ஜூம் கலாட்டா – 8

ஜூமே பஞ்சாயத்து

- Advertisement -

ஆகா !!! சோபால யாரும் இல்லை. இன்னிக்காவது கால் மேல கால் போட்டு, கெத்தா உட்காரலாம்னு குணா ஆசையாய் உட்கார்ந்த அதே நேரம் “என் முகத்தை பார்த்து பேசுடி” என்று ரமேஷ் கெஞ்சும் குரல் கேட்டது.

“உன் Background நல்லாவே இல்லை. நான் பேச மாட்டேன்” என்று ஒரு பெண் குரலும் லேசாக கேட்டது

அபிராமி மருமகளுடன் சண்டை போட்டுவிட்டு பாப்கார்ன் வாங்க காலையிலே பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ஒற்றுமையாய் மருமகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள். இப்ப வீட்ல இருப்பவர்களில் தலைமை பொறுப்பை தான் உடனே ஏற்கவேண்டுமென முடிவெடுத்தார் குணா.

சட்டென தரையில் படுத்தவாறு வேஷ்டியை போர்த்திக்கொண்டு தவழ்ந்தவாறே ரமேஷின் அறைக்குள் ரகசியமாய் ஊர்ந்தார்.

“சரி சரி வீட்ல பல பொருள் உருளும் சத்தம் கேக்குது. அப்புறம் பேசுறேன்” என்று கூறியவாறே அறைக்கு வெளியே வந்த ரமேஷ் சில வினாடிகள் நிதானித்து தரையில் படுத்திருந்த குணாவை 2 முறை மிதித்தான்.

“ஓ அப்பா நீங்களா? தரையை குனிந்து துடைக்கமுடியலைனு புது ஐடியாவா? உருண்டு உருண்டு துடைக்குறீங்க. சூப்பர்” என்று கூறிவிட்டு சோபாவில் அமர்ந்தான்

“டேய், நீ செஞ்ச தப்பு எனக்கு தெரியாதுனு நினைக்குறியா?” என்று வேஷ்டியை சரியாக கட்டிக்கொண்டே கேட்டார் குணா

“அடடா மறந்துட்டேன். காபி கொஞ்சம் கீழே ஊத்திட்டேன். அதையும் துடைச்சிடுங்க” என்றவனின் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு “டேய் ! புரிஞ்சிக்க ! நம்ம வீட்ல வாழ வந்த பொண்ணுக்கு துரோகம் செய்யாதே. யாரோடவோ கொஞ்சினு இருந்தியே அதை நிறுத்து” என்று கெஞ்சினார்

“அப்பா, நான் செஞ்சது தப்புனு சொன்னா அதை திரும்ப திரும்ப செய்வேன். உங்களால கண்டுபிடிக்கவே முடியாது” என்று கூறிவிட்டு ரமேஷ் குணாவின் காலை மிதித்துவிட்டு சென்றான்.

என்ன இன்னிக்கு அவங்கம்மா மாதிரி என்னை இத்தனை மிதி மிதிக்குறான்? இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு தொலைப்பேசியை எடுத்தார்

“சார் ! என் பேங்க் அக்கவுண்டுக்கு பணம் போட்டதுக்கு நன்றி” என்று சொல்லியவாறே சில நிமிடங்களில் ஜுமியன் வந்தான்.

“டேய். என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன்..ஒவ்வொரு நொடியும் நான் வெறுக்குற ஆளு நீ தான். இருந்தாலும் எனக்கு உன் உதவி தேவைப்படுது” என்று நெளிந்தார் குணா.

“சார், கவலை படாதீங்க. இதுவரைக்கு உங்க குடும்பத்துக்குல எத்தனையோ பிரச்சனையை விரட்டியிருக்கேன். இப்பவும் செஞ்சிடுறேன்” என்று உறுதியளித்தான் ஜூமியன்

அடப்பாவி, என் குடும்பத்துல வந்த பல பிரச்சனைகளுக்கு காரணமே நீ தான். கடைசில உன் கையை பிடிக்க வெச்சிட்டியே? என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே ஜூமியனிடம் தன் மகன் யாரோ ஒரு பெண்ணிடம் உரையாடியதை தயங்கி தயங்கி தெரிவித்தார்.

“விடுங்க சார். இந்த காலத்து பசங்க அப்படித்தான் இருப்பாங்க.” என்ற ஜூமியனிடம் “டேய் 30 வருஷமா என் பொண்டாட்டி எனக்கு அட்வைஸ் செஞ்சிட்டு வரா. நீயும் ஆரம்பிக்காதே. எனக்கு என் பையனிடம் பேசிய பொண்ணு யாருனு தெரியனும்” என்று வராத நம்பியார் குரலில் கத்தினார் குணா

இதோ இப்பவே வேலையை துவக்கிடுறேன் என்று ஜூமில் இணைந்த ஜூமியன் அவனது குழுவிடம் பிரச்சனையை விளக்கினான்.

“சார், நீங்க நைசா உங்க பையன் போனை எடுத்துட்டு வாங்க. அதுல அவன் காலைல யார்கிட்ட பேசினான்னு தெரிஞ்சிடும்” என்று ஜூமியன் சொன்னவுடன் வேட்டியால் போர்த்திக்கொண்டு தரையில் தவழ்ந்து குணாவில் அறைக்குள் சென்றார் குணா

அதே சமயம் ரமேஷ் திரும்பவும் அவரை நன்றாக மிதித்துவிட்டு “ஜூமியன் அண்ணா, உங்க உதவி எனக்கு தேவை. இந்த போன்ல சின்ன பிரச்சனை” என்று கூறி அவனது போனை ஜுமியனிடம் கொடுத்தான்.

சே ! நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே என்று முனகியவாறே குணா எழுந்து வந்தார்.

“அண்ணா, ஜூம்ல background மாத்த முடியலைனு என் செல்லம் கோபிச்சிக்குறா” என்று சொன்னவனிடம் ஜூமியன் கண் ஜாடையாக குணா பின்னால் நிற்பதை சுட்டினான்.

“என்னடா நடக்குது இங்கே? என் முன்னாடியே கண்டவளை செல்லம்னு சொல்லுவியா? 2000$ ஏற்கனவே நான் ஜூமியனுக்கு கொடுத்துட்டேன். அவளை கண்டுபிடித்து என்ன செய்யுறேனு மட்டும் பாரு” என்று இந்தமுறை வீரப்பா குரலில் முயற்சி செய்தார் குணா.

“முதல்ல வேட்டியை ஒழுங்க கட்டுங்க. நான் செல்லம்னு சொன்னது என் பொண்டாட்டியை. அம்மாவோடு பாப்கார்ன் வாங்க போன இடத்துல இருந்து ஜூம் கால் செஞ்சா, என் background நல்லாயில்லை ! வீட்டுக்கு வரதுக்குள்ளே மாத்துனு சொன்னா.” என்று ரமேஷ் கூறிய அதே நொடி ஜூமியன் தொலைப்பேசி அதிர்ந்தது.

“சார். உங்க கிட்ட வாங்குன 2000$க்கு நான் வேலையை முடிச்சிட்டேன். அந்த பொண்ணு உங்க மருமகள் தான். எனக்கு அவசரமா வேற ஒரு மீட்டிங் இருக்கு. கிளம்புறேன்” என்று பணத்தோடு எஸ்கேப் ஆனான் ஜூமியன்

“டேய் ரமேஷ். மன்னிச்சிக்கடா. தயவு செஞ்சி நான் 2000$ ஜூமியன்கிட்ட கொடுத்து ஏமாந்த விஷயத்தை உங்கம்மாகிட்டே சொல்லாதே. அடி பிண்ணிடுவா” என்று இந்த முறை நிஜமாலுமே தரையில் விழுந்து அழுதார்

சில நிமிடங்களில் வேகமாக கதவை திறந்து வந்த அபிராமி நின்று 2 முறை கணவனை மிதித்து “என்னங்க சின்ன குழந்தை மாதிரி தரைல விளையாடினு இருக்கீங்க. ஒரு முக்கியமான விஷயம் சீக்கிரம் வாங்க” என்று அறைக்குள் இழுத்து சென்றாள்

“தப்பு செஞ்சிட்டேங்க. நான் தப்பு செஞ்சிட்டேன். பையனுக்கு இன்னும் நல்ல பொண்ணா பார்த்திருக்கலாம். காலைல பாப்கார்ன் வாங்க போன இடத்துல மருமக யார்கிட்டேயோ background நல்லா இல்லைனு கொஞ்சினு இருந்தா” என்று அதிர்ச்சியாக சொன்னாள் அபிராமி

இவளை கொஞ்ச நாள் ஏமாத்துவோம்னு முடிவெடுத்த குணா “என்னடி இப்படி சொல்லுறே? எனக்கு 1 வாரம் அவகாசம் கொடு. நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி அந்த ஆளு யாருனு கண்டுபிடிக்கிறேன்” என்று வீர வசனம் பேசினார்

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இப்ப தான் ஜூமியனுக்கு தகவல் கொடுத்தேன். அவன் 2000$ வாங்கிகிட்டு நாளைக்கே பதிலை கண்டுபிடித்து சொல்லுறேன்னு சத்தியம் செஞ்சிட்டான். எவ்வளவு திறமைசாலி நம்ம ஜூமியன்? மத்தவங்களுக்கு உதவி செய்யனும்னு எப்பவும் தயாரா இருக்கான்.” என்று சொல்லி முடித்தவள் குணா ஏற்கனவே மயக்கமாய் கீழே தரையில் விழுந்திருப்பதை பார்த்து அவரை மிதித்துவிட்டு வெளியே வந்து பாப்கார்ன் சாப்பிட ஆரம்பித்தாள்.

– முற்றும்….

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

ஜூம் கலாட்டா

உமா சங்கர்
உமா சங்கர்https://minkirukkal.com/author/umasanker/
நகைச்சுவை பேச்சாளராக வளர விரும்புபவர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் குறும்பட இயக்குனர். Life Is Beautiful என்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு அதை செயல்படுத்த நினைப்பவர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -