மனுசி

நூலாசிரியர் : பாமா

- Advertisement -

நூலாசிரியர்: பாமா

பதிப்பகம்: விடியல் பதிப்பகம்

விலை: ரூ.130

திருமணம் என்னும் பந்தத்துக்குள் சிக்காமல் சமுதாயம் தரும் பலவித நெருக்கடிகளை எதிர்கொண்டு தன்னளவில் மகிழ்ச்சியாக வாழும் ஒரு தலித் பெண் தான் இந்த ‘மனுசி.

தலித் பெண் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் பாமாவுக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. தன் வரலாற்று பாணியில் பாமா எழுதிய ‘கருக்கு’ நாவல் பெரும் கவனிப்பைப் பெற்றது. நான் அந்த நூலை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் பலர் கூறுவதிலிருந்தும் பாமாவின் சொந்த வாழ்வு பற்றி அறிவதிலிருந்தும் ‘மனுசி’ நாவலும் அதன் தொடர்ச்சியாகவே தெரிகிறது. கதையில் தெரியும் யதார்த்தம் ராசாத்தியை ரத்தமும் சதையும் உள்ள ஒரு மனுசியாகவே காட்டுகிறது.

நாவல் படிக்கத் தொடங்கியவுடனே நம்மை ஈர்ப்பது பாமாவின் தனித்துவமான மொழிநடை. மண் வாசனை கமழும் எளிய பேச்சு வழக்கிலேயே அவர் ராசாத்தியின் மொத்த கதையையும் நமக்குக் கூறுகிறார். அதுவே ஒரு தோழியிடம் இருந்து மற்றொரு தோழியின் கதையைக் கேட்பது போல ஒருவித நெருக்கம் ஏற்படுத்துகிறது.

பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஒடுக்குமுறைகளைப் பல படைப்புகள் பேசியிருந்தாலும் பாமா இந்நாவலில் இன்னும் பல சொல்லப்படாத விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்.

ராசாத்தி ஒரு பள்ளி ஆசிரியை. தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட நினைக்கும் ராசாத்தி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கிறாள். நகரத்தில் வாழும் பெண்களுக்கே தனித்த வாழ்கை என்பது சவாலான ஒன்று எனும்போது கிராமத்துச் சூழலில் வாழும் ராசாத்தியின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.

ராசாத்தியும் ஆரம்பத்தில் தாயின் வற்புறுத்தலின் பேரில் பெண் பார்க்கும் படலங்களில் பொம்மையாக வந்து நிற்கிறாள். அந்தச் சடங்குகள் எல்லாம் அவளுக்குச் சிரிப்பையே வரவழைக்கின்றன. ஏதேதோ காரணங்கள் கூறி அவளை மாப்பிளை வீட்டார் நிராகரிக்கின்றனர். பின் தான் விரும்பிய வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறும் அவளுக்கு அந்த வாழ்கையே பிடித்துப் போக தனியாகவே தன் வாழ்க்கையைத் தொடருகிறாள். அதன் பிறகுதான் தான் நினைத்தபடி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் இந்தச் சமுதாயத்திற்கு ஏற்படும் இடைஞ்சல்கள்(??) குறித்து ஒவ்வொன்றாக அவளுக்குத் தெரிய வருகிறது.

அவள் செல்லும் எல்லா இடத்திலும் அவள் திருமணம் பற்றிய கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகிறாள். இல்லை என்று கூறினால் இலவசமாகக் கிடைக்கும் அறிவுரைகளால் திணறிப் போகிறாள். ஒருமுறை பேருந்தில் அருகில் அமர்ந்த ஒரு கிழவி அவளுக்குத் திருமணமாகிவிட்டதா? என்று கேட்க, எதற்கு வம்பு என்று இவள் ஆகிவிட்டது என்று கூறிவிடுகிறாள். அதற்குப்பின் அந்தக் கிழவி இவள் குடும்பம் பற்றிக் கேட்கும் கேள்விகளால் திக்குமுக்காடிப்போகிறாள் ராசாத்தி. நல்லவேளையாக அந்தக் கிழவி இறங்க வேண்டிய நிறுத்தம் வரவே நிம்மதிப் பெருமூச்செறிகிறாள். அதற்குப் பின் அவள் அந்த யோசனையையும் கைவிட்டுவிடுகிறாள்.

தங்குவதற்கு வீடு கிடைக்காமல் அவள் பல அவஸ்தைகளுக்கும் உள்ளாகிறாள். எப்படியேனும் தனக்காக ஒரு சொந்த வீடு கட்டிக்கொண்டுவிட வேண்டுமென்று அவள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருவழியாக தனக்கான வீட்டைக் கட்டி அதில் குடிபுகும் முதல்நாள், வீட்டின் தரையில் சந்தோஷத்தில் அவள் உருண்டு பிரளும் காட்சி படிப்பவரைக் கண்ணீர் உகுக்கச் செய்யும்.

பல ஆண்களால் உதவி கிடைக்கபெற்றாலும் சில சபல ஆண்களின் தொல்லைகளுக்கும் உள்ளாகிறாள் ராசாத்தி. அப்படியானவர்களிடம் இருந்து அவள் தப்பி வருவதற்குள் நமக்கு இதயத் துடிப்பு ஏறி இறங்குகிறது. சில திரைப்படங்களில் இது போன்று தனித்து வாழும் பெண்களைப் புதுமைப் பெண்களாக, கராத்தே வீராங்கனைகளாக சித்தரித்து விடுவதுண்டு. ஆனால் ராசாத்தி பதட்டத்துடனும் பயத்துடனும் அந்த நொடி அவளையறியாமல் தலைதூக்கும் தைரியத்துடன் ஒவ்வொரு இக்கட்டிலிருந்தும் தப்புகிறாள்.

தனிமையில் ராசாத்தி செய்யும் சில செயல்கள் நம் மனங்களை நெகிழச் செய்பவை. ஒரு அலுவலகத்தில் தற்காலிகமாகத் தங்கியிருக்கையில் அங்கு இருக்கும் தொலைபேசியின் அலைவாங்கியைக் காதில் வைத்துக் கொண்டு அடுத்த முனையில் இல்லாத நபருடன் பேச்சில் ஈடுபடுகிறாள். அம்பேத்காருக்கும் ஏசுவிற்கும் நடுவே அவள் கற்பனை செய்யும் உரையாடல் சுவாரஸ்யமானது. சிக்குன்குனியா வந்து அவதியுறும்போது தன் கால்களுடனே அவள் பேசும் இடத்தில் சிறிதும் அவளிடம் சுய இரக்கத்தின் சாயல் தெரிவதில்லை. தனது தனிமையை அவள் ஒருபோதும் வெறுக்கவில்லை. தனக்கேயுரிய வகையில் அதனை மகிழ்ச்சி மிக்கதாக மாற்றிக் கொள்கிறாள்.

ராசாத்தியின் நினைவுகள் வழி அவள் வாழ்வின் சம்பவங்கள் முன்னும் பின்னுமாக சொல்லப்படுகின்றன. அவளைச் சுற்றி இருக்கும் பல குடும்பங்களிலும் பெண்கள் படும் துன்பங்கள் பார்த்து அவள் எடுத்த முடிவில் மேலும் மேலும் உறுதியாகிக் கொண்டே போகிறாள். குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷங்கள் அவளுக்குப் புரியாமல் இல்லை. இருப்பினும் சுதந்திரத்தின் பாதையை அவள் தேர்வு செய்கிறாள்.

குடும்ப அமைப்பு தரும் பாதுகாப்பிற்காக பெண்கள் தர வேண்டிய விலை சற்று அதிகம்தான். ராசாத்தி போன்ற சிலரே துணிச்சலாக அதன் கட்டுக்களில் இருந்து விலகி தங்களுக்கென தனித்த பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்த பயணத்தின் மேடு பள்ளங்களை பாசாங்கில்லாத தன் எழுத்தால் ‘மனுசி’ நாவலில் அழுத்தமாக பதிவு செய்கிறார் பாமா.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -