இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
காலம் என்னும் நான் பிறப்பதிகாரத்தில் பிறப்பை சுற்றிய தகவல்களை சென்ற பகுதியில் ஆரம்பித்து வழக்கம்போல அண்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதன் கதையை கூற ஆரம்பித்துள்ளேன். இன்று மாற்றத்தின் கதையைத் தொடங்கி பிறப்பின் விந்தையை விளக்க முயற்சிக்கிறேன். பகுதிக்குள் செல்வோமா?
மாற்றம் எனும் விதை
பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த ஒரு பொருளும் தொடர்ச்சியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற இயல்பை எப்பொழுதுமே கொண்டிருக்காது. இதனை ஜடத்தன்மை என்ற தலைப்பில் வேறொரு அதிகாரத்தில் பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஜடப் பொருட்கள் கூட ஏதோ ஒரு சமயத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் சம்பவமும் நிகழும். அந்த மாற்றத்திற்கு நீங்கள் வைத்த பெயர்தான் பிறப்பு! பிறப்பு இரண்டு வகைப்படும். முதலாவதாக தன்னை அழித்துக்கொண்டு முழுமையான வேறு ஒரு வடிவத்தை எடுத்துக் கொள்வது. இதனை ஆங்கிலத்தில் Semelparity என்பீர்கள். மற்றொன்று தன்னுள் இருந்து பல்வேறு புதிய வடிவங்களை உருவாக்குவது. இதனை Iteroparity என்று கூறுவீர்கள். பிரபஞ்சத்தில் உண்டான முதல் பெருவெடிப்பு என்பது Semlparity வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு புள்ளியாக இருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து அனைத்து திசைகளிலும் சிதறி ஆரம்பத்தில் இருந்த உருவம் என்னவென்றே தெரியாமல் போய் மீண்டும் பழைய நிலைமைக்கு வர முடியாமல் சுற்றி திரிகிறதல்லவா? இரண்டாவதாக, பூமியின் ஒரு பகுதி பிரிந்து சந்திரன் எனும் துணைக்கோள் உருவானது Iteroparity வகையைச் சார்ந்தது. இங்கே பூமி முழுமையாக அழிந்து விடாமல் சந்திரன் புதிதாக உருவாக்கியது.
சரி. இதற்கும் பூமியில் நீங்கள் காணும் செடி கொடி, விலங்குகள், மனிதர்கள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் நடக்கும் பிறப்புக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? சுருக்கமாக சொல்லப்போனால் மேலே கூறிய இரண்டு வகைகளில்தான் உயிரினங்களின் பிறப்பு ஏற்படுகிறது. நீங்கள் வீட்டில் வாழை மரம் வளர்த்தீர்கள் என்றால் இத்தனை சுலபமாக பார்க்க முடியும். எந்த ஒரு வாழை மரமும் முழுதாக வளரும் வரை அதற்கு கன்றுகள் உருவாகாது. ஆனால் அதன் இறுதி நோக்கமாக வாழைத்தார் குலை தள்ளியவுடன் தனது வாழ்வில் ஒரே ஒரு முறை அதன் காலடியிலேயே தன்னுடைய கன்றுகளை உருவாக்கிவிட்டு அழிந்துவிடும். அறிவியல் பூர்வமாக பார்த்தால் தன்னுடைய முழு உயிர் சக்தியையும் கொடுத்து தன்னுடைய கன்றுகளை உருவாக்கிவிட்டு தாய் வாழைமரம் இறந்து போய்விடுகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் தாய் வாழை மரம்தான் தன்னை முழுவதுமாக உருமாற்றி கன்றாக மலர்கிறது. இது நான் கூறிய Semelparity வகையைச் சார்ந்தது. வாழை மட்டுமில்லாமல் கத்தாழைச்செடி (Agave), நீங்கள் தினமும் சாப்பிடும் அரிசி, கோதுமை செடிகளின் பிறப்பு கூட இது போலவே தான். தனது மொத்த சக்தியையும் நெல் மணியில் இறக்கிவிட்டு அந்தச் செடி உடனடியாக இறந்து விடுகிறது. விலங்குகளில் ஆக்டோபஸ் போன்ற பல்வேறு வகை மீன்கள் தன்னுடைய சந்ததியை வெளியீடும் நேரம்தான் அதனுடைய இறக்கும் தருவாய் ஆகும். இந்த வகை பிறப்பில் தாய் உயிரினம் தனது உடலில் உள்ள அனைத்து சக்தியையும் குழந்தைக்கு கொடுத்து விடுவதால் பிறக்கும் குழந்தைக்கு பெற்றோர்களின் பாதுகாப்பு என்ற ஒன்று தேவையே படாது.
உலகிலுள்ள அனேகமான பரிணாம வளர்ச்சி அடைந்த உயிரினங்கள் யாவையும் Iteroparity வகையில்தான் பிறக்கின்றன. உதாரணத்திற்கு மனிதனை சொல்லலாம். மனிதர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் அவர்கள் இறந்து போய் விடுவதில்லை. மேலும் தொடர்ச்சியாக அவர்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஒரு தாயும் தந்தையும் தன்னுள் உள்ள ஒரு சிறு பகுதியை குழந்தையாக உருவாக்கி விடுவதனால் அவ்வாறு பிறக்கும் குழந்தை தொடக்கத்தில் மிகவும் பலவீனமாக இருக்கும். இதனை தனியாக விட்டு விட்டால் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. இதனை சரி கட்டுவதற்காக தான் பெற்றோர்களின் கவனம் (Parental care) எனப்படும் பண்பு இயற்கையாகவே உருவானது. பரிணாம வளர்ச்சியில் இறுதியாக வந்த விலங்கினங்கள் அனைத்திற்கும் அதிகமாகவே உண்டு. உராங்குட்டான் எனும் குரங்கு, தன்னுடைய குட்டியை 6 முதல் 8 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக கவனித்துக் கொள்கின்றது. அதனை விட வளர்ச்சி அடைந்த மனிதன் எவ்வளவு வருடங்கள் தனது குழந்தையை பார்த்துக் கொள்கிறார்கள் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். பூமியில் இருந்து பிரிந்து சென்ற நிலவு தொடர்ச்சியாக பூமியின் அரவணைப்புக்கு உள்ளே இருக்க போவது கிடையாது. உயிரினங்களுக்கு எவ்வாறு சிலவருடங்கள் பெற்றோர்களின் கவனம் கிடைக்கிறதோ அதுபோலவே நிலவுக்கு சில கோடி வருடங்கள் மட்டும்தான் பூமியின் அரவணைப்பு கிடைக்கும். நிலா ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து சுமார் மூன்றரை சென்டி மீட்டர் தொலைவுக்கு பிரிந்து சென்று கொண்டே இருக்கிறது. சில கோடி வருடங்கள் கழித்து நிலவு பூமியிலிருந்து மொத்தமாக விடுபட்டு விலங்குகள் போலவே தனியாக சென்று விடும்.
பிரபஞ்சத்தில் நடக்கும் இரண்டு பிறப்பு வகைகளையும் உயிரினங்களுக்குள் நடக்கும் பிறப்பு வகையிலும் நீங்கள் மேலும் ஒரு ஒற்றுமையைக் காண முடியும். பிரபஞ்சத்தின் தொடக்கம் Semelparity யில் ஆரம்பித்து சிறிது சிறிதாக மாறி Iteroparity யில் எப்படி வந்து நிற்கிறதோ அதுபோலவே பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில் இருக்கும் உயிரினங்கள் Semelparity யாகவும் பின்பு பண்பட்ட வளர்ச்சியில் Iteroparity ய்யை நோக்கி செல்கிறது! ஆகவே அண்டத்தில் உள்ள பிறப்பு தான் பிண்டத்தில் நடக்கும் பிறப்பாக உருமாறுகிறது. பிறப்பு என்று நீங்கள் ஒரு சிறப்புச் சொல்லை நீங்கள் உருவாக்கினாலும் அடிப்படையில் இவை அனைத்துமே இயற்கையில் நடக்கும் மாற்றம் மட்டும்தான். இந்த மாற்றத்தின் கால அளவு சமச்சீராக இல்லாமல் போவததைத்தான் நீங்கள் தடுமாற்றம் என்று குறிப்பிடுகிறீர்கள்.
இங்கே இரண்டு அடிப்படை பிறப்புகளைப் பற்றி பார்த்தாகிவிட்டது. ஆனால் பிறப்புக்குள் இன்னும் பல விதமான பிரிவுகள் உள்ளன. உதாரணமாக பறவைகள் ஏன் தன்னுடைய குஞ்சை நேரடியாகப் பெற்றெடுக்காமல் முட்டை இடுகிறது? கலவியற்ற பிறப்புக்கும் கலவியால் ஏற்படும் பிறப்பிற்கும் என்ன வித்தியாசம் போன்ற கேள்விகளுக்கு இயற்கையில் கிடைக்கும் பதில் என்ன என்பதையும் அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.