நான்காம் பரிமாணம் – 31

7. சுவை அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். யுத்த அதிகாரத்தில் பல்வேறு விதமான சண்டை சச்சரவுகளை பார்த்த பின்பு, மாறுதலுக்காக யுத்தங்கள் இல்லாத ஒரு அமைதியான அதிகாரத்தை பார்க்கப் போகிறோம். ஆம். சுவை அதிகாரம் என்னும் இந்த தலைப்பில் சுவையான பல விஷயங்களை கூற போகிறேன். சுவை என்றவுடன் உணவை சாப்பிடும் போது உங்களுக்கு கிடைக்கும் உணர்வை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உணர்ந்து அனுபவிக்கும் அனைத்து விதமான அனுபவங்களிலும் சுவை ஒளிந்துள்ளது. அவற்றைப் பற்றி தான் இங்கே விரிவாக பார்க்க போகிறோம். இருந்தாலும் உணவின் சுவையை உங்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும் என்பதால் அதிலிருந்தே இந்த அதிகாரத்தை தொடங்குகிறேன்.

உணவும் சுவையும்

நீங்கள் சாப்பிடும் உணவால் உங்களுக்கு சக்தி கிடைக்கப்பெற்று அதனால் உயிர் வாழ்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சாப்பிடும் உணவு சுவையுள்ளதாகவோ சுவையற்றதாகவோ  இருந்தாலும் உங்களுக்கு சக்தி கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால் பின்பு சுவைக்கு என்ன தேவை உள்ளது? சுவை உங்களுக்கு வெறும் சுகம் தரும் பொழுது போக்கு அம்சமா இல்லை இவற்றில் முக்கியமான வேறு ஒரு உபயோகமும் ஒளிந்துள்ளதா? இதற்கு பதில் தெரிய வேண்டுமென்றால் முதலில் ஒரு சிறிய முயற்சி செய்து பாருங்கள். உங்கள் மூக்கை மூச்சுவிட முடியாதபடி நன்றாக பிடித்துக்கொண்டு ஏதேனும் ஒரு சாப்பிடும் பொருளை மென்று பாருங்கள். அதன் சுவையை உங்களால் முழுமையாக உணர முடியாது. ஏன் அப்படி? பதிலை தெரிந்து கொள்வதற்கு மீண்டும் பழைய வரலாற்றில் இருந்து தொடங்க வேண்டும்.

அனைத்து விதமான உயிர்களுக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்று. ஆனால் இவற்றில் எந்த உணவு சரியானது அல்லது தவறானது என்பதை முடிவு செய்வதற்கு உயிரினங்கள் மிகவும் குழப்பம் அடைந்தன. அந்தக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்காக பரிணாம வளர்ச்சியில் உருவானதுதான் சுவை. தற்போது உங்களுக்கு சரியான உணவை பரிந்துரைப்பதற்கென்றே தனியாக மருத்துவர்கள் உள்ளனர். ஆனால் உலகத்தில் உயிரினங்கள் உண்டான பொழுது அனைத்துமே தனக்கான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியதாக இருந்தது. சரியான உணவை சாப்பிட்டால் உயிர் வாழ முடியும் தவறான உணவை உண்டால் மரணம் அடைய வேண்டும் என்பதுதான் ஒரே விதியாக இருந்தது. இதனைக் கண்டு கொள்வதற்காக இயற்கையாகவே உருவான அடிப்படை சுவைதான் இனிப்பும் கசப்பும். ஒரு பொருள் உங்களுக்கு இனிப்பாக இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து உங்களுக்கு சக்தி கிடைக்கப்பெற்று நீங்கள் உயிர் வாழ முடியும். உதாரணமாக நீங்கள் சாப்பிடும் சர்க்கரைக்கு இனிப்பு சுவை என்பது கிடையாது. சர்க்கரையில் கிடைக்கும் சக்தியினால் உடல் ஊட்டம் பெறுகிறது எனும் காரணத்திற்காக உங்கள் மூளை கொடுக்கும் ஒரு அறிகுறிதான் இனிப்புச்சுவை. அதுபோலவே உடலுக்கு ஒவ்வாத அதிகப்படியான பொருட்களுக்கு என்று தனியாக கசப்புச்சுவை என்பது கிடையாது. அது உங்கள் உடம்பிற்கு ஒவ்வாததனால் நீங்கள் அதனை கசப்பாக உணர்கிறீர்கள். இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். ஒரு உயிரினத்திற்கு சக்தி கொடுக்கும் அதே உணவு வேறு ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தால் அவை இரண்டுக்கும் வெவ்வேறு சுவை தோன்றுமா? ஆம். வேறு சுவை தான் தோன்றும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும் ஆடாதொடை செடியை மனிதர்கள் சளி இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாக எடுத்துக்கொள்கிறார். ஆனால் ஆடு போன்ற கால்நடைகள் அந்தச் செடியின் வாடை பட்டால் கூட விலகிச் சென்றுவிடும். இதனால்தான் ஆடுதொடா பாளை எனும் சொல் மருவி ஆடாதொடை என்று அந்த செடிக்கு பெயரே வந்தது. இப்பொழுது சுவை என்பது சாப்பிடும் பொருளில் இல்லை என்றும் அது உங்கள் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளுமா என்று மூளை கண்டுபிடித்து கொடுக்கும் தகவல் என்பது நன்கு புரிந்திருக்கும். பிறகு மூச்சை பிடித்துக் கொண்டால் ஏன் சுவையை உணர முடியவில்லை? உங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய விஷமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது இனிப்பாக இருக்கிறதா இல்லை கசப்பாக இருக்கிறது என்று நீங்கள் சாப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ள முயற்சித்தால் நீங்கள் சாப்பிடும் சிறிய பகுதியே விஷமாகி உங்களை கொன்று விடலாம். அதனால் சாப்பிடும் முன்பே அதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் சாப்பிடாமல் அதனை நுகர்ந்து பார்த்து தெரிந்து கொள்ளும் உணர்வு பல்வேறு உயிரினங்களுக்கும் வந்தது. சுவையை முதலில் உணர்வது நாக்கு என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது முற்றிலும் தவறு. சுவையை முதலில் உணர்வது உங்களது நாசிகள் தான். பின்பு அந்த உணர்வோடு உங்கள் நாக்கும் சேர்ந்து கொண்டு சுவையை முழுவதுமாக உணரச் செய்கிறது. இதில் மூக்கு அடைபட்டுப் போனால் நாவால் தனியாக சுவையை உணர முடியாது. 

இனிப்பு என்பது உயிர் வாழ்வதற்கு தேவையான சுவையாகவும் கசப்பை தவறான உணவை சுட்டிக்காட்டும் இயற்கையின் வழிகாட்டி என்று வைத்துக் கொண்டால் கூட உங்களுக்கு ஒரு முரண்பாடு தெரியக்கூடும். உயிர்வாழ உதவும் சர்க்கரையால் சர்க்கரை நோய் போன்ற பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதையும் கசப்பு மருந்துகளால் நோய்கள் குணமாகும் என்பதை கண்டிருப்பீர்கள். அது எப்படி? இனிப்புச்சுவை உங்கள் உடலுக்கு சக்தியைக் கொடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் அதனால் சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது. அதையும் மீறி அளவுக்கு அதிகமாக இனிப்பை சேர்த்துக் கொள்வதன் விளைவு தான் சர்க்கரை நோய். இங்கும் சுவைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. உங்கள் உடலுக்கு தேவையான இனிப்பை விட அதிகமாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதன் இனிப்பு சுவை உங்களுக்கு குறைய ஆரம்பித்துவிடும். இதற்குப் பெயர்தான் திகட்டும் இனிப்பு என்பது. நீங்கள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய் கண்டிப்பாக திகட்டியவுடன் சுவை மாற ஆரம்பித்து விடும். அதேசமயத்தில் கசப்புச் சுவையை மிகவும் குறைவான அளவில் சாப்பிட்டால் அதன் கசப்புத்தன்மை உங்களுக்கு தெரியாமல் போய்விடும் அல்லவா? அந்த அளவு கசப்பான சுவை உங்கள் உடலுக்கு நன்மை தரும். அதனை நீங்கள் செயற்கையாக ஒரு மாத்திரை அளவில் சுருக்கி செறிஊட்டுவதால் கசப்பு அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இயற்கையாக உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும் கசப்புதான் அவற்றில் இருக்கும். 

சுவையால் ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு விதமாக தன்னை தற்காத்துக் கொள்கிறது. சுவை ஒவ்வொரு உயிரினத்தின் உடலை காப்பாற்றும் ஆயுதமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் நாவிற்கு அடிமையாகி பல்வேறு நோய்களை வரவழைத்துக் கொள்ளும் மனிதர்களை உங்களால் எளிதாக பார்க்க முடியும். ஏன் இவ்வாறு நிகழ்கிறது?  இதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

2 COMMENTS

    • இதன் விடை அடுத்த பகுதியில் பிரசுரமாகிவிட்டது நண்பரே! 

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -