நான்காம் பரிமாணம் – 1

1. மொழி அதிகாரம்- 1 ஆம் பாகம்

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுக்கு கூறிக்கொண்டு வருகிறேன். பெரு வெடிப்பிற்கு பின்பு ஒலி மற்றும் ஒளியால் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் உருவானது என்று முன்பு கூறியிருந்தேன். அதில் ஒலி வடிவமாக மொழி என்பதை உருவாக்கி அதன் மூலமாக நீங்கள் அனைவரும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்த விஷயமே. ஆனால் ஒலியின் மூலமாக பேசுவதற்கு முன்பே பல்வேறு விதமாக தகவல் தொடர்பு நடந்து கொண்டேதான் இருந்தது. அது எவ்வாறு என்று கூறுவதற்கு முன்பு ஒலி மற்றும் ஒளியின் மூலத்தைப் பற்றி ஒரு சிறிய முன்னோட்டத்தை கொடுக்கிறேன். 

ஆற்றல் 

ஒலி மற்றும் ஒளி என்பது ஆற்றலின் (energy) மற்றொரு வடிவமே ஆகும். இந்த ஆற்றலை யாராலும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. இதைத்தான் உங்கள் வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) பௌதிக விதிகளும் கூறுகின்றன. இந்த ஆற்றலை ஒரு குவியலாக ஒரு இடத்தில் சேர்க்கும்போது ஒன்று மற்றொன்றை இழுத்து ஈர்ப்பு விசை (Gravitational force) என்பது உருவாகிறது. ஒரு அணுவுக்குள் இருக்கும் அணுத்துகள்கள் ஆக இருக்கட்டும், அண்டத்தில் இருக்கும் பல்வேறு கோள்கள் ஆகட்டும், இந்த ஈர்ப்பு விசை என்பது பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுக்கும் பொதுவானது. அவ்வாறு ஒரு பொருள் மற்றொரு பொருளை ஈர்க்கும் பொழுது, பல்வேறு கனிமங்கள் (elements) உருவாகின்றன. இந்த அடிப்படை கனிமங்களை கொண்டுதான் அண்ட சராசரத்தில் அனைத்து ஜடப் பொருட்களும் உருவாக்கப்படுகின்றன. ஆகவே ஆற்றல் என்பது முதலில் ஒலி மற்றும் ஒளி எனும் அலை வடிவமாகவும் பின்பு கனிமங்கள் போன்ற ஜட வடிவமாகவும் உருவம் பெற்று இருவேறு பொருட்களாக உங்களுக்கு காட்சி அளிக்கின்றது. ஆனால் இது அனைத்துமே ஆற்றலின் வெவ்வேறு வடிவங்களே ஆகும். 

முதல் மொழி 

மொழி என்றால் என்ன? இருவேறு ஆற்றல்களின் கருத்துப்பரிமாற்றம் தானே. அப்படியென்றால் நான் முன்பு கூறிய ஈர்ப்பு விசை என்பது தானே இந்த அண்டத்தின் முதல் மொழியாக இருக்க முடியும். இந்த முதல் மொழியினால் என்ன நடந்தது தெரியுமா? அடிப்படை கனிமங்கள் என்பது ஒன்றோடு ஒன்று இணைந்து புதிய வேதியியல் கலவையாக உருவாகின்றது. உங்கள் உலகத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்து பொருட்களும் இவ்வாறு உருவானது தான் (நீங்கள் உட்பட!). உங்கள் உடல் ஒரே தொகுதியாக இருப்பதற்கு உங்கள் உடலில் இருக்கும் கோடானு கோடி அணுக்கள் அனைத்தும் ஈர்ப்பு விசையால் கட்டுப்பட்டு ஒன்றோடு மற்றொன்று தொடர்பில் இருப்பதனால் மட்டுமே. உங்கள் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பூமியின் மேற்பரப்பில் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் ஒட்டி வாழ்வதற்குக் காரணம் இந்த ஈர்ப்பு விசையே! 

இந்த ஈர்ப்பு விசையில் ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் அது அனைத்து ஆற்றலையும் மொத்தமாக ஒன்றாக இணைப்பது இல்லை. மாறாக பல்வேறு விதமான குழுக்களாக உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, இந்த ஈர்ப்பு விசை தன்னுடைய சக்தியை கொண்டு பல்வேறு அணுக்களை சேர்த்து ஒரு மரத்தை உருவாக்குகிறது. அதேசமயம் அதே அணுக்களை வைத்துக்கொண்டு உங்களைப் போன்ற மனிதர்களையும் உருவாக்குகிறது. சூரியன் போன்ற எரியும் பெரிய கோள்களையும் உருவாக்குகிறது. பூமியை போன்று பசுமையான சிறிய கோள்களையும் உருவாக்குகிறது. இப்படி நிறுவப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் (entities) தொகுப்பு இந்த அண்டத்தின் முழுவதும் பரவி உள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு ஈர்ப்பு விசை என்ற ஒரே ஒரு மொழி மட்டும் கருத்துப் பரிமாற்றத்திற்கு இருந்தால் போதாது அல்லவா? அணுக்கள் ஒன்றோடு ஒன்று பேசிய பிறகு, அணுக்களின் கூட்டமைப்பாக திகழும் ஜடப் பொருட்கள், செடி, கொடி, மரங்கள், புழு, பூச்சிகள், மிருகங்கள், மனிதர்கள் அனைத்தும் பேசுவதற்கு ஒரு வழி வேண்டும் அல்லவா? இதுதான் மொழியின் இரண்டாம் படிநிலை வளர்ச்சி ஆகும். 

வேதியியல் மொழி 

நான் முன்பே அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேதியியல் கலவையாக உருவாகிறது என்று கூறியிருந்தேன். அவ்வாறு உருவாகிய கலவைகளின் மூலமாகத்தான் பல்வேறு பொருட்களும் உயிர்களும் உருவாகின. இந்த பொருட்களும், உயிர்களும் ஒன்றோடு ஒன்று பேசுவதற்கு முதலில் மற்றொரு வேதியியல் கலவையே பயன்படுத்தியது. உதாரணமாக, நெருப்பு தொடங்குவதற்கு முன்னும் அணைந்த பின்பும் அதனை தெரியப்படுத்துவதற்கு புகையை பயன்படுத்துகிறது. 

பரங்கிக்காய் விளையும் ஒரு வயலில் ஒரு காய் பழுத்து விட்டால் அதன் அருகே இருக்கும் மற்ற காய்களும் சீக்கிரமே பழுப்பதை உங்களால் பார்க்க முடியும். இதற்கு காரணம் முதலில் பழுத்த காய் ஆனது தன்னுடைய மேற்பரப்பிலிருந்து சில வேதியல் மூலக்கூறுகளை காற்றில் பரவ விடும். அந்த மூலக்கூறுகளை பற்றும் மற்ற காய்கள், தான் பழுக்க வேண்டிய காலம் வந்து விட்டதை புரிந்துகொண்டு உடனடியாக பழுக்க ஆரம்பித்துவிடும். 

ஒற்றை உயிரணு உள்ள அமீபா(Amoeba) எனும் உயிரி தனது சுற்றுச்சூழலை கொண்டே உயிர் வாழ்கிறது. அந்த சுற்றுச்சூழல் உடன் கருத்து பரிமாற்றம் செய்வதற்காக, அது சிலியா(Cilia) என்னும் அதன் மேற்பரப்பில் உள்ள கொடுக்குகளில் உள்ள வேதியல் மூலக்கூறுகளை கொண்டே கண்டறிகிறது. 

ஒரு எறும்பு ஆனது தான் கண்டுபிடித்த ஒரு வழியை மற்றொரு எறும்புக்கு கூறுவதற்காக Pheromone எனும் அமிலத்தை சுரந்து கொண்டே போகும். அந்த அமிலத்தின் வாசனையை பிடிக்கும் மற்ற எறும்புகள் அதே வழியை பின் தொடர்ந்து தான் அடைய வேண்டிய வழியை சீக்கிரமாக அடையும். இந்த அமிலத்தை பிற்காலத்தில் நீங்கள் எறும்பு அமிலம் என்றுதான் அழைத்தீர்கள். (Formic அமிலம் => Formis – எறும்பு(Greek)). 

ஒரு பாம்பானது தன் வாயில் உள்ள விஷம் என்னும் வேதியியல் மூலக்கூறுகளால் மற்ற ஜீவராசிகள் இடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் செய்தியை கூறிவருகிறது. 

இவ்வாறு வேதியியல் மொழியாக பல்வேறு மூலக்கூறுகளை இன்றுவரை பல்வேறு உயிர்களும் பொருட்களும் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த முறையில், ஒரு வேதியியல் தொகுப்பானது, தன்னை விட அளவில் சிறிய மற்றொரு வேதியல் தொகுப்பை உருவாக்கி அதன்மூலமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறது. 

பரிணாம வளர்ச்சி 

வேதியியல் மொழியில் பரிமாற்றம் செய்து கொண்டு வந்த முறை பல்வேறு கட்ட பரிமாண வளர்ச்சியில் இன்று நீங்கள் பேசும் மொழிகளாக உருவெடுத்து வந்துள்ளது. இன்று நீங்கள் பேசும் ஆங்கிலம் என்னும் மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுவதற்கு காரணமாக இருந்தது ஒரு மீன் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். அதைப்பற்றிய பரிணாமங்களும் நீங்கள் பேசும் இந்த நிலைக்கு மொழி வந்ததற்கான காரணத்தையும் அடுத்த பாகத்தில் விளக்குகிறேன். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

2 COMMENTS

  1. அறியாத பல புதிய தகவல்கள். அருமை. இன்னும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -