சகடக் கவிதைகள் – 27

சில மணித் துளிகள்……

- Advertisement -

சில மணித் துளிகள்……

பசிக்கும் உணவுக்கும்
நடுவே சில நேரம்
நடுநிசியில் விழிப்பதுண்டு

விண்மீன்களை எண்ண முயன்று
விடியும்வரை களைத்ததுண்டு

எங்கோ தொலைவில்
எல்லையற்றப் பெருவெளியில்
ஏகாந்த சஞ்சாரத்தில்
என்னை மீட்டெடுக்கும் ஒரு கணம்
எனக்காகக் காத்திருக்கலாம்

ஒரு கணம் என்றால்
ஒரே ஒரு கணம்தானா… இல்லை
ஒரு கோடி கணங்களின் தொகுப்பா…. ?

பெருவெளிக்கு அப்பால் நிற்பவன் யாரோ? அவன்
பெருமூச்சு விட்டதால் உண்டான வெப்பமோ இவை..

அவன் காணமுடியா நுண்ணுயிராக
அண்டமே இருந்ததென்றால்
அனைத்தும் ஓர் உடலின் சதைத் துணுக்கோ? இல்லை

ஒரு துளி வியர்வையாய் இருக்கலாம்
ஒரு துளி ரத்தமாய்க்கூட இருக்கலாம்
ஒரு துகளைவிடப் பெரிதில்லையோ அண்டம்? எனில்…

ஒரு துகளின் உள்ளே
ஓராயிரம் உலகங்கள்

ஒவ்வொன்றின் தொடக்கமும் முடிவும்
ஒரு வினாடிக்குள்ளும் அடங்கலாம்

யாரோ ஒருவனின் மணித்துளிக்களுக்கு
ஏதோ ஒரு பிரபஞ்சமே அழியலாமென்றால்
காலத்தின் அளவுதான் என்ன?

ஆற்றில் விழுந்தபின் ஒரு சொட்டும் ஆறாவதுபோல்..
காலமற்றவனாய் மாற இக்கணம்கூடப் போதுமே…

காலச் சக்கரத்தின் அச்சாணி
காண்பவனின் பார்வையில்
கரைவதால்
என்னுடைய ஒரு நொடி
யாருக்கோ ஓர் ஆயுள்

யாருக்குத் தூக்கம் வராமல்
எந்த மொட்டை மாடியில்
எவன் விண்மீன்களை
எண்ணுகிறானோ அறியேன்…..

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -