கருப்பு ரயில்

கதையாசிரியர்: கோணங்கி

- Advertisement -

கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை ஓட்டத்தை அந்த நிலப்பரப்பே தீர்மானிக்கிறது. மழை பொய்த்துப் போன ஒரு நிலத்தில் வாழ்வாதாரம் தேடி மக்கள் பிற ஊர்களுக்குச் செல்லும் அவலத்தை பல சிறந்த படைப்புகள் பதிவு செய்திருக்கின்றன. வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ சிறுகதை அதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. அதே போன்று இள வயதிலேயே குடும்ப பாரம் சுமக்க தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு ரயிலேறிய சிறுவர்கள் அநேகம். தீக்குச்சியின் கரி பொசுக்கிய அந்தப் பிஞ்சுக் கரங்கள் இழந்த மகிழ்ச்சியைக் கூறும் கதைதான் கோணங்கியின் ‘கருப்பு ரயில்’.

குழந்தைப் பருவம் என்பது உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்தது. ஆனால் சபிக்கப்பட்ட சில தளிர்களின் வாழ்வில் அந்தப் பருவம் வெகு காலத்திற்கு நீடிப்பதில்லை. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய கதை என்றாலும் கதையில் எங்குமே துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. கதை முழுக்க அந்த இருள் நிலைக்கு முந்தைய களியாட்டத்தின் காட்சிகள்தான். அந்தச் சந்தோஷக் கூத்துகளின் முடிவை இறுதிப் பத்தியில் நெருங்குகையில் மனம் பெரும் துக்கத்தில் ஆழ்ந்து போகவும் அந்தக் காட்சிகளே காரணமாகி விடுகின்றன.

நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு தனித்துவமான ஆளுமை கோணங்கி. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் அவரது எழுத்து நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது. முழுக் கதையும் ஒரு செறிவான கவிதைக்குண்டான அழகியலுடன் மிளிர்கிறது. சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் அழகினில் கிறங்கி நாம் அதன் பின்னே ஓடிக் கொண்டிருக்கும்போது அதன் சிறகு முறியும் வேளை குறித்த பயமும் அடியாழத்தில் கூடவே தொடர்கிறது,  

கதையின் தலைப்பே ஒரு குறியீடு தான். ‘கருப்பு ரயில்’ என்பது அவர்களை இருண்ட எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வது. முனியம்மா மகன் சிவகாசிக்கு ரயில் வண்டி ஏறுவதோடு தொடங்குகிற கதை நெடுக அதன் பின்  பிள்ளைகளின் ரயில் தடதடக்கும் ஓசைதான். நாமும் அவர்களின் பயணத்தில் பங்கு கொண்ட உற்சாகம் பிறக்கிறது. அந்த ஊர்ச் சிறுவர்களுக்கு ரயில் விளையாட்டு என்பது என்றும் சலிப்பு தராதது. கிராமங்களின் வயல்களின் ஊடே ரயில்கள் ஓட ஆரம்பித்த காலத்திலிருந்தே குழந்தைகளின் ரயிலும் தனது ஓட்டத்தைத் தொடங்கிவிட்டது. குழந்தைகள் வளர்ந்து சென்றாலும் ரயிலின் பயணம் முடிந்ததில்லை. அந்தச் சிறுவர்களின் குதூகலத்தை அவர்களில் ஒருவனாக இருந்து கோணங்கி பதிவு செய்திருக்கிறார்.  

கந்தனின் தங்கை, சின்ன பாப்பாவின் மழலை விளையாட்டில் நம் மனமும் சொக்கித் தான் போகிறது. அவளின் “நானுக்க ரயிலு”க்கான தண்டவாளம் காரை பிளந்த வீடுகளின் சுவரில் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது. கந்தன் சின்ன பாப்பாவிற்காக பொன்வண்டு ரயில் செய்ய எடுக்கும் பகீரத முயற்சிகள் அன்பின் வெளிப்பாடு. கிராமத்துச் சிறுவர்கள் விளையாட்டுகளில் இருக்கும் அழகியல்கள் வெகு நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்வில் அற்பமான விஷயங்களும் அளப்பரிய மகிழ்ச்சி தரக்கூடியவை. கோணங்கியின் எழுத்து அந்தச் சிறுவர்களோடு நம்மையும் சிநேகம் கொள்ள வைக்கிறது.

.உலகில் ஏதோ ஒரு மூலையில் இன்றும் குழந்தைகளின் இளமைக் காலத்தை வறுமை சிதைத்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த நிலை அழியும் வரை இது போன்ற கருப்பு ரயில்களின் ஓசை நிற்கப் போவதில்லை.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -