களி கொள் நெஞ்சமே

மூன்று கவிதைகள்

- Advertisement -

களி கொள் நெஞ்சமே

இரவை ஆடையாகபூண்ட
நிழல்
கனவுகளின் சாலை வழியாக போகையில்
எதிர்பட்ட
வாகனவிளக்குகளால்
தூக்கி எறியப்பட்டு
காயம்பட்டு
துடித்துக் கதறிய பொழுது
மரங்கள் நடுங்கியே
புலம்புகையில்
மெல்லிய காற்றின் தழுவலில்
பறவைகள் தாலாட்டில்
கிழக்கிலிருந்து வருகிறாள்
நிலா
பனிக்கைகளால்
மருந்திட்டு சுகமாக்க.

??????????????????????????

மீளவும் அங்கொரு பகல்

வரிசைப் பனைமரங்கள் வாட்களாய் நிற்கின்றன
அருகே கருவேல மரம் பிசாசாய் தலைவிரித்திருக்கிறது
அதன் சடையாக கன்னுக்குட்டிகளின் மாசுகள் பொதியப்பட்ட ஓலைக்கொட்டான்கள்
குளம் அமைதியாயிருக்கிறது
மீன்கள் நீச்சலிட்டுத் திரிகின்றன
சலசலப்பில் சிலிர்ப்பு அடங்கவிலலை
மரம் தவமியற்றுகிறது
மழை வந்தபாடைக் காணாம்
இலைகளை கண்ணீராய் கொட்டுகிறது
கல்யாணமாகாத பிள்ளைகளின் பெருமூச்சு
குடும்பத்தை உறங்கவிடாது
கால்களைச் சுற்றிய பாம்பாய் பாடாய்படுத்தும்
ஒரு வார்த்தை இடறி விடுகிறது
மறு வார்த்தை பிடரியைக் கவ்வுகிறது
உதறித் தள்ளத்தள்ள உடலை அப்புகிறது
அலுத்துப் புழுங்குகிறீர்கள்
சலித்துக் கசங்கிப் போகிறீர்கள்
கடைசியாக கண்ணீர் விட்டு ஆற்றிக்கொள்கிறீர்கள்
இக்கணம் வாழ்வதால்
அடுத்த கணம் புதிராயிருந்தாலும்
பார்ப்போம் எக்கணம்
நமக்குரியதென்று.

??????????????????????????

பிரியங்கள் ததும்பும் ஆசீர்வதிப்புக் கூடம்

ஆராதனை புஷ்பமே
ஆன்மாவின் ராகமே
அன்பின் பெருங் கருணையே
என் லிங்கம் சிலையல்ல
உன் பீடம் ஜடமல்ல
ஜனேந்த்ர ஜனன எந்திரம்
உன்னில் மூழ்கிடுவேன்
உன் உடலினுள் நீச்சலிடுவேன்
உன் உயிரில் உயிர்த்தெழுவேன்
ஆசையற்ற புத்தர்
அழகான சிலையாய் வீற்றிருக்கிறார்
முழுக்கத் தங்கம்
நீண்ட இடைவேளை
முகம் மறந்து போச்சு
அன்பு மாறவில்லை
விழிகள் பேசுகின்றன
முத்தங்கள் பூக்கின்றன
கனவுகள் கூடு கட்டுகின்றன
என் முத்தம்
உன் முத்தம்
எல்லாம் நம் முத்தம்
அழகில் துளிர்க்கும் விஷமம்
அன்பில் கமழும் தெய்வாம்சம்
பிரியமானவர்கள் கந்தவர்க்கங்களிலான தூபஸ்தம்பங்கள்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -