டாக்டர் – திரைவிமர்சனம்

- Advertisement -


ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சுமூக நிலை திரும்பினாலும் மக்கள் கூடும் பொது இடங்கள் பழைய நிலைக்கு திரும்ப பல காலம் ஆகலாம் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட நிலையிலும் பல கலைஞர்கள் ஒன்றுகூடி திரையரங்குகளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள தங்களது கலைப் படைப்புகளை வெளியிட முன் வருவது ஒரு பாராட்டத்தக்க விஷயமாகும்.  அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்த “டாக்டர்” படம் வெளிவந்துள்ளதை பாராட்டி அதன் விமர்சனத்தையும் இங்கே காண்போம். 

விமர்சனம்

கதைப்படி சிவகார்த்திகேயன் ராணுவத்தில் பணிபுரியும் ஒரு மருத்துவர். வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் உயிர்களை காப்பாற்றுவது மட்டுமே லட்சியமாக செயல்படுவதை முதல் காட்சியிலேயே சொல்லி விடுகிறார்கள். நகைச்சுவையும் வன்முறையும் கலந்த படமாக வெளிவந்தாலும் படத்தின் எந்த ஒரு காட்சியிலும் சிவகார்த்திகேயன் சிரிக்கவே இல்லை. இருந்தாலும் படத்தின் முதல் பகுதி முழுவதும் சிரிப்பு சரவெடி தான். யோகி பாபு மற்றும் ரெடிங் கிங்ஸ்லி கூட்டணி சிரிக்க வைப்பதில் திரையரங்கம் முழுவதும் சிரிப்பலைகள்.  அதுவும் எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் படத்துடன் சேர்ந்து செய்த நகைச்சுவையால் முதல் பாதி போனதே தெரியவில்லை. படத்தில் லாஜிக் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். மூளையை சிறிது நேரம் தனியாக கழட்டி வைத்துவிட்டு நல்ல பொழுதுபோக்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த படத்துக்கு செல்லலாம். தீபா சங்கர், அர்ச்சனா போன்ற அனைத்து துணை கதாபாத்திரங்களும் தங்கள் பாத்திரத்திற்கு ஏற்றது போல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் நகைச்சுவையைத்  தவிர குழந்தை கடத்தல் எனும் முக்கியமான களத்தையும் இயக்குனர் நெல்சன் லாகவமாக கையாண்டிருக்கிறார். வன்முறை காட்சிகள் இருந்தால் கூட பெரிய நெருடல் எதுவுமில்லாமல் பார்த்து விட முடிகிறது. நாயகி பிரியங்கா அருள் மோகனுடன் காதல் காட்சிகள் வைத்திருந்தால் படம் சற்று தொய்வு அடைந்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் சீரான வேகத்துடன் கொண்டு சென்றதற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ். படத்தில் இருக்கும் ஒரே ஒரு டூயட் பாடல் கூட படம் முடிந்தவுடன் தான் வருகிறது. படத்தில் குறைகளுக்கு குறையே இல்லை. படத்தின் பல்வேறு பகுதியிலும் கோலமாவு கோகிலா படத்தின் அதே டெம்ப்ளேட் பளிச்சிடுகிறது. கோலமாவு கோகிலாவில் நயன்தாராவுக்கு கொடுத்த ஹீரோயிஸம் அனைத்துமே கதையுடன் ஒன்றி வருவது போல் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்திருக்கும் ஹீரோயிசம் கதையோடு ஒட்டாமல் அப்பட்டமாக வெளிப்படுகிறது. கதை வேறு மாதிரி இருந்தால் கூட கோலமாவு கோகிலாவில் இருந்த அதே படத்தின் அடித்தளம் தான் இந்த படத்துக்கும். வருங்காலத்தில் இயக்குனர் தன்னுடைய பாணியை சற்று வித்தியாசமாக அமைத்தால் நன்றாக இருக்கும். படத்தின் இரண்டாவது பாதி முதல் பாதி அளவிற்கு இல்லை என்றாலும் சுமாராக உள்ளது. 

படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும் நகைச்சுவை மற்றும் டைமிங் வசனங்களாலும் அதை முழுவதுமாக மறைத்து நம்மை ரசிக்க வைப்பதில் படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். அதுவும் ரெடிங் கிங்ஸ்லி பல இடங்களில் யோகிபாபுவை காமெடியில் மிஞ்சி விடுகிறார். பின்னணி இசையில் அனிருத் அட்டகாசம் செய்துள்ளார். வன்முறைக் காட்சிகளில் கூட பின்னணியில் மெல்லிய கர்நாடக சங்கீதத்தை ஒலிக்கவிட்டு ஒரு கிளாசிக் எஃபக்ட் கொடுத்துவிடுகிறார். சிவகார்த்திகேயனை ஒரு நல்ல நடிகராக பார்க்க முடிந்தாலும் அவரின் ஹீரோயிசத்தை வெளிக்கொண்டு வருவதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் பெரிதாக உதவவில்லை என்று தோன்றுகிறது. இதே இயக்குனர் நடிகர் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்துக்கொண்டிருக்கும் முழுநேர மாஸ் மசாலா படம் எப்படி வருமோ என்ற பயம் இப்பொழுதே வந்துவிடுகிறது.

ஒருசில வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் சற்று வளர்ந்த குழந்தைகளுடன் பார்த்து மகிழ்ந்து சிரிக்கக்கூடிய குடும்ப படமாகத்தான் டாக்டர் வந்துள்ளது. பொழுதுபோக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்த்துவிடுங்கள். 

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -
1
0
Would love your thoughts, please comment.x
()
x