சூர்யப்பாவை – 20

- Advertisement -

தேடல்களெல்லாமே கண்டடைவதில்
முடிவதில்லை எப்போதும்..
ஆனாலும் நாம் தேடல்களை
விட்டுவிடுவதில்லை ஒருபோதும்.
எல்லாத்தேடல்களின் நடுவமாய்க்
காதலே வீற்றிருந்து நம்மை
ஆட்டுவிக்கின்றது.
காதலின் கைமந்திரக்கோல்
நமைநோக்கி நீளும்போதெல்லாம்
புதிய தேடுதலைத் தொடங்குகிறோம்.

காதல் கைகாட்டிய இடத்தில்தாம்
கடல் நிலைகொண்டுள்ளது.
ஆணையிடுமிடத்தில் காதல்
அமர்ந்திருந்தாலும் எப்போதும்
ஆளுமைப்பண்பையே அணிகின்றது.
பெண்மைஆண்மையெனப்
பெரும்பரிமாணக் கோட்பாடுகளில்
பேரின்பம் காண்கின்ற காதல்
இருவரின் உள்ளத்திலும்
அன்பின் வெள்ளாமையைப் பெருக்குகின்றது.

உணர்வெங்கும் நேயப்படிமங்களைப்
பூசிவருகின்ற காதலிணைகள்
காதலால் களைப்பேறியும்
காதலிலேயே இளைப்பாறியும்
களிநயம்பொங்க வாழ்கின்றனர்.
ஆர்வத்தில் தொடங்கிப் பின்னர்
ஈடுபாட்டில் தொடர்வழிநடந்து
நிறைவின் ததும்புவதே
காதலின் பெருமாட்சி.

மாட்சிமைமிக்க மன்னுயிரில்
நீட்சியுறும் நெடுவாழ்வினில்
நீயும்நானும் காதலுக்காகவே
நெக்குருகி நெகிழ்ந்து நீராய்ச்
சூழ்ந்து மேல்கீழ் சுழன்று
தேங்கிட வேண்டுமென்கிறாய்.
கடலாகவே நிலைகொள் சூர்யா
உனக்குள் முழுவதுமாய்
நிறைந்து தரையாய்க்
கிடந்துனைத் தாங்குகிறேன்.
உள்ளும்புறமும் உன்னைத்
தாங்குவதற்காகவே
படைக்கப்பட்டிருக்கிறேன் நான்..

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -