சகடக் கவிதைகள் – 11

வழிப்போக்கன்

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வழிப்போக்கன்

பெயர் மறந்தேன்… ஊர் மறந்தேன்..
எங்கிருந்து வந்தேன்?
எதற்காக வந்தேன்?

எங்கே செல்லக் கிளம்பி
எங்கே வந்தடைந்தேன்?
எத்தனை தூரப் பயணம் இன்னும்
எதுவும் என் நினைவில் இல்லை…

என் வீட்டைத் தேடி அலைகிறேன் – வழிகேட்டுத் தெளியச்
சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்
எண்ணற்ற மனிதர்கள்
என்னைப் போலவே அலைவது கண்டு
திகைத்தபடி ஓரமாய் சென்று நிற்கிறேன்..

ஒருவரை ஒருவர் வழிகேட்டபடி செல்வதும்
ஒருவருக்கொருவர் வழி சொல்லிச் செல்வதும்
வழிகேட்டவனே வழிகாட்டியாய் மாறுவதும்
வழிகாட்டியவனோ கேட்டவனிடம் குழைவதுமாய்
இப்படி ஓர் விசித்திரப் பயணம்
இதில் யாருக்கும் நினைவில்லையாம் அவரவர்
இருப்பிடம்…

வளைந்து நெளிந்து குறுக்கும் நெடுக்குமாய் ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னல்…
அதில் முடிவில்லாத கதவுகளும்
அதில் ஒரு கதவுக்கே
கொத்துக் கொத்தாய் சாவிகளும்…..

போகும் திசை சரியானதென்றால்
பாதையைச் சகித்துக்கொள்ளும் கால்கள் என்றாலும்
இங்கே வழிசொல்பவர்களுமே வழிகேட்பவர்களாதலால்
இறுதியான வழியைக் காட்டுவார்தான் யாரோ?

ஆனாலும் சில மனிதர்கள்
அடித்துத்தான் சொல்கிறார்கள்
வழியிதுதான் என்று…
தனக்குப் பிடித்த திசை நோக்கி
தன்னை இழுக்கும் விசை நோக்கி

ஆட்சேபிக்கும் சிலரால் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை
ஆங்காங்கே முளைக்கிறார்கள் தற்காலிக வழிகாட்டிகள்
ஆயினும் தன் வீட்டை அடைந்தோர் தான் யாரும் இலர்…

கிளைவிட்டுப் பிரியும் பல நேர்வழிகளும் ஓரிடத்தில்
மீண்டும் கிளைவிட்டுப் பல நேர்வழிகளாய்ப் பிரிய..
ஒவ்வொரு முச்சந்தியிலும்
ஓய்ந்து தடுமாறுகிறேன்….

கூவிக் கூவிக் கெஞ்சுகிறார்கள் சிலர்
கை பிடித்து இழுக்கிறார்கள் சிலர்
குழப்பமாய் பின்னே சென்று
சாதி மதங்களெனப் பிரிகிறார்கள்
நாடு நகரமென்று பிரிகிறார்கள்
மொழிகள் இனமென்று பிரிகிறார்கள்…

பார்க்கும் வழி நெடுகிலும் அலைகிறது மனம்
நுகர்ந்ததையெல்லாம் கேட்கிறது நாசி
நாக்கோ புறம்பேச ஒளி ஆண்டு நீள்கிறது
இரைச்சலைப் புசித்தும் அடங்காத பசியோடு காதுகள்
தேவைகளும் ஆசைகளும் முடிவிலியாய் விரிய
கற்களும் முட்களும் துளைத்துக் கால்கள் ரணமாக

கண்களை மூடி அமர்ந்தேன்
வீட்டில் இருப்பதை உணர்ந்தேன்…

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -