அடையாளம்

இரண்டு கவிதைகள்

- Advertisement -

அடையாளம்

காய்கறி வாங்கிய பின்
நண்பருக்குக்
காத்திருக்கையில்
‘பேண்ட்காரரே’
அனிச்சையாகத் திரும்பினேன்
இலை விற்பவர் சொன்னார்
‘பேர் தெர்ல, அதான்’
அவர் ‘டிசர்ட்’
என அழைத்திருக்கலாம்
‘கவிஞரே’ என்றிருந்தால்
கையிலிருந்த
காய்கறிப்பையை
உடனே கொடுத்திருப்பேன்
என்ன
காலையில் வயிறு
காய்ந்திருக்கும்
இத்தனை நெரிசலில்
பேண்ட்காரரும்
பெருமிதம் தான்

??????????????????????????

காதால் பார்ப்பவள்

விழியிழந்த அத்தைக்குப்
பாம்புச்செவி
காலடி சத்தம் கேட்டவுடன்
‘கண்ணனா’ என்பாள்

குழந்தையைக் கொடுத்தவுடன்
இடுப்பு தடவி
அரைஞாண் கயிறு
எத்தனை பவுன்
என்பாள்
நகைப்பித்து

பரோட்டாவும்
பருப்பு அடையும்
அத்தனை இஷ்டம்

அம்மா அத்தை
சண்டையில்
உயிர் நடுங்கும்
எங்களுக்கு

தாத்தா அப்பா
திட்டினால்
‘கோதண்டராமா’ என
பெருங்குரலெடுத்தழுதபின்
கிணறருகே நடைபயில்வாள்

எத்தனை திட்டினாலும்
அப்பாவென்றால்
அவ்வளவு இஷ்டம்

தீராத காமத்தை
தேய்த்துக் குளித்திடுவாள்
நள்ளிரவில்

குழந்தையாக
சுருட்டிய சேலைகளில்
சிறுவாடு
சேர்த்து வைப்பாள்

அம்மாவிடம்
அடிவாங்கி
அழுதுகொண்டே
ஓடிடுவோம்
அத்தையிடம்
அவளும்
எங்களுக்கு
இன்னுமொரு
அம்மாதான்

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -