சூர்யப்பாவை – 14

தொடர் கவிதை

- Advertisement -

பொங்கலைப்போலவே காதலுக்கும்
போகியுண்டென்கிறாய்.
பழையமுறை காதலுக்குப்
பகர்ந்திடுவோம் பிரியாவிடை.
புதுமுறைகள் ஒவ்வொன்றாய்ப்
புகுத்தியே அன்றாடம் நாம்
புதுப்பித்திட வேண்டும் காதலை.
காதற்தீயில் எரிந்து எரிந்து
கனன்று தணியட்டும் வேட்கை.
வேட்கைக்கோரையில் விரும்பி
வெம்மைப்பாய் முடையலாம்.
நாணப்போர்வை பயன்பாடு
நலிவடைந்தே இருக்கட்டும்.

தேகக்கழனியெங்கும்
வியர்வைமணிகள் விளையட்டும்.
தட்பமும்வெப்பமும் நிலையின்றித்
தடுமாறித் தவிக்கட்டும்.
தவிப்பின் நாற்றங்காலில்
தளிர்க்கட்டும் பசுங்காமம்.
அதரங்களைக் கருவியாக்கி
அறுவடையும் செய்திடலாம்.
இருமேனி கண்டிடுமே
இன்பவெள்ளாமை – இனிக்க
இனிக்கப் பொங்கிடுமே
இன்னமுதக் காதற்பொங்கல்.

இத்தனையும் நீ சொன்னால்
இல்லையென்றா மறுத்திடுவேன்?
இனிக்கஇனிக்கப் பொங்கலிட்டுப்
இதழ்வாழை இலைவிரித்ததிலே
இட்டுப் பரிமாறினால்
அதுதானே காணும்பொங்கல்!
தையலிவள் தாங்குகின்ற
பசுங்காமக் கொழுநன் நீ சூர்யா..!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -