நான்காம் பரிமாணம் – 30

6. யுத்த அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகையில், யுத்த அதிகாரத்தில் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நடந்துவரும் யுத்தங்களை பற்றி கூறிக் கொண்டு வருகிறேன். வெறும் யுத்தங்களை மட்டும் பார்க்காமல் யுத்தத்தை தடுப்பதற்காக நீங்கள் கண்டுபிடித்த வழிமுறைகளைப் பற்றிக் கூட கூறியிருக்கிறேன். இன்று இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதியில் நுழைத்திருக்கிறோம். உங்கள் உடலுக்கு உள்ளேயே நடக்கும் யுத்தத்தைப் பற்றிக் கூறி அதனடிப்படையில் சில ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஆரம்பிக்கலாமா?


உடலுக்குள் ஒரு யுத்தம்! 


நீங்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு நொடியும் மூச்சுக்காற்றுடன் கிருமிகளும் உங்கள் உடலுக்குள் நுழைந்து கொண்டேதான் இருக்கின்றன. மேலும் உடலுக்கு உள்ளே பல கோடி நுண்ணுயிர்கள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பல்வேறு கிருமிகள் உடலுக்கு எதிராகவும் செயல்படும். அப்படிப்பட்ட கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்க தொடர்ச்சியாக ஒரு யுத்தம் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த யுத்தத்தில் கிருமிகள் வென்றுவிட்டால் பல்வேறு நோய்களும் முடிவில் உயிரிழப்பு கூட மனிதர்களுக்கு ஏற்படலாம். மாறாக உடல் எப்போது கிருமியை வெல்கின்றதோ அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். யுத்தத்தில் நீங்கள் வென்று கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அதற்கு பெரிதாக எந்த ஒரு புது முயற்சியும் தேவையில்லை. ஏற்கனவே உங்கள் உடல் போரிட்டு கொண்டிருப்பதைப் போலவே முயன்றால் வென்று விடலாம். ஆனால் போர் சரிசமமாக போய்க் கொண்டிருந்தாலும் இல்லை நீங்கள் தோற்று கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் போர் யுத்திகளை உடனடியாக மாற்ற வேண்டும். போர் யுத்திகளை மாற்ற வேண்டுமென்றால் முதலில் உங்களுடைய நிலைமையை உணர வேண்டும் அல்லவா? அந்த உணர்ச்சிக்கு பெயர்தான் வலி. வலி ஒரு குறியீடு மட்டும்தான். வலி இல்லை என்றாலும் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால் அந்த யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் வலி தெரியாமல் இருந்தால் அதனை ஒரு நோய் என்று நீங்கள் குறிப்பிட்டு அதற்கு உணர்திறனற்ற தன்மை (Congenital insensitivity) என்று பெயர் வைத்துள்ளீர்கள்.

உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கூறிவிட்டேன். இதற்கும் சென்ற பதிவில் நாம் பார்த்த இரண்டு தத்துவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போமா? நீங்கள் ஆரோக்கியமாக உணரும் பொழுது உங்கள் தலை முதல் கால் வரை உள்ள அனைத்தும் சமத்துவத்துடன் ஒரே நிலையில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதுபோன்ற சமத்துவமான நிலைமை நன்றாக இருந்தால் கூட அந்த சமயத்தில் உங்கள் உடல் வளரவே வளராது. வளர்ச்சி என்ற ஒன்று தேவைப்படும் பொழுது உடல் பல்வேறு நிலைகளில் போரிட்டு தான் வளர வேண்டியிருக்கும். இப்பொழுது உங்கள் உடலுக்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலில் வளராமல் வலியும் இல்லாமல் அதே நிலைமையில் இருப்பது. இரண்டாவதாக வலியுடன் வளர்ந்து கொண்டே இருப்பது. இந்த இரண்டும் நான் முன்பு கூறிய பொதுவுடமை மற்றும் முதலாளித்துவம் போன்று இருக்கிறதா? இவற்றில் எது நன்மை பயக்கும் என்று கேட்டால்,  உடல் இந்த இரண்டையுமே சரிவிகிதத்தில் பயன்படுத்தி வாழ்ந்து கொண்டு வருகிறது என்பதுதான் பதில். இதனை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் போர்களை எவ்வாறு சரிவிகிதத்தில் வைத்துக்கொள்வது என்பது தெரிந்துவிடும். உங்கள் உடல் இதனை எப்படி செய்கிறது என்பதை புரிந்துகொள்வது சற்று கடினமானது என்பதால் இதனை ஒரு எளிமையான எடுத்துக்காட்டுடன் கூறிவிடுகிறேன்.

உண்மையிலேயே பொதுவுடமை மற்றும் முதலாளித்துவம் இரண்டிலும் உள்ள சரிவிகித நிலை என்ன என்பது உங்களுக்கு ஏற்கனவே நன்றாக தெரியும். இதற்கு சாட்சி, உங்கள் நம்பிக்கைகளில் ஒன்றான தேர் இழுக்கும் வழக்கம் தான்.  உலகின் அனைத்து பழமையான சமூகங்களிலும் தேர் இழுக்கும் பழக்கம் உள்ளது. ஒரு தேர் எவ்வாறு வேலை செய்கிறது? இதற்கு முக்கியமாக இரண்டு வகையான ஆட்கள் தேவைப்படுவார்கள். முதலில் தேரின் வடத்தை பிடித்து அதனை முன்னோக்கி இழுப்பவர்கள். இரண்டாவதாக தேரின் பின்பக்கத்தில் முட்டுக்கொடுத்து அதனை திருப்புவதற்காக முட்டுக்கட்டை போடுபவர்கள். ஒரு தேருக்கு முதல் வகையான ஆட்கள் மட்டுமே இருந்தால் தேர் அதிக வேகம் எடுத்து எங்குமே திரும்ப முடியாமல் எதிரே இருக்கும் பொருள் மீது மோதி விடும். இரண்டாவது வகையான ஆட்கள் மட்டுமிருந்தால் எங்குமே நகராது. இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வேலை செய்வதால் தான் தேர் தான் விரும்பும் இடத்திற்கு செல்ல முடிகிறது. இப்பொழுது தேரை முன்னோக்கி இழுப்பவர்கள் வெளியில் நகர்த்துவது போன்று நடித்துக் கொண்டு உண்மையிலேயே முட்டுக்கட்டை போட்டால் அந்தத் தேரை உண்மையிலேயே இழுப்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதுபோலவே தேருக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் அதனை முன்னோக்கி நகர்த்த முயன்றால் தேர் குடை சாய்ந்து விடும். இப்பொழுது தேர் இழுப்பவர்களை முதலாளித்துவ சிந்தனையுடையவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுபோலவே முட்டுக்கட்டை போடுபவர்களை பொதுவுடமைவாதிகள் என்று புரிந்து கொள்ளுங்கள். ஒரு தேரை சரியாக செலுத்துவதற்கு எவ்வளவு தேர் இழுப்பவர்களும் முட்டுக்கட்டை போடுபவர்கள் தேவைப்படுவார்கள்? பாதை சீராக இருந்தால் சில முட்டுக்கட்டை போடுபவர்கள் மற்றும் அதிகப்படியான இழுப்பவர்களும் வேண்டும். ஆனால் பாதை கரடு முரடாக இருந்தால் அதிகப்படியான முட்டுக்கட்டை போடுபவர்கள் தேவைப்படுவார்கள். உங்கள் உடல், சமூகம் முதல் அண்டசராசரம் வரை தேர் எவ்வாறு வேலை செய்கிறதோ அதுபோலவே இரண்டு வெவ்வேறு விதமான கோட்பாடுகளுக்கு நடுவே ஒரு சீரான நிலைமையில் இயங்கி வருகிறது. அவ்வாறு இயங்குவதால் அனைத்து விதமான யுத்தங்களையும் ஒரு கட்டுக்கோப்பான முறையில் கையாண்டு வருகிறது.

உடலில் உள்ள எந்த ஒரு செல்லும் தனக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஆக்கல் அல்லது அழித்தல் பணியை வேறு எந்தவித குறுக்கீடும் இல்லாமல் சரியாக செய்து வருகிறது. இவற்றில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும் உடலில் நோய் வந்துவிடும். ஒரு சமூகம் தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கு அதனை உண்மையாக வழி நடத்துபவர்களும் உண்மையாக முட்டுக்கட்டை போடுபவர்கள் தேவைப்படுவார்கள். சமூகத்தின் தன்மைக்கேற்ப இவர்களின் விகிதம் மாறுபடும். இங்கே தன்னுடைய கோட்பாட்டை போலியாக செய்பவர்களால் சமூகம் பாழ்பட்டுவிடும். அண்ட சராசரத்தில் உள்ள ஆக்கல் சக்தியும் (Energy) சடத்துவமும் (Inertia) சரி விகிதத்தில் வேலை செய்யும்பொழுது சீரான இயக்கம் தென்படுகிறது. கோட்பாடுகளால் யுத்தம் என்றும் நிற்பதே இல்லை. ஆனால் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு தன்னுடைய குறிக்கோளை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. யுத்தங்களை உணர்ந்து கொள்ளும் கருவிதான் வலி. ஒரு சமூகத்திற்கு வலி ஏற்படும் பொழுது அதன் கோட்பாடுகளை அது மறு சீராய்வு செய்து நிலைநிறுத்திக் கொள்கிறது. வலிகள் என்றுமே ஒரு குறியீடே தவிர உண்மையான யுத்தங்கள் ஆகாது. உங்கள் வலிகளுக்கு பின்னால் இருக்கும் யுத்தங்களை கண்டு கொண்டால் நீங்கள் விரும்பியபடி அதனை தத்துவங்கள் மூலமாக நெறிமுறைப் படுத்திக்கொள்ள முடியும். முடிந்தால் முயன்று பாருங்கள். யுத்த அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -