நான்காம் பரிமாணம் – 49

10. பிறப்பதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் பிறப்பதிகாரத்தில் பிறப்பினுள் ஒளிந்திருக்கும் பல்வேறு ரகசியங்களையும் கூறிக் கொண்டு வந்திருக்கிறேன். பிறப்பின் காரணம் மற்றும் பிறக்கும் முறைகளைப் பற்றி இதுவரை பேசியாகிவிட்டது. இன்று பிறப்புக்குள் இருக்கும் இருமைக்கான காரணத்தை அலசி ஆராயப் போகிறோம்.

பிறப்பின் இருமை


குழந்தை உருவாவதன் மூலமாக பெற்றோர் தங்களுடைய ஒரு அச்சு நகலை உலகிற்கு விட்டுச் செல்ல முடிகிறது. வாழையடி வாழையாக ஒரு வம்சம் தழைப்பதன் மூலமாக எந்த ஒரு செடியும் மரமும் கூட தங்களுடைய செயல்பாடுகளை தொடர்ந்து கொண்டே இருக்க முடியும். அப்படியானால் எந்த ஒரு உயிரினத்திற்கும் ஒரு பெற்றோர் மட்டும் போதும் தானே? ஏன் தாய்,தந்தை எனும் இருவேறு பெற்றோர்கள் தேவைப்படுகிறார்கள்? இதன் பதிலை தெரிந்துகொள்வதற்கு வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கவேண்டும். உலகம் தோன்றிய ஆதிகாலத்தில் அமீபா போன்ற ஒற்றை செல் கொண்ட உயிரினங்கள் தான் முதலில் தோன்றியது. இப்படிப்பட்ட உயிரினங்களின் இனப்பெருக்கத்தை பார்த்தால் ஒன்று நன்றாக புரியும். இவற்றில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. மேலும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் ஒரே ஒரு பெற்றோரை மட்டும்தான் கொண்டிருக்கும். தொடக்கத்தில் இப்படிப்பட்ட பிறப்புகள் போதுமானதாகவே இருந்தது. ஆனால் இதில் இருக்கும் பிரச்சனை என்ன தெரியுமா? புதிதாகப் பிறக்கும் குழந்தையும் அச்சு அசலாக பெற்றோரை போன்று தான் இருக்கும். ஒரே ஒரு பெற்றோரிடம் உருவாகும் தலைமுறையானது எவ்வளவு காலம் சென்றும் தன்னுடைய முன்னோர்களிடமிருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே இருப்பதால் சுற்றுச்சூழல் மாறும்பொழுது அழிந்துவிடும். எடுத்துக்காட்டாக, தண்ணீருக்குள் வாழும் அமீபா, அந்த நீர்நிலை வற்றிப் போய்விட்டால் அழிந்துவிடும். கடலைத் தவிர வேறு எந்த நீர் நிலையிலும் தண்ணீர் தொடர்ச்சியாக இருக்கும் என்று உறுதியளிக்க முடியாது. ஆகவே இந்த உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழ வேண்டுமென்றால் ஒன்று தொடர்ச்சியாக நீர் இருக்கும் இடங்களில் தங்க வேண்டும் அல்லது தங்களை பரிணாம வளர்ச்சியில் மேம்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லாத இடங்களிலும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையில் இந்த இரண்டு வகையில் எது நடந்தது தெரியுமா? இவை இரண்டுமே நடந்தது! தன்னை மாற்றிக் கொள்ள முடியாத உயிரினங்கள் தொடர்ந்து அமீபாக்களாகவே இருந்தது. ஆனால் தன்னை உருமாற்றிக் கொள்ள முடிந்த உயிரினங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இறுதியில் மனிதனாக மாறியது!

ஒரு ஒற்றை செல் உயிரினம் மனிதனைப்போல் ஒரு சிக்கலான கட்டமைப்பை கொண்ட உயிரினமாக மாறுவது எவ்வாறு சாத்தியம்? அங்குதான் இருமை கோட்பாடு உதவுகிறது. எந்த ஒரு உயிருக்கும் ஒரே ஒரு பெற்றோர் இருந்தால் அந்த ஒரே ஒரு பெற்றோரின் உடல் அமைப்பை அப்படியே பார்த்து குழந்தையானது வடிவமைத்துக் கொள்ளும். அதே சமயத்தில் இரண்டு பெற்றோர்கள் இருந்தால் ஒருவரிடமிருந்து சில பகுதியையும் மற்றவரிடமிருந்து மீதமுள்ள பகுதியும் கொண்டு புதிதாக ஒரு ரகமாக உடலை உருவாக்கிக் கொள்ள முடியும். இப்படி உருவாகிய குழந்தைகள் தங்களுடைய புதிய உடல் அமைப்பால் பெற்றோர்களிடம் அல்லாத புதிய குணாதிசயங்களையும் வளர்த்துக் கொள்ளும் திறன் பெறுவார்கள். இப்பொழுது உங்களுக்கு வேறு ஒரு கேள்வி தோன்றலாம். இரண்டு பெற்றோர்கள் இருந்தால் வேகமான பரிணாமவளர்ச்சி கிடைக்குமென்றால் மூன்று அல்லது நான்கு பெற்றோர்கள் ஒரு குழந்தையை உருவாக்கினால் மேலும் வேகமாக பரிணாம வளர்ச்சி நடக்கும் அல்லவா? ஏன் அவ்வாறு நடக்கவில்லை? உண்மையில் பார்த்தால் இரண்டு பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தை தன்னுடைய அடுத்த சந்ததியில் இரண்டு பெற்றோர்களுக்குப் பிறந்த மற்றொருவருடன் கூடி அதனால் பிறக்கும் குழந்தை இந்த நான்கு பேரின் குணாதிசயங்களையும் கொண்டிருக்கும் அல்லவா? ஆனால் இது ஒரே தலைமுறையில் நடக்காமல் இரண்டு தலைமுறையில் நடக்கிறது. இப்படி ஒரு ஆயிரம் தலைமுறைகளை சேர்த்து பார்த்தால் உங்கள் ஒவ்வொருவருடைய பூர்வீகமும் சுமார் லட்சக்கணக்கான பெற்றோர்களை கொண்டிருக்கும். இவர்கள் அனைவரின் கலவைதான் நீங்கள். ஒரே தலைமுறையில் பல பெற்றோர்கள் கலந்து ஒரு உயிரை உருவாக்கினால் அதன் விளைவாக முற்றிலும் வேறுபட்ட உயிரினம் உருவாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி அதிவிரைவாக மாறுவதை உங்கள் விஞ்ஞானிகள் mutation என்று அழைக்கிறார்கள். இப்படி உருவாகும் பிராணிகளால் பல்வேறு விபரீதமான மாற்றங்களும் உலகில் நிகழும். டைனோசர் போன்ற உயிரினங்கள் உருவானதற்கு mutation ஒரு காரணம் என்னும் அறிவியல் கூற்றும் உள்ளது. இந்த மாதிரி உருவாகும் பிராணிகள் எவ்வளவு வேகமாக மாறுகிறதோ அவ்வளவு வேகமாக அழிந்து விடுகிறது. இதனால் காலப்போக்கில் இரண்டு பெற்றோர்கள் மூலமாக வரும் குழந்தைகள் தான் நீடித்து வாழ முடிகிறது.

பிறப்பில் ஏற்படும் இந்த இருமை தான் தாய் தந்தை எனும் இருவேறு பெற்றோர்கள் உருவாவதற்குக் காரணமானது. ஒரு குழந்தையின் இரு பெற்றோர்களும் ஒரே மாதிரி இருந்தால் எந்தப் பெற்றோரிடமிருந்து எந்த பகுதியை எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் வரும். இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக இயற்கையின் பரிணாமத்தில் உருவானதுதான் தாய் மற்றும் தந்தை ஆகிய இருமை. ஒரு புதிய உயிரை உருவாக்குவதில் இருவருக்கும் வெவ்வேறு பங்கு இருக்கிறது. ஒரு தந்தை கொடுக்கும் உயிரணுக்களை தாயால் கொடுக்க முடியாது. அதே சமயத்தில் தாய் உருவாக்கிக் கொடுக்கும் கரு முட்டையில் இருக்கும் உயிரணுக்களை தந்தையால் உருவாக்க முடியாது. இவை இரண்டுமே ஒன்றாக இணைந்தால்தான் புதிய உயிர் உருவாகும். இந்த புதிய உயிர் ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரை அதனை பாதுகாத்து வளர்ப்பது பொதுவாக தாயின் பங்குக்கு போய்ச் சேர்ந்தது. ஆனால் இதற்கும் உலகில் விதிவிலக்கு உண்டு. கடல் குதிரைகள் எனும் உயிரினம் என்றுமே தன்னுடைய தாயின் வயிற்றில் வளராமல் தந்தையின் வயிற்றில் தான் வளரும். தாயின் வயிற்றில் உருவான கரு முட்டை சிறிது வளர்ந்த உடனேயே தாய் தன்னுடைய முட்டையை தந்தையின் வயிற்றில் திணித்து விடும். அதனைப் பெரிதாக்கி பிரசவிக்க வேண்டிய வேலை தந்தையைத் தான் சேரும்! 

ஒரே ஒரு பெற்றோரை கொண்டு வளரும் உயிரினங்கள் யாவையும் காலப்போக்கில் மிகவும் குறைவான வளர்ச்சியை மட்டுமே பெறும். இதனை எளிதாக உங்களால் பார்க்க முடியும். சிறிய வகை செடி கொடிகள் மற்றும் பூச்சி இனங்கள் என அதிக பரிணாம வளர்ச்சி அடையாத அனைத்தும் ஒரு பெற்றோரை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் மனிதன் உட்பட முதுகெலும்பு உள்ள பிராணிகள் அனேகமாக இரண்டு பெற்றோர்களை கொண்டிருக்கும். இந்த உயிரினங்களுக்கு அறிவு போன்ற பல்வேறு விதமான அதிகமான வளர்ச்சி உடலில் இருக்கும். ஆனால் முதுகெலும்பு உள்ள பிராணிகளில் கூட சில உயிரினங்கள் இதில் விதிவிலக்காக உள்ளது. இவ்வாறு நடப்பதை உங்கள் விஞ்ஞானிகள் Parthenogenesis என்று கூறுகிறார்கள். 

பிறப்பில் இருக்கும் இந்த இருமையால் உங்கள் உடல் மட்டும்தான் பரிணாம வளர்ச்சி அடைகிறது என்று நினைத்துவிடாதீர்கள். பிறப்பில் இதைவிட ஆழமான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதற்கும் மனதிற்கும் ஒரு முக்கியமான தொடர்பும் உள்ளது. அது என்ன என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -