தொலைக்க மறுக்கும் தேடல்

ஓர் அனுபவம்

- Advertisement -

பேனாவைக் கையில் பிடித்து இரண்டு மணி நேரம் கடந்து விட்டது.இன்னுமும் என் கைகளில்தான் அது மேலும் கீழுமாக சுற்றிக் கொண்டிருக்கிறது.ஓரிரு வார்த்தைகளை எழுதுகிறேன்.பின்னர் மனம் அதைத் தடுத்து விடுகிறது.எழுதிய பேனாவால் மீண்டும் அதை அழிக்கிறேன்.எழுதும் போது தட்டுத்தடுமாறிய பேனா அழிக்கும் போது விரைந்து செயல்பட்டுக் கொள்கிறது.

பேனாவின் மீது அவ்வப்போது ஆத்திரம் கொள்ள நேரிடுகிறது.ஆத்திரம் தலைக்கேறி விட்டால் பேனாவைக் கீழே வைத்து விடுவேன்.தூக்கியெறிந்ததில்லை.அப்படி செய்ய தோன்றியதுமில்லை.இந்த பேனா போனால் என்ன அடுத்த பேனா இருக்கிறதே என்று ஒரு போதும் நினைத்துக் கொள்வதில்லை.எத்தனைப் பேனாக்கள் என் பைக்குள் நிறைந்து கிடந்தாலும் அனைத்தும் எழுதப் பயன்படப்போவதில்லை‌.எல்லா பேனாக்களும் எழுத்தை உருவகப்படுத்துவதில்லை.கிறுக்கல்களுக்கு பயன்படும் பேனாகள் அதிகம்.

‘பார்க்கர்’ பேனா கூட என்னிடம் உள்ளது.அதை எழுதவும் பயன்படுத்துவதில்லை;கையொப்பமிடவும் பயன்படுத்துவதில்லை.தொண்ணூறு சென் பேனாவைத்தான் என் கைகள் தேடும்.எழுத்து நமக்கு வளைந்து கொடுக்கிறதா?நாம் எழுத்துக்கு வளைந்து கொடுக்ககிறோமா என்ற கேள்விக்குப் பதில் அவரவரிடத்தில்தான் உள்ளது.பேனா என் சொல்படி நடக்கிறது.

இதுவரை இரண்டு வரிகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்.என் பேனா எழுத தயங்குகிறதா என்று அவ்வபோது நான் சிந்திப்பதும் உண்டு.என் மூளை செயல்பட்டால்தான் கைகளுக்கும் புத்துணர்வு வரும்.அவை கொடுக்கும் உந்துதலில் தான் பேனா எழுத ஆரம்பிக்கும்.என் பேனா மூளையின் கைகளின் உத்தரவுக்காக ஏன் காத்துக் கிடக்க வேண்டும்?அடுத்தவரின் சிந்தனையைத்தான் எழுத வேண்டுமா?தானாக இயங்காதா?பல முறை என் பேனாவைத் திட்டியுள்ளேன்,அது திரும்ப பேசாது என்ற நம்பிக்கையில்.முறையாக,அழகாக எழுதாமல் முரண்டுக் கொள்ள பேனாவிற்குத் தெரியாது.அதை அஃறிணை என்று மட்டும் ஒரு போதும் நினைத்து விட மாட்டேன்.அது என் அசைவுக்கு இயல்பாக நகர்ந்து கொண்டிருக்கும் உற்ற தோழன்;என் மறுபக்கத்தைக் காத்து நிற்கும் ரகசிய சினேகிதன்.

கன்னத்திலோரோம் பேனாவைத் தட்டிக் கொண்டு வாயினோரம் லேசாகக் கடித்தும் கொண்டுச் சிந்திக்கிறேன்.

என் பேனா கடியையும் தாங்கிக் கொண்டு என்னோடு சிந்திக்கிறது.

காந்தி முருகன்

காந்தி முருகன்
காந்தி முருகன்https://minkirukkal.com/author/kanthimurugan/
மலேசியாவில் வளர்ந்து வரும் புதிய படைப்பாளர்.இயல் பதிப்பகத்தின் வெண்பலகை சிறுகதை பயிலரங்கில் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் வழிக்காட்டுதலில் பயிற்சி பெறும் மாணவி. சிறுகதை,கவிதை,விமர்சனப் பார்வை என தனது எழுத்தாற்றலை விரிவாக்கி கொண்டிருக்கிறார்.தமிழ் நாட்டின் பைந்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் தி.ரா. விருது பெற்றிருக்கிறார். மலேசிய வானொலி மின்னல் பன்பலையில் அமுதே தமிழே நிகழ்ச்சியின் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -