தனிமையான பயணம் சுலபமில்லைதான்
முதலில் என் மாடு வரமறுத்தது-பிறகெல்லாம்
செக்கு மாடென செவ்வனே சென்றாலும்
இரவானால் கண்மாய் பெருக்கெடுத்துவிடும்.
தலையணையை உலர்த்த ஒவ்வொரு
காலையிலும் கதிரவனைத் தேட வேண்டியிருந்தது.
இப்போது அதுவும் அவசியமற்றதாகி
குளம் வறண்டே கிடக்கிறது!
இருப்பினும் பயமேதும் தேவையில்லை
கூட்டத்திலிருப்பது போலல்ல
பொறாமைத் தீப்பந்தங்களும் புகையும் சூழாது.
நோட்டமிடும் கூகை
மட்டம் தட்டும் குயில்
புறணி பேசும் கிளியென எதுவுமே இராது.
அடிமையாக்க மீசைமுறுக்கிகள் இருக்கமாட்டார்கள்.
தயங்காமல் துணிந்து வாருங்கள்.
எப்படியும் என்றோ ஒருநாள்
தனிமை துணையாகத்தானே போகிறது!