பெருநகர் கனவுகள் – 13

இப்படிக்கு நான்

- Advertisement -

இப்படிக்கு நான்

அன்புள்ள லலிதாவிற்கு
நானும் நகரச்சத்தங்களும்
நலம்.
எனது பெருவெளியின்
இரைச்சல்கள்
நலமுடன் இருக்க
வாழ்க்கையிடம் மண்டியிட்டு
வேண்டிக்கொள்.

கடைவீட்டிற்குக் கீழ்
எப்பொழுதும் உலாவும்
கரும்பூனையும் எனது பசியும்
உன்னை நலம் விசாரித்தன.

மாதக்கடைசியில்
சேகரிக்கப்படும் சில்லறை
காசுகளைப் போல்
உனது சிரிப்பை
நினைத்துப் பார்க்கிறேன்.

பதில் எழுதி விடாதே.
உன் கடிதங்களைத் தாங்கும்
பெட்டி என்னிடம் இல்லை.
குறிப்பாக முகவரியற்று
நீ நினைப்பது போன்ற
எந்த உலகச் சடங்கும்
இல்லாத என்னிடம்
உன் கடிதங்கள் சேர்வதில்லை.

அடுத்த மடலில்
சந்திக்கும்வரை
உறக்கமற்ற
என் கனவிலிருந்து
விடைபெறுவோம்.

– கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

4 COMMENTS

  1. வலிகளைக் தாங்கிய வரிகள்.கவிஞரின் சொல்லாடல்களில் சிரிப்பொலி லோடு மிளிர்கிறது.

  2. அன்றாடம் பார்க்கும் விடயங்களில் கூட ஒருவரின் பிரிவின் வலியைக் காண்பிக்க முடிகின்றது என வியக்கிறேன்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -