நான்காம் பரிமாணம் – 62

13. அக அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலம் என்னும் நான் அக அதிகாரத்தில், அகம் என்னும் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு பொருட்களையும் சென்ற பகுதியில் கூறியிருந்தேன்.  அகத்துக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு சுவாரஸ்யங்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.

அகத்துக்குள் ஒரு பயணம்

இயற்கையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு பண்பு இருந்தாலும் அனைத்திற்கும் பொதுவான குணம் என்று பார்த்தால் அது ஓய்வு மற்றும் உறக்கம் மட்டும்தான். உலகில் ஓய்வெடுக்காத ஏதாவது ஒரு உயிரினம் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. வாழ்நாள் முழுவதும் இதனைப்பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட இதுவரை ஓய்வு எடுக்காத எந்த ஒரு உயிரினத்தையும் இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. வேட்டையாடும் குணம் கொண்ட மிருகங்களுக்கும் (மனிதர்கள் உட்பட) ஓய்வு என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. அதனால் இங்கிருந்தே அகத்தின் பயணத்தை தொடங்குவோம். உயிரினங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு செயல்படும் பொழுது ஓய்வு என்ற ஒன்று இல்லாமலேயே இயற்கை வடிவமைத்திருக்கலாமே? இடையில் ஓய்வு மற்றும் உறக்கம் என்ற ஒரு நிகழ்வை எதற்கு புகுத்த வேண்டும்? சொல்லப்போனால் ஓய்வெடுக்காமல் வேட்டையாடும் விலங்குகள் தன்னை சுற்றியுள்ள அனைத்து ஓய்வு எடுக்கும் விலங்குகளையும் மொத்தமாக வீழ்த்திவிட்டு தன்னுடைய சந்ததியை மட்டும் வளர்திருக்க முடியும். ஆனால், அப்படி ஒரு விலங்கு இருக்குமானால், அதன் மொத்த நேரமும் வேட்டையாடுவதற்கு மட்டுமே செலவிட்டு தன்னுடைய உடல் மற்றும் உட்புறத்தை வளர்த்துக் கொள்ள முடியாமல் நோய்வாய்ப்பட்டு குறைந்த காலத்திலேயே மரணித்து விடும். இதுதான்  ஓய்வு எடுக்காத விலங்குகள் அனைத்தும் காலப்போக்கில் அழிந்து விட்டதற்கு முக்கியமான காரணமாகும்.

உங்கள் உடல் எந்த அளவுக்கு வளர்கிறது என்பதை சராசரி தூக்கத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். புதிதாகப் பிறந்த குழந்தை, முதல் சில மாதங்களுக்கு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்கும். இதே குழந்தை வளர்ந்தவுடன் சிறிது சிறிதாக தூக்கம் குறைந்து கொண்டே வந்தது, இறக்கும் தருவாயில் மிகவும் குறைந்த தூக்கத்துடன் வாழ வேண்டி வரும். நீங்கள் ஓய்வெடுக்கும் நிலையில் மட்டும்தான் உடலின் பல கட்டுமான வேலைகள் வேகமாக நடக்கின்றன. இதிலிருந்து உங்களால் ஒன்று நன்றாக புரிந்து கொள்ள முடியும். வெளி உலகம் என்ற ஒரு பொருள் இருந்தால், உட்புறம் என்ற மற்றொரு பொருளும் இருந்தாகவேண்டும். இவை இரண்டிற்கும் சரிவிகிதமாக முக்கியத்துவம் கொடுக்கும் உயிரினங்களால் மட்டும்தான் உலகில் தழைத்து வாழ முடியும். இந்த உட்புறத்திற்கு மற்றொரு பெயர்தான் அகம். ஆதிகாலத்தில் காட்டிலும் மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த உயிரினங்கள், காலம் செல்ல செல்ல பரிணாம வளர்ச்சியில் தங்களுடைய அகத்தை விரிவு செய்து கொள்ள ஆரம்பித்தன. ஆமையின் முதுகில் இருக்கும் ஓடுதான் அதனுடைய அகம் ஆகும். தனக்கு ஆபத்து வரும் நேரத்தில் புலன்களை ஓட்டுக்குள் அடக்கி அதனால் நிம்மதியாக வாழ முடியும். மிகவும் சக்திவாய்ந்த வேட்டை விலங்குகளான புலி, சிங்கம் கூட தன்னுடைய சிறுநீரை வைத்து ஒரு எல்லைக்கோட்டை அறிவித்துக் கொண்டு அதற்குள் மற்ற விலங்குகள் வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்து தன்னுடைய அகத்தை அமைத்துக்கொள்ளும். இவை அனைத்திற்கும் மேலாக மனிதன் தன்னுடைய அறிவுக்கூர்மையை பயன்படுத்தி தனக்கென்று ஒரு இடத்தை அகமாக அமைத்துக் கொள்கிறான். சுருக்கமாக சொல்லப்போனால்,  அகத்திற்கும் புறத்திற்கும் நடக்கும் இந்த தொகுதி பங்கீடு தான் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கை எனப்படுகிறது!

தன்னுடைய உடலை மட்டுமே அகமாக வைத்துக் கொள்ள முடியாத உயிரினங்கள் அகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தங்களுக்கான வீட்டை கட்டிக் கொள்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் எவ்வாறு தங்களுடைய வீட்டை கட்டிக் கொள்கின்றன என்ற விதத்திலிருந்தே அதன் அகத்தைப் பற்றிய மொத்த விபரத்தையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும். அகத்தை காட்டும் கண்ணாடியாக அவை வாழும் இருப்பிடங்கள் கூட செயல்படும். இதனைப் பற்றிய மேலதிக தகவல்களை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -