நான்காம் பரிமாணம் – 48

10. பிறப்பதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

 

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன்.  பிறப்பதிகாரத்தில் பல்வேறு விந்தையான பிறப்பின் கதைகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். பாலூட்டிகள் மற்றும் முட்டையிடும் உயிரினங்கள் எவ்வாறு உருவாகின? இவை இரண்டுக்கும் இடையில் இருக்கும் மற்றொரு பிரிவு என்ன போன்ற விஷயங்களுடன் சில சுவாரஸ்யமான தகவல்களையும் இங்கு நான் உங்களுக்கு கூறப்போகிறேன்.

பிறப்பின் ரகசியம்

சமீப காலங்களில் மனிதர்களாகிய நீங்கள் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மாற்றாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறீர்கள் அல்லவா? அவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு உடலில் எந்த விதமான மாற்றம் ஏற்படுகிறது என்பதை உங்கள் விஞ்ஞானிகள் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதன் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறக்கும் குழந்தைகளின் தலை இயற்கையான முறையில் பிறக்கும் குழந்தையின் தலையை விட சற்று பெரிதாக வளர்ந்து விடுகிறது. இதனால் என்ன பிரச்சனை தெரியுமா? தொடர்ந்து சில தலைமுறைகளாக அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக் கொள்ளும் வம்சத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளவே முடியாது. சராசரியை விட பெரிய தலையை கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தையின் தலை கருவிலே பெரியதாக இருக்கும். அதனால் குழந்தையை இயற்கை முறையில் பிரசவிக்க முடியாது. சரி. அறுவை சிகிச்சையை இனிமேல் தவிர்க்கவே முடியாதா? இதற்கு இயற்கை என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை அதன் வரலாற்றில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

பூமியில் உயிர்கள் வளர்ச்சி அடைந்து வந்த பொழுது தரையில் ஊர்ந்து, வானத்தில் பறந்து , நீருக்குள் சென்று உணவு சேகரிக்கும் வெவ்வேறு விதமாக உயிரினங்களும் தோன்றின. இவற்றில் நிலத்தில் ஊர்ந்து சென்று உணவு தேடும் உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் கர்ப்ப காலத்தில் உணவு தேடுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு பறவை தன்னுடைய வயிற்றில் இருக்கும் கருவை சுமந்துகொண்டு பறந்து செல்ல முயன்றால் சிறிது நேரத்திலேயே சோர்வடைந்து உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. அதனால் கரு ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்த உடனே தனது உடலிலிருந்து கருவை வெளியேற்றி உடலை இலகுவாக்கிக் கொள்கின்றன. இருந்தாலும் கரு வளர வேண்டும் என்ற காரணத்திற்காக அதனை ஒரு பாதுகாப்பு கவசத்துடன் வெளியேற்றும் நிகழ்வைத்தான் தான் நீங்கள் முட்டை என்று கூறுகிறீர்கள். நீரில் இருக்கும் பலவிதமான மிருகங்களும் கூட இதே வழியை தான் பின்பற்றின. நிலத்தில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கும் கர்ப்ப காலத்தில் உணவு தேடுவது கஷ்டமாகத்தானே இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இங்கேதான் நிலத்தில் வாழும் விலங்குகள் சற்று வித்தியாசமான முறையைக் கையாண்டது. பறவைகளும் நீரில் வாழும் விலங்குகளும் தங்களது உடல் பலத்தை மட்டுமே நம்பி உணவு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் முட்டை இடுவது என்ற கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டன. நிலத்தில் வாழும் உயிரினங்கள் தங்களுடைய உணவைத் தேடிச் செல்லாமல் உணவே தேடி வருவது போன்ற ஒரு அறிவுப்பூர்வமான செயல்பாட்டில் ஈடுபட்டதால் அவற்றிற்கு முட்டையிடுவது தேவையில்லாத ஒரு செய்கையாக மாறிப்போனது! ஆக மொத்தத்தில் பார்த்தால் ஒரு உயிரினம் எவ்வாறு பிறக்கிறது என்னும் சிறிய நிகழ்வு தான் ஒரு காலத்தில் அறிவு எனும் மூலதனத்திற்கு முதலீடாக மாறியது!

நிலத்தில் வாழும் உயிரினங்கள் எவ்வாறு குட்டிகளை ஈனுகிறது என்பது பல சுவாரசியங்களை உள்ளடக்கியதாகும். குட்டிகளை ஈனும் உயிரினங்கள் தங்களின் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி நான் சென்ற பகுதியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். நீங்கள் அனைவரும் பார்த்து பயப்படும் தேள் ஒரே பிரசவத்தில் 100 குட்டிகள் வரை உருவாக்கும் திறன் கொண்டதாகும். இவை அனைத்தையும் அதன் வயிற்றுக்குள் வைத்துக்கொள்ள வழியில்லாததால் அவை பாதி வளர்ந்த உடனேயே ஈன்று விடும். பிறந்த குட்டிகளுக்கு அதன் முதுகுப் பகுதியில் வளரவேண்டிய எலும்பு மற்றும் ஓட்டுப் பகுதி வளர்வதற்கு மேலும் சில காலங்கள் தேவைப்படும் என்பதால் அதுவரை தாய் தேளானது குட்டிகளை தன் முதுகின் மேல் குட்டிகளை வளர்த்துக்கொண்டு சில காலம் உயிர் வாழும். குட்டிகள் அனைத்தையும் முதுகில் சுமக்கும் பொழுது உணவு தேடி விடுவதற்கு சிரமமாக இருந்தால் என்ன செய்யும் தெரியுமா? அந்த குட்டிகள் சிலவற்றையே பிடித்துத் தின்றுவிடும்! அறிவு என்ற ஒன்று வந்தவுடன் உயிரினங்கள் செய்யும் வேலை எந்த ரகம் என்று இந்த எடுத்துக்காட்டிலேயே உங்களால் புரிந்து கொள்ள முடியும். 

ஆஸ்திரேலியாவில் வாழும் கங்காரு மிருகம் பாலூட்டிகள் மற்றும் முட்டை ஈனும் உயிரினங்களுக்கு இடைப்பட்டதாகும். கங்காரு குட்டியின் கால் மிகவும் பெரிதாக இருப்பதால் முழுதாக வளர்ந்த பின்பு பெற்றெடுக்க முடியாமல் இருக்கும் கங்காரு அளவில் மிகச் சிறியதாக இருக்கும் பொழுதே கங்காரு குட்டியை  பெற்றெடுத்து விடுகிறது. பின்பு அதன் குட்டி நன்கு வளரும் வரை அதன் வயிற்றில் இருக்கும் ஒரு பைக்குள்  வைத்து வளர்த்துக்கொண்டு வரும். இதுபோல முட்டைக்கும் குட்டிக்கும் இடையில் இருக்கும் உயிரினங்களை marsupials என்று நீங்கள் அழைக்கிறீர்கள். இப்படி விதவிதமாக தனது அறிவாற்றலைக் கொண்டு தரையில் வாழும் விலங்கினங்கள் தன் பிறப்பை மாற்றிக்கொண்டு வந்து தனது அறிவாற்றலை மிகவும் அதிகமாக உபயோகித்த பொழுது உருவானவன் தான் மனிதன். இந்த கதையிலிருந்து உங்களுக்கு இருவேறு கருத்துக்கள் தோன்றலாம். முழுமையாக இயற்கையில் வளர்ச்சி பெறாமல் கருவை அறுவை சிகிச்சை செய்துகொண்டு மனிதன் குழந்தை பெற்றுகொள்வது பறவையினங்களில் இருக்கும் முட்டை இடுவதை நோக்கி நகரும் முயற்சியா? இல்லை தலையின் அளவு பெரியதாகி பெரிய மூளை கொண்டு அறிவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துக் கொண்டு செல்லும் புதிய முயற்சியா? இதன் முடிவை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையிலேயே அறிவின் வரலாறு ஒளிந்து கொண்டு இருந்தால் இதற்குமேல் பிறப்பின் சிறப்பை வேறு எப்படி சொல்ல முடியும்! அறிவு என்ற ஒன்று பிறந்தவுடன் அதனை மேலும் மேலும் ம மெருகேற்றிக் கொள்வதற்காக உயிரினங்கள் செய்த மாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன் உச்சகட்டம் தான் தாய் தந்தை என்று இரு பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகும். இதில் ஒளிந்துகொண்டு உள்ள பல்வேறு அதிசயங்களை அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -