ஊழ் (5)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

கதிரவன் அவன் வேலையைத் தொடங்கியிருந்தான். குருவிகளும் மைனாக்களும் கூச்சலிட்டு முடித்திருந்தன. அமுதன் கண்விழித்துப் பார்த்தான். அவனுக்கு அருகில் மது உறங்கிக்கொண்டிருந்த இடம் காலியாக இருந்தது. அலைபேசியை எடுத்து மணியைப் பார்த்தான். 7.40 என்றது. 

முகத்தைக் கழுவிட்டு ஹால் பக்கம் எட்டிப் பார்த்தான் காபியோடு காத்திருந்தாள். அவள் சொன்ன “குட் மார்னிங்…” வழக்கத்தைவிட உற்சாகமானதாக இருந்தது. ப்ளாஸ்க்கில் இருந்து காபியைக் கப்பில் ஊற்றினாள். ஒரு மிடறு குடித்துவிட்டு 

“என்னப்பா இப்போ தலைவலி எப்படி இருக்கு?” என்றான். 

“தலைவலி எல்லாம் ஓகே. பட் இனிமேல் உங்க ப்ரண்டு ரகு வர்ற இடத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போகாதீங்க… ஐ டோன்ட் லைக் ஹிம்” பட்டென்று சொல்லி முடித்தாள்.

அடுத்த சில மிடறு காப்பிக்குள் அமுதனின் மனம் பலவாறு அலைபாய்ந்தது. ‘இப்படி ஒரே நாளில் ஒருவனை ஒரு பெண்ணால் வெறுக்க முடியுமா? இவர்களுக்குள் ஏதேனும் முன்பகை இருக்குமோ? இல்லையே நான் அறிமுகம் செய்தபோது அழகாகச் சிரித்துக்கொண்டே தான் பேசினாள். அந்த பெண்ணைக் கேலி செய்ததற்காகவா இப்படி வெறுக்கிறாள்? மெதுவாக வேறு ஏதாவது சொல்கிறாளா என கேட்டுப் பார்ப்போம் என நினைத்துக்கொண்டே குடித்து முடித்த காபி கப்பை கீழே வைத்துவிட்டு,

“அவன் வேற ஏதாவது மிஸ்பிகேவ் பண்ணினாப்பா? ஏன் இவளோ கோபப்படுற?” என்று கேட்டான்.

“அவனும் அவன் பார்வையும்..அந்தப் பொண்ணு பின்னாடியே நாய் மாதிரி இங்கையும் அங்கயும் போய்ட்டு இருந்தான். அப்பறம் உங்க ப்ரன்ட்ஸ்கிட்ட வந்து அசிங்கமா கமென்ட் அடிக்கிறான்.”

அமுதன் அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியமல் காபிக் கப்பை ஆட்டிக்கொண்டே வேறு எதோ யோசனையில் இருப்பது போல் உட்காந்திருந்தான். 

அவன் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவளே ஒருவாறாக சமாதானம் அடைந்து கொண்டாள். அமுதனுக்கு அது சாதாரண நிகழ்வாகத் தான் தெரிந்தது. பொதுவாக இளைஞர்கள் கூடினால் இது போன்ற குறும்புகள் இருக்கத்தான் செய்யும் என்று நினைத்தான். 

‘ரகு நல்லவன், இப்படிச் சில சில்மிஷங்கள் நாங்கள் எல்லோரும் செய்வதுதான். மது உடனிருந்ததால்தான் அன்று நான் கொஞ்சம் அடக்கிவாசித்தேன். இப்போதைக்கு ரகுவை தள்ளி வைப்பதுதான் என் குடும்பத்திற்கு நல்லது.’ என்று தனக்குத்தானே அறிவுறுத்திக்கொண்டான். 

அன்றிலிருந்து அவளோடு வெளியில் செல்லும்போது அலைபாயும் கண்களை அடக்கிக்கொள்ள பெரும்பாடு படுவான். அப்படியும் சில நேரங்களில் எல்லைமீறி எதிரில் வரும் பிதுங்கிய மார்பகங்களுக்குள் அவன் பார்வை குத்தும்போது பக்கத்தில் வரும் மதுவும் ஒரு குத்து குத்துவாள். 

“என்ன பார்வை? திருந்தவே மாட்டீங்களா?” 

“திருந்துற அளவுக்கு அப்படி என்ன கெட்டுப்போய்ட்டேன்” அவன் சொல்லி முடிக்கும் முன் வரும் அவளின் முறைப்பு அவனிடம் பயமாக மாறி, பின் சிரித்து மழுப்பிவிடுவான். 

ஒவ்வொரு நாளும் புதியபுதிய அனுபவங்களில் அவர்கள் வாழ்க்கை மலர்ந்துகொண்டே இருந்தது. சிங்கப்பூருக்கு அவள் புதியவள் என்பதால் வார இறுதியில் ஏதாவது ஒரு சுற்றுலாத் தளத்திற்குச் செல்வார்கள். மிருகக்காட்சி சாலைக்குச் சென்றபோது அங்கிருந்த ஒராங்குட்டான்கள், தங்கநிற சிங்கமூஞ்சிக் குரங்குகள், சிறிய வகை எலி மான்கள், மரக்கிளைகளில் ஊர்ந்து கொண்டிருந்த ஸ்லாத், சிறுத்தை, சிங்கம், வெள்ளைப்புலிகள் என அவள் ரசித்த அத்தனையையும் கேமராவிற்குள் நிறைத்துக்கொண்டாள். 

‘ரெயின்பாரஸ்ட் ஷோ’ ஆரம்பித்த சிறிது நேரத்தில் குட்டிக்குட்டி தேவாங்கு போன்ற விலங்குகள் தலைக்குமேல் ஊர்ந்து வந்ததைப் பார்த்து கைத்தட்டிக் கத்திக் கூச்சலிட்டு ரசித்தாள். மேடையில் தொகுப்பாளர் ஒரு சிறிய பாம்பைத் தொட்டுப்பார்க்க அழைத்தபோது “நான் போறேன் நான் போறேன்” என்று அவள் கையைத் தூக்கி சந்தோசமாக ஓடினாள். அந்த காட்சியை பலமுறை பார்த்தவன் ஆதலால் அங்கு என்ன நடக்கப்போகிறது என்பது அமுதனுக்கு முன்பே தெரிந்திருந்தது. அவன் கேமராவோடு தயாராக நின்றான். அவன் எதிர்பார்த்தது போல அவள் சிறிய பாம்பை தொட்டுப் பாத்துக்கொண்டிருக்கும்போது அவள் பின்னே ஒரு பன்னிரண்டடி நீளம் கொண்ட மஞ்சளும் வெள்ளையும் கலந்த மிகப் பெரிய மலைப்பாம்பை மூன்றுபேர் சுமந்துகொண்டு வந்து அவள் கைகளில் வைத்தனர். அவளின் அகலத் திறந்த கண்களும் வாயும் மேடையை விட்டு கீழே இறங்கும் வரையில் மூடவே இல்லை. 

அமுதன் சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே இருந்தான். மது அவனை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஏற இறங்கப் பார்த்தாள். ஓங்கி ஒரு குத்து குத்தினாள். அப்படியும் அவனால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. 

மிருகக்காட்சி சாலைக்குள் இருந்த ‘ஆ மெங்’ உணவங்காடியில் இருந்த இந்தியன் ஸ்டேஷனின் பிரியாணி அவர்கள் மதியப் பசியைப் போக்கியது. இரவில் நடைபெறும் ‘நைட் சபாரி’ க்கும் அவர்கள் பதிவு செய்திருந்ததால் மாலை ஒரு ஏழு மணி போல் நைட் சபாரி நுழைவாயிலைக் கடந்து மிருகங்களை சுற்றிக்காட்டும் தொடர் வண்டிக்கான காத்திருப்பு வரிசையில் காத்திருந்தார்கள். 

அன்றைக்கு முழுவதும் சுற்றிகொண்டே இருந்ததால் அவளின் கைப்பை அவன் தோளுக்கு ஏறிவிட்டது. ஒட்டகச்சிவிங்கி போல் வண்ணம் தீட்டி இருந்த அந்த திறந்தவெளி தொடர்வண்டி வந்தவுடன் அதன் வயிற்றுப் பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். மீண்டும் சிங்கம், கரடி, சிறுத்தை, மான்கள், புலிகள், கழுதைப் புலிகள், காண்டா மிருகங்கள் என இருளுக்குள் ஒளிந்திருந்த மிருகங்களை அவர்கள் புகைப்படக்கருவி சுட்டுத் தள்ளியது. வண்டிஓட்டி அடுத்தடுத்து விலங்குகளைப் பற்றிய அறிவிப்பின் ஊடே கேமாராவில் இருக்கும் ‘ப்ளாசை’ அணைக்கும்படி மைக்கில் கத்திக்கொண்டே வந்தார். 

சுற்றிமுடித்து இறங்கியவுடன் மது மீண்டும் சுற்றுவோம் என்றாள். ஆனால் இந்தமுறை நடந்தே சுற்றினார்கள். அந்த அடர்இருளில் சின்ன மினுக்கட்டான் போல ஆங்காகே பாதை காண்பித்துக்கொண்டிருந்த விளக்குகளுக்கு மத்தியில் நடப்பது அதுவும் மதுவோடு கைகோத்து நடப்பது அவன் கால்களின் வலியையும் சுகமாக்கியது. அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. அவன் கைகளை அவள் மார்போடு அணைத்துக்கொண்டு மெல்ல நடந்தாள். ஒவ்வொரு மிருகத்தின் கண்ணும் அந்த காரிருளிலும் ஒளியைக் கசிந்து பளபளக்கும் பளிங்குபோல் மின்னியது. அவர்களைத்தவிர வேறு மனிதர்கள் கண்ணில்படாத ஓர் இடம் வந்தது. அவளை அவன் பக்கம் திருப்பி அவள் கன்னங்களை உள்ளங்கைகளுக்குள் அடக்கி நெற்றியில் முத்தமிட்டான். அவள் மறுப்பேதும் சொல்லாதது அவனுக்கு மேலும் உற்சாகமூட்டியது. உதடுகளில் முத்தத்தைப் பதித்தான். அகலத் திறந்து அருகருகே இருந்த அவர்களின் கண்கள் மிருகங்களின் கண்கள்போல மின்னியது. சிறிது நேரம் கட்டிக்கொண்டே இருந்தார்கள்.

அவள் மெல்ல அவனை விலக்கி “வீட்டுக்குப் போவமா?” என்றாள். 

மறுப்பேதும் சொல்லாமல் “ம்ம்ம்ம்” என்று மட்டும் கூறினான். மீண்டும் அவன் கைகளை மார்போடு கட்டிக்கொண்டு அவனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள். வெளியே வந்து டாக்ஸியைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தார்கள். வரும் வழியிலேயே அவன் தோள்மீது சாய்ந்துகொண்டு தூங்கிப்போனாள். அலுப்பு குறையாமல் வீட்டிற்குள் நுழைந்த அதே வேகத்தில் உடைமாற்றி படுத்து தூங்கினாள். 

அடுத்ததடுத்த நாள்களில் பீட்ரூட் அல்வா, கீரை ஸ்மூதி, காய்கறி கட்லெட் என ஏதேதோ யூடியூபில் பார்த்து சமைத்து அசத்தினாள். ஒரு சோதனை எலிபோல அவள் தரும் எதுவானாலும் சப்புக்கொட்டி சாப்பிட்டான். அவள் செய்யும் ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் விமர்சனம் எதிர்பார்த்தாள். அதிகப்படியான காதல் கலந்து செய்யப்பட்டவை ஆதலால் ஒருநாளும் அதன் சுவை குறைந்தது இல்லை. எல்லாவற்றையும் அமுதன் புகழ்ந்து தள்ளினான். 

அடுத்தவாரம் செந்தோஷா தீவில் சுற்றினார்கள் அலைபேசிகளிலும் புகைப்படக் கருவியிலும் இருந்த சேமிப்புக்கிடங்கு வற்றி சுழியமாகும் வரை புகைப்படங்களைச் சுட்டுத்தள்ளினார்கள். புதிய புதிய மெமரிக்கார்டுகளை வாங்கி அவற்றையும் நிறைத்தார்கள். அந்தப் புகைப்படங்களை அடுத்து எப்போதாவது பார்க்கப்போகிறோமா என்றெல்லாம் எண்ணவில்லை. எடுத்துக்கொண்டே இருந்தார்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றார்கள். அலுவலக நேரங்கள் எல்லாம் ரணமாக எரிந்தது. 

“இந்தக் கிரடிட் கார்ட உன் பர்ஸ்ல வச்சுக்கோ எப்போவாவது தேவைப்படும்” என்று அவள் கைப்பைக்குள் இருந்த பர்சை எடுத்து கடன் அட்டை ஒன்றை அவனே வைத்தான். 

“நான் எங்க போகப் போறேன்.” 

“சும்மா இருக்கட்டும். ஏதாவது வாங்கனும்ன்னு தோணுனா யூஸ் பண்ணிக்கோ.” என்றான்.

எல்லோரைப் போலவும் அவர்களுடைய தேனிலவுக் காலமும் தேனைவிட இனிப்பாகவே சென்றது. எப்போதாவது ‘இந்த மாசம் நாள் தள்ளிப் போயிருக்கு…’ என்று அவள் கூறப்போகும் வார்த்தைகளுக்காக அவன் காதுகள் காத்துக்கொண்டிருந்தன. 

ஆனால் அவளிடமிருந்து வந்த தகவல் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அதுவும் சிறிய துண்டுக் காகிதத்தில், அலுவலகம் விட்டு வீடு வந்த அவனுக்கு கணினித் திரைக்குமுன் காத்துக்கொண்டிருந்தது. 

‘உங்களை நம்பி நானும் ஏமாளியாக விரும்பவில்லை. குட் பை…’ 

மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்த்தான். 

‘என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டுப் போகணும்? ஒரு சின்ன சண்டை கூடயில்லையே?’ 

அவன் அலைபேசியை சோதித்தான். அன்று வந்த பல வாட்ஸ்அப் செய்திகள் படிக்காமல் இருந்தாலும் ஒன்று மட்டும் படிக்கப்பட்டிருந்தது. அது ஆண்ட்ரியாவிடம் இருந்து வந்திருந்தது. இப்போது என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் ஒருவாறு யூகிக்க முடிந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு ‘ஆ’ என்று அலறினான். அவன் கண்கள் இருண்டன. 

நான்கு வருடங்களுக்கு முன் விதைத்தது இன்று அறுவடைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. 

***************************************
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்…. 

*************************************** 

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 6

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -