இவர்கள்
எதையோ
வெளிச்சம் என்றார்கள்…
அவர்கள்
எதையோ
இருள் என்றார்கள்…
வெளிச்சத்தை
ஏற்றுக்கொள்ளாதவர்கள்,
எதை
இருள் என்றார்கள்
எனத் தெரியவில்லை.
இருளை
ஏற்றுக்கொள்ளாதவர்கள்
வெளிச்சத்தின் தகிப்பில்
துடித்தனர்.
வெளிச்சம்
தன் முடிவுரையை
தானே எழுதியது…
இருள் வாசிகள்
குதூகலத்துடன்
கொண்டாடித் தீர்த்தனர்.
அவர்களுக்கு
தெரிந்திருக்கவில்லை…
வெளிச்சமற்ற
காலத்தால்,
எதையும் கற்பனை செய்து
பார்க்கமுடியவில்லையென்பது.
இருளற்ற
வெளிச்சமோ கூசியதால்
கண்களை திறக்கமுடியாமல்
தவித்தனர்.
அவர்கள்
தனித்தனி குழுக்களாக
பிரிந்து சென்று –
தொலைந்த ஒளியையும்,
அறியாமையையும்
தேடிக்கொண்டிருந்தனர்.
ஒருவழியாக
நிழலைக்கண்டு பிடித்தவர்கள்
இருள் கிடைத்துவிட்டதென
கூச்சலிட்டனர்
இருள் சூழ்ந்த
மேகம் தோன்றியதால்
உண்டான ஒளிக்கீற்று கண்டு
எக்காளமிட்டு சிரித்தனர் – வெளிச்சம்
கண்டடைந்தவர்கள்
இருளும்
வெளிச்சமும்
தழுவிக்கொண்ட
மாலை நேரத்தில்
போருக்குத் தயாரானார்கள்
அவர்கள்.
இருளை நேசித்தவர்கள்
பகல் பொழுதை விரும்பினர்.
பகலை ஆராதித்தவர்கள்
இருளை தேடிச்சென்றனர்
ரத்தமாக மாறிய பகல்
இருளில் உறைந்து கிடந்தது
கண்களாக மாறிய இருள்
பகலில் பார்வையற்று திரிந்தது