அழுக்குக்கண்ணாடி – 14

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

ஒரு junk food factoryயைப் போல் மனம் விடாமல் தேவையற்ற எண்ணங்களை உருவாக்கிக்கொண்டே போவதால், மனிதனின் திறமை ஒருமுகப்படாமல் சிதறிப் போகிறது. செயல்கள் அனைத்திற்கும் எண்ணங்களே ஆதாரமென்பதால் அது தான் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி பெற்றதாக திகழ்கிறது. கச்சாப் பொருள் தரமானதாக இருந்தால் தானே உற்பத்தியாகும் இறுதிப் பொருளும் தரமானதாக இருக்கும். அதே லாஜிக் வாழ்க்கைக்கும் பொருந்துமல்லவா? எண்ணக்குவியல்கள் குப்பைமேடாக மனம் முழுவதும் ஆக்கிரமித்துக்கொள்ளும்போது, அதன் முடிவான செயல்களும் அதே தரத்தில் தான் நிகழ்கின்றன. ஆனால் வாழ்க்கையில் நடக்கும் செயல்களை குறை சொல்லி நொந்துகொள்ளும் நாம், அதன் மூல காரணமான உள்ளே இருக்கும் மனதை கவனிக்கத் தவறுகிறோம். வீட்டில் நடக்கும் சிறு சண்டையில் ஆரம்பித்து, அலுவலகத்தில் உள்ள பிரச்சனை, சமூகப் பிரச்சனை, நாட்டின் பிரச்சனை என்று எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தனி மனிதர்களின் மனம்தான் காரணம். ஆனால் தனிமனித மாற்றத்தை விட்டுவிட்டு பிரச்சனைகளுக்குக் காரணமாக, பிற மனிதனையோ, பிற சமூகத்தையோ இல்லை பிற நாட்டையோதான் அடையாளப்படுத்துகிறோம். அதனால் சரியான தீர்வை எட்டமுடியாமல் போவதோடு மட்டுமின்றி சக மனிதர்களின் மேல் வெறுப்பையும் வளர்த்துக்கொள்கிறோம்.

வீடு முதல் அலுவலகம் வரை நடக்கும் பிரச்சனைகள் சரி, ஆனால் நாட்டில் நடக்கும் பெரும் நிகழ்வுகளான கலவரங்களுக்குமா தனிமனிதனின் மனம் காரணம் என்ற சந்தேகம் வரலாம். ஒரு உதாரணம் பார்க்கலாம். ஹிட்லர் என்கிற ஒரு தனிமனிதனுடைய வெறுப்பு, எத்தனை லட்சம் யூதர்களை கொன்று குவித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரே ஒருவருடைய எண்ணம் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்ற பார்த்தீர்களா. ஆனால் அங்கே வாழ்ந்த ஜெர்மனியர்களுக்கு அப்போது அவர் ஹீரோவாகத் தெரிந்தார். இல்லாவிட்டால் யாருக்கும் அவருடைய எண்ணம் சென்று சேர்ந்திருக்காது. இவ்வளவு பேரைக் கொல்வது நல்லது என்று எவ்வாறு அவர் அந்த மனிதர்களை நம்ப வைத்தார்? மீண்டும் மீண்டும் மக்களிடையே பேசும் போது “நம் பிரச்சனைகளுக்குக் காரணம் யூதன்தான்” என்று கண்முன்னால் ஒரு பொது எதிரியை நிறுத்திவைத்தார். ஆகவே அவர்கள் மீது கல்லெறிவது மிகச் சுலபமாக இருந்தது. இதுவே புத்தர் போன்ற ஒருவர் அந்த நாட்டை ஆண்டிருந்தால் பிரச்சனைகளுக்குக் காரணம் அவரவர் மனமே என்று எளிமையாக முடித்திருப்பார். பிறர் மீது கல்லெறியத் தூண்டுவது எளிது. ஆனால் சுயபரிசோதனை செய்யத் தூண்டுவது மிக மிகக் கடினம். தன் மீது தான் பிரச்சனை என்று சொல்வதை எந்த மனிதனும் ஏற்க விரும்புவதில்லை. அவனுக்கு பழி சொல்ல எப்போதும் யாராவது வெளியே தேவைப்படுகிறான்.

இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் தன்னைப்பற்றியே முழுவதும் அறியாத மனிதன், எப்போதும், எல்லா விஷயங்களுக்கும் ஆணித்தரமான தீர்வை முன்வைத்திருக்கிறான். இதன் மூலம் தவறான எண்ணங்களை சமூகத்தில் விதைக்கிறான். மனிதனுடைய EGO தனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று முழுவதுமாக நம்புகிறது. இங்கே EGOவை திமிர் என்கிற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். தன்னுணர்வு அல்லது சுயமதிப்பீடு என்பதே சரியான பொருள். EGO வேறு, மனம் வேறு அல்ல. ஏனென்றால் ஒருவரின் பிரத்யேகமான எண்ணங்கள்தான் அவரை தனித்தன்மையுடன் காட்டுகிறது. வெளியுலகில் நீங்கள் யார் என்று நிர்ணயிப்பதே உங்கள் மனம்தான். இல்லையென்றால் தொழிச்சாலையில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் போல் எல்லோரும் ஒரே போன்று சிந்தித்திருப்போம். மனதின் முக்கியத்துவம் இந்த தனித்தன்மையினால் தான் உயர்கிறது. இந்த விதத்தில் மனதின் பயன்பாடு மிகவும் அற்புதமானது. இந்த மனதினால் தான் பல்வேறு சிந்தனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன.

ஆனால் அதே சமயம் மனம்தான் எல்லாம் என்றும், அதற்கு மேல் எதுவும் கிடையாது என்றும், உச்சபட்ச மதிப்பீட்டை மனதிற்கு தரும்போதுதான் மனிதன் ஆபத்தைச் சந்திக்கிறான். இதை அவன் தெரிந்து செய்வதில்லை, மனம் அவனை நம்பவைக்கிறது. “நானும் நீயும் ஒன்றுதான்” என்று எப்போதும் அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது மனம். ஹிட்லரைப் போல் தொடர்ச்சியாக ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. பிறந்ததிலிருந்தே மீண்டும் மீண்டும் இதே உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தியதன் மூலம் நம்மை மிக ஆழமாக நம்பவைத்திருக்கிறது. அதனால் தான், தன்னிடமிருந்து மனதை ஒரு நாளும் மனிதன் பிரித்துப் பார்த்து உணர்ந்ததில்லை. மனதை, தான் என்று எண்ணாமல், மிக அருமையான ஒரு கருவி மட்டுமே என்று புரிந்துகொண்டால், அதனால் உருவாகும் சமூக மதிப்பீடுகள் தற்பெருமையாக மாறி தலைக்கும் ஏறாது, தாழ்ந்து சென்று இதயத்திலும் தைக்காது. நாம் மனதை மீறிய ஒன்று என்று புரிந்துகொண்டால் மட்டுமே எண்ணங்களைப் பகுத்தறிய முடியும். இதற்குத் தான் பகுத்தறிவு என்று பெயரே தவிர வெறுப்பைத் தூவுவதற்கல்ல.

– தொடரும்

Previous article
Next article
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -