ஜூம் கலாட்டா – 7

ஜூம் வானவேடிக்கை

- Advertisement -

“அப்பா !!! தலை தீபாவளிக்கு ஒரு கம்பி மத்தாப்பு கொளுத்தியாவது போட்டோ எடுத்துக்குறேனே?” ஏக்கமாய் ரமேஷ் கேட்ட போது குணாவிற்கு அழுகை வந்துவிட்டது. இவனுக்கு எருமை வயசு ஆச்சேனு கல்யாணம் செஞ்சி வெச்சா இன்னும் என்கூட உட்கார்ந்து டாம் அண்ட் ஜெர்ரி பார்த்து சிரிக்குறான், கம்பி மத்தாப்புக்கு ஆசை படுறான். இவனை வீரனாக எப்படி மாத்துவது? என்று நினைத்த மாத்திரம் “இதோ வந்துட்டேன்” என்று சற்று தோய்ந்த குரலில் ஜூமியன் வந்தான்.

“என்னடா காலைல அடி பலமா பட்டிருக்கும், இன்னும் 1 மாதம் வரமாட்டேனு நினைச்சேன்” என்று உண்மையாக வருந்தினார் குணா.

“சார், நல்ல வேளையா அந்த Robotக்கு சார்ஜ் கம்மியா இருந்தது. உங்க வீட்ல முழுதா சார்ஜ் போடலாம்னு நினைச்சிருந்தேன். அது செஞ்ச அட்டகாசத்துல 2 தெரு என்னை இழுத்துனு போய்ட்டு off ஆகிடுச்சி.”

“இரு இரு. டேய் ! Robotக்கு சார்ஜும் எங்க வீட்ல போடுறியா? வேற என்ன என்ன எங்க வீட்ல செஞ்சியிருக்க?” இறைந்தார் குணா

“சார் அதெல்லாம் விடுங்க. இப்ப உங்க பையனோடு தலை தீபாவளியை இப்படி அநியாயத்துக்கு பாழாக்கிட்டேனேனு என் மனசு கஷ்டமாகிடுச்சி. அதான் அதுக்கு பரிகாரம் செய்ய வந்திருக்கேன்”

“டேய் ! உனக்கு மனசுனு இருக்கா? அது வலிக்குமா? நீ பரிகாரம் செய்யப் போறியா? சூன்யம் வெச்சித்தானே உனக்கு பழக்கம்?” என்று வெடித்தார் குணா

“சார் ! ஒரு பைசா வாங்காம உங்க பையன் தலை தீபாவளியை சரவெடி வெடிச்சி கொண்டாடுற சூப்பர் ப்ளான் வெச்சியிருக்கேன்” என்று நெகிழ்ந்தான் ஜூமியன்.

“என்னது காசு வாங்கமலா? டேய் ஜூமியன் ! காலைல அடிபட்டதுல மூளை மழுங்கிடுச்சா?” அதிர்ந்தார் குணா

“இல்லை சார். தம்பியோடு தலை தீபாவளி வான வேடிக்கையோடு சிறப்பான சம்பவமா இருக்க போகுது”

“டேய் ! இங்கே சிங்கப்பூர்ல சத்தம் வர மிளகாய் பட்டாசே அனுமதியில்லை. இதுல வான வேடிக்கையாம். போடா போடா” பொறிந்தார் குணா

“சார், ஜூம்ல நாம வான வேடிக்கை, காது கிழியுற சத்தம் வர பட்டாசுனு வெடிக்கப் போறோம். இந்தியால அதுக்கு ஆள் ஏற்பாடு செஞ்சாச்சி. ஜூம் linkல சட்டுபுட்டுனு எல்லாம் ஜாய்ன் செய்ங்க” துரிதப்படுத்தினான் ஜூமியன்

ஜூம் திரையில் இந்தியாவில் யாருடைய வீடோ தெரிந்தது. பல வகை பட்டாசும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது. புது துணியுடுத்தி ஒரு சின்ன பையனும் பெண்ணும் கையில் ஊதுபத்தியோடு நின்றிருந்தனர்.

“தம்பி ரமேஷ் நீங்களும் உங்க மனைவியும் உங்க ஜூம்ல ஜாய்ன் செஞ்சி என்ன பட்டாசு வெடிக்கனும், என்ன மத்தாப்பு கொளுத்தனும்னு சொன்னீங்கனா பசங்க அங்கே வெடிப்பாங்க” விளக்கினான் ஜூமியன்

“அப்பா நான் சின்ன வயசுல வாங்கி கொடுக்க சொன்ன ராக்கெட், சங்கு சக்கரம் எல்லாம் இருக்குப்பா. எனக்கு அதை முதலில் கொளுத்த சொல்லுங்க ஜூமியன் அண்ணா” குணா குழந்தையாய் குதித்தான்

“சார், நீங்க சரினு சொல்லிட்டா பட்டாசு பண்டல் பிரிக்க சொல்லலாம்.”

“என்ன ஜூமியன். Formality பார்த்துனு. கொளுத்தச் சொல்லுப்பா” முதன்முறையாக ஜூமியனிடம் மரியாதையாய் பேசினார் குணா

“சார், பட்டாசு அவசரத்துல வாங்கினதாலே சுமார் 2000$ ஆகுது. அந்த பசங்களுக்கு புது துணி, சாப்பாடு, பட்டாசு வெடிக்க கூலியெல்லாம் நான் கொடுத்துடுறேன். பட்டாசுக்கு மட்டும் நீங்க கொடுத்தா போதும்” ஜூமியன் பொடி வைத்தான்

“அண்ணா, அப்பாவை எதுக்கு கேட்குறீங்க. நான் உங்க அக்கவுண்ட்க்கு அனுப்பிட்டேன். சீக்கிரம் அந்த சங்கு சக்கரம் கொளுத்த சொல்லுங்க” துடித்தான் ரமேஷ்.

அடுத்த 30 நிமிடம் ஜூம் அதிர்ந்தது. இந்தியாவிலிருந்த 2 பிள்ளைகளும் சலிக்காமல், முகம் கோணாமல் ரமேஷும் அவன் மனைவியும் சொன்ன எல்லா பட்டாசுகளையும் வெடித்தனர்.

“பசங்களா ! இது மாதிரி ஒரு திருப்தியான தீபாவளி நான் கனவுலேயும் நினைக்கல. உங்க கூட ஜூம்ல ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” ஆசையாய் கேட்டாள் ரமேஷ் மனைவி

“அட, வேண்டாம்மா. எதுக்கு அந்த பசங்க கூட போட்டோ?” ஜூமியன் முட்டுக்கட்டை போட்டான்

“டேய் ஜூமியா, என் மருமகள் பாப்கார்ன் தவிர வேறு எதையும் ஆசைப்பட்டு கேட்டதில்லை. ஒரு போட்டோ தானே. எல்லாம் சிரிங்க. நான் போட்டோ எடுக்குறேன்”. அதட்டினார் குணா

குணா, ரமேஷ், ரமேஷ் மனைவி மற்றும் இந்தியாவிலிருந்து அந்த 2 பிள்ளைகள் திரையில் சிரித்தபடி போஸ் கொடுத்தனர்

“அப்பா, நீங்களும் வாங்க. போட்டோக்கு போஸ் கொடுங்க” என்று வாண்டு குரல் கொடுத்தது

“ஓ உங்க அப்பா இருக்காரா. எங்க காசு 2000$ வெள்ளில பட்டாசு நீங்க வெடிச்சதால கூச்சப்பட்டுனு வரலை போல. வர சொல்லுங்க குழந்தைகளா !” அனுமதித்தார் குணா

“அங்கிள், எங்க அப்பா உங்க பக்கத்துல தான் இருக்காரு. இந்த வருஷம் நாங்க ஆசைப்பட்ட எல்லா பட்டாசும், துணியும் யாரோ இளிச்சவாயன் காசுல வாங்கிட்டேனு காலைல போன்ல சொன்ன மாதிரியே வாங்கி கொடுத்துட்டாரு” போட்டுக்கொடுத்தான் அந்த வாண்டு

“டேய் ஜூமியா !!! இது உங்க பசங்களா? வழக்கமா என் காசுக்கு வேட்டு வைப்ப, இப்ப வேட்டுக்கும் என் காசா” குணா கொதித்த அதே நேரம் ஜூமில் போட்டோ எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்தான் ரமேஷ்.

ஜூமியன் குணாவிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டே அதுக்கு “Like” போட்டான்.

– தொடரும் இந்த ஜூம் கலாட்டா….

ஜூம்-கலாட்டா-8

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

ஜூம் கலாட்டா

உமா சங்கர்
உமா சங்கர்https://minkirukkal.com/author/umasanker/
நகைச்சுவை பேச்சாளராக வளர விரும்புபவர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் குறும்பட இயக்குனர். Life Is Beautiful என்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு அதை செயல்படுத்த நினைப்பவர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -