்து உண்டால் உங்களுக்கு ஒன்றும் நேராது. ஆனால் அதனை ஊசியின் மூலமாக உடலில் செலுத்தி கொண்டால் உடனடி மரணம் நிச்சயம். ஆனால் சில வகை விஷங்கள் நீங்கள் உணவுடன் சேர்த்து உட்கொண்டாலும் மரணத்தை கொடுக்கவல்லது. இதனைத் தான் ஆங்கிலத்தில் Poison என்று கூறுகிறீர்கள். 

இதுபோன்ற இயற்கையை தொடர்ந்து கவனித்து வந்த மனிதன், விஷத்தை சரியான அளவில் சரியான சுற்றுச்சூழலில் செலுத்தினால் தனக்குத் தேவையான சாதகமான நிகழ்வுகளும் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டான். உதாரணமாக பாம்பின் விஷத்தை மிகவும் குறைவான அளவில் சரியான முறையில் உட்கொள்ளும் பொழுது அது உங்கள் உடலை மொத்தமாக அழிக்காமல் உடலை சேதம் செய்யும் கிருமிகளை மட்டும் அழிக்கும் திறன் வாய்ந்ததாக கூட மாறும். இதுபோல பாம்பின் விஷத்தால் சர்க்கரை நோய், இருதய நோய் முதலிய பல்வேறு விதமான ஆபத்தான நோய்களுக்கும் நீங்கள் மருந்து கண்டுபிடித்துள்ளிர்கள். எந்த ஒரு உயிரையும் மொத்தமாக அழிக்கக் கூடிய கதிரியக்கம் கொண்ட பொருட்கள் கூட சரியான அளவில் உடலில் செலுத்தப்படும் பொழுது புற்றுநோயை அழிக்கும் கீமோதெரப்பி சிகிச்சையாக மாறுகிறது!  இந்த விஷம் உடலில் செலுத்தப்பட்ட உடன் நமக்கு தேவையில்லாத உயிரணுக்களை மட்டும் அழித்துவிடுகிறது. அப்படி அழிக்கும் பொழுது விஷமும் உருமாறி தன்னுடைய இயல்பை இழந்து விடும். இந்த சண்டையின் முடிவில் உங்கள் உடலுக்கு தேவையில்லாத உயிரணுக்களும் விஷமும் ஒருசேர தன்னிலை இழந்து உடலிலிருந்து வெளியேறிவிடும். நீங்கள் சாப்பிடும் பெரும்பாலான நோய்க்கான மருந்துகள் இந்த வகையைச் சார்ந்தது தான். ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அனைத்தும் உடலில் உள்ள ஒரு சில தேவையில்லாத உயிர்களை கொல்லும் சக்தி வாய்ந்த விஷமாகும். 

மனித உடலுக்குள் செலுத்தப்படும் மருந்து எனப்படும் விஷத்தை சரியான சுழற்சி முறையால் உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் முறையை மனிதன் கண்டுபிடித்த பின்பு கூட நிலத்தில் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் முதலான பல்வேறு விஷங்களை முறிக்கும் சுழற்சி முறையை கண்டுபிடிக்காததற்கு ஒரே காரணம் சுயநலம் மட்டும்தான். சிலமுறை நிலத்தில் பயிர் விளைந்து விட்டால் போதும் என்று வருங்காலத்தைப் பற்றி நினைக்காமல் செய்யும் இந்தச் செயலால் விஷத்தின் சுழற்சி முழுவதும் தடைபட்டு விடுகிறது. சுயநலம் என்னும் இந்த ஒரு சிறிய எண்ணம் உலக நிகழ்வுகளில் ஏற்படுத்திய மிகப்பெரிய விளைவைப் பார்த்தீர்களா?  காரணம் சுயநலம் என்பதே மிகப்பெரிய விஷமாகும். மனதில் ஏற்படும் விஷம் தான் பின்பு ஒரு விஷப்பொருளாக உருவெடுக்கிறது. அது எப்படி சாத்தியமாகும்? மனதின் விஷத்தை அடக்குவது எப்படி? அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -