ஊழ் (15)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

காவல் நிலையத்தில் இருந்து வந்த அழைப்பைப் பேசி முடித்துவிட்டு. அமுதனின் அப்பா சிறிது நேரம் அமைதியாக யோசனையில் ஆழ்ந்தார். பின் அலைபேசியை மடிமீது வைத்துவிட்டு அங்கே அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார்.

“பாத்தீயா நல்லவிங்க நல்லவிங்கனு சொன்னியே நாம பேசிகிட்டு இருக்கப்பவே போலிஸ் கம்ளைன்ட் பன்னிருக்காய்ங்க. அவிங்க ஒரு முடிவோட தான்யா இருக்காய்ங்க.” என்றார் பெரியவர் மச்சக்காளை.

“யார் யார் மேல மாமா கேஸ் குடுத்துருக்காய்ங்க மாமா? வரதட்சணை கேசா?” என்றார் சீனு மாமா.

“ம்ம்ம்… வரதட்சணை கேஸ் தான். அமுதன், நான், அவங்க அம்மா அப்பறம் உங்கமேலயும் லதாமேலயும் கூட குடுத்திருக்காங்களாம்”

அமுதனின் மனம் நொந்தது. ‘நான் செய்த தவறுக்கு என்மீது என்ன வேண்டுமானாலும் பழி சுமத்தி இருக்கலாம். என் குடும்பம் என்ன செய்தது? எங்களுக்கு உதவி செய்ய வந்த என் அக்கா குடும்பம் என்ன செய்தது? இவர்களுக்கு ஏன் இந்த வன்மம்? இதில் மதுமதிக்கும் உடன்பாடு தானா? எல்லாவற்றிற்கும் நியாயம் பேசும் அவள்கூட இப்படி ஒரு பொய்க்கு துணை போவாளா? நாலு சுவற்றிற்குள் பேசி முடித்திருக்கலாம். அவளுக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை என்று என்னால் எப்போதும் நிரூபிக்க முடியும் அது அவளுக்கே தெரியும் இருந்தாலும் ஏன் இப்படிச் செய்கிறாள்? அவள் பேசிய காதல் வார்த்தைகள் எல்லாம் பொய் தானா? அதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் என்னை இப்படி ஒரு கீழ்மைக்கு தள்ள அவள் மனம் சம்மதித்திருக்காதே?’ அடுக்கடுக்காய் அவன் மனக் கேள்விகள் பொங்கி அவன் முன் நின்றது. அவன் மனம் அவனுக்காக மட்டுமே வாதாடியது. அவன் எந்தத் தவறும் செய்யாத உத்தமன் என்றது. ஒருவேளை செய்தது தவறாகவே இருந்தாலும் தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று அவனை நம்பவைத்தது. எதுவும் பேசாமல் அவன் மனதோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.

சீனு மாமா “நம்ம வக்கீல் பரமசிவம்கிட்ட பேசுனா என்ன பண்றதுன்னு ஒரு ஐடியா சொல்லுவாரு. அப்படியே இன்னைக்கு சாயந்தரம் போலிஸ் ஸ்டேஷனுக்கும் அவரை கூட்டிகிட்டு போறதுதான் நல்லது”

“ஆமாப்பா போலிசுக்கெல்லாம் நல்லா காச இரைச்சுருப்பான் அவன். கட்சில வேற இருக்கான்ல. போலிஸ்காரனுக அவனுக்குத்தான் பேசுவானுக நம்ம ஒரு நல்ல வைக்கில கூட்டிக்கிட்டு போறதுதான் நல்லது.” என்றார் சீனுமாமா சித்தப்பா என்றழைத்த அந்தப் பெரியவர்.

சீனு மாமா அவர் அலைபேசியை எடுத்து பேசிக்கொண்டே வராந்தாவில் சென்று அமர்ந்துகொண்டார்.

உள்ளே இருந்தவர்களுக்கு அமுதனின் அக்கா உணவு பரிமாறினாள். வந்ததிலிருந்து இப்போதுவரை அமுதன் அவன் அம்மாவை பார்க்கவே இல்லை. அவளைத் தேடிச்சென்று அவள் மடியில் விழுந்து அழவேண்டும் போல இருந்தாலும். அவள் கண்களை நேருக்குநேர் பார்க்க அவனுக்கு அச்சமாக இருந்தது. அவள் அவனுக்கு கற்றுக்கொடுத்த ஒழுக்கத்திலிருந்து தவறிவிட்டதாலோ என்னவோ அவளும் அவனைப் பார்க்க விரும்பாதவளாய் மறைந்தே இருந்தாள்.

“வாப்பா நீயும் வந்து சாப்பிடு” என்று கையைச் சப்பிக்கொண்டே அமுதனை அழைத்தார் மச்சக்காளை.

“இல்லைங்க இருக்கட்டும் எனக்கு பசிக்கல நான் அப்பறம் சாப்ட்டுக்கிறேன்”

அவன் அக்கா அருகில் வந்து மெதுவாக “நீ வேணும்னா மேல போடா அப்பறம் உனக்கு சாப்பாடு குடுத்தனுப்புறேன்” என்றாள்.

அவன் அக்காமட்டும் இல்லை என்றால் அமுதனின் குடும்பம் இன்னுமும் ஒடிந்து போயிருப்போம். சரிந்துகொண்டிருக்கும் கூரையைத் தாங்கும் தூண் போல இன்று அவளும் அவள் கணவரும் தான் அவர்களைத் தாங்கி கொண்டிருக்கின்றனர். அவர்கள் வீடு வாசல் அத்தனையும் விட்டுவிட்டு மூன்று நாட்களாக இங்கேயே கிடக்கிறார்கள்.

‘இவர்களுக்கு என்னால் என்ன கைமாறு செய்ய முடியும்?’ அக்காவை அழாதகுறையாக நன்றியோடு நிமிர்ந்து பார்த்தான் அமுதன்.

ணி மாலை நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் அவர்கள் எல்லாம் காவல்நிலையம் செல்ல வேண்டும். அங்கு என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. அவன் அக்கா அழைக்கும் குரல் கேட்டது. அமுதன் அவனரையில் இருந்து கீழே சென்றான் கதவோரத்தில் நின்றுகொண்டிருந்த அவன் அம்மா வேகமாக அடுப்படிக்குள் சென்றுவிட்டாள். இப்போது அந்த பெரியவர்கள் அங்கில்லை. சீனு மாமாவும் அப்பாவும் ஒரு வெள்ளைச்சட்டை போட்ட இளைஞனுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

“வாடா உட்காரு” அந்த இளைஞனுக்கு அருகில் இருந்த இடத்தைக் காண்பித்து அமுதனை அமரச்சொன்னார் அவன் அப்பா. அந்த இளைஞர் “ஹெலோ நான் அட்வகேட் வெங்கட். பரமசிவம் சார் அனுப்பிவிட்டாரு. உங்ககிட்ட கொஞ்சம் டீட்டைல்ஸ் வேணும்” என்றான் அமுதனைப் பார்த்து.

“சொல்லுங்க என்ன வேணும்.”

“உங்க மேர்ஜ் சர்டிபிகேட், உங்களோடது அப்பறம் உங்க ஒய்போடா பாஸ்போர்ட் காப்பி வேணும்.”

“என்னோட மெயில்ல தான் இருக்கு” என்றான்.

வெங்கட் அவரின் முகவரி அட்டையை எடுத்து அமுதனிடம் கொடுத்து அதில் உள்ள மின்னஞ்சலுக்கு அதை அனுப்பச்சொன்னார்.

வெங்கட் சீனு மாமாவைப் பார்த்து “பரமசிவம் சார் ஏற்கனவே ஸ்டேஷன்க்கு பேசிட்டாரு. நீங்க ஈவினிங் ஒரு ஆறு மணி போல ஸ்டேஷனுக்கு வலதுபக்கம் இருக்க பஸ் ஸ்டான்ட தாண்டி ஒரு பேக்கரி இருக்கும் அது பக்கத்துலயே இருங்க. எங்ககூட பொதுவான ஒரு நாலுபேரை மட்டும் கூட்டிட்டு போறோம். தேவைப்பட்டா மட்டும் நீங்க வாங்க” என்றார்.

வெங்கட் சொன்ன இடத்தில் இரு குவாலிஸ் ஒரு இன்னோவாவில் சென்ற அமுதனும் அவன் குடும்பத்தாரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் இன்னும் சில உறவினர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்தும் நின்றுகொண்டிருந்தார்கள். அவன் அம்மாவும் அக்காவும் அவர்களுடன் வரவில்லை. ஏழுமணி போல் வெங்கட் வந்து அந்த நாலு பெரியவர்களையும் அழைத்துச் சென்றார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் காவல்நிலைய வாயிலில் நின்று வேவு பார்த்தனர். அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவல் அவர்கள் அனைவருக்குமே இருந்தது. இரண்டுமணி நேரத்திற்கு மேலாக அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக வேவு பார்த்தவர்களில் ஒருவர் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

“என்னன்னு தெர்ல, உள்ள ஒரே சத்தமா இருந்துச்சு இப்போ அந்தப் பொண்ண உள்ள கூட்டிட்டு போறாங்க. அடுத்து அமுதனையும் கூப்ட்டாலும் கூப்பிடுவாங்க” என்றான் அவசர அவசரமாக.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 16

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -