கனிவில் கருணை
தாவரங்கள்
புடை சூழ்கையில்
வசந்த காலம்
புலன்களால் அறியப்படும்.
மழைத்தாரைகள் வரையும்
வித வித ஓவியங்கள்
மனசுகளுக்குள்
மாட்டி வைக்கப்படும்.
பறவையின் இன்னொலிகள்
மனித நாளங்களின் கம்பிகளை
மீட்டி இசைத்திடும்.
தென்றலும் வாடையும்
மாறி மாறி
சாளரம் வீசிடும்.
மலர்களின் உதடுகள் பிரிய
நறுமணம்
நாலாபுறங்களையும்
வாசனையூட்டும்.
வெயிலின் சாறு
உயிர்களுக்கு ருசித்திருக்கும்.
நீரோடைகள்
சந்தங்கள் தூவி
வெளிகளை
தடவிக் கொடுக்கும்.
பசுமை சுடரும்
அக்காலத்தில் தான்
மனிதர்களுக்கு
மனசு என்பது இருக்கும்.
??????????????????????????
கனவுக்குள் ஒரு பயணம்
இருளின் இருதயத்திலிருந்து
உலகின்
கடைசி பரியந்தம் வரை செல்ல
சுக , துக்க புகை மேலெழுப்பி
புறப்படுகிறது
ஒரு புகை வண்டி.
இரவு என்ஜினை இயக்க
பகல் பச்சைக் கொடி காட்ட
உயிர் மெய் தண்டவாளங்களேறி
விரைகிறது தனிமையாக.
வழியெங்கும்
ஏறி இறங்கும்
பாவ , புண்ணியங்கள்
கனவுக் குப்பைகளை
நிரப்பிக் கொண்டே.
ஆன்மாவின் கூவல்கள் கேட்டு
நிமிடப் பறவைகள் சிறகடித்து
அகாலத்தின் வெளிக்குள்
அமைதியாய் பறந்து மறைகின்றன.
சப்தங்களின் நகரங்களில்
மெளனங்களின் வனாந்தரங்களில்
உரையாடல்களை இழுத்துக் கொண்டு
லப்…டப்… ஓசை எழுப்பி
துடிப்பாக நுழைகிறது
காற்றில்லாத இடத்துக்குள்.
??????????????????????????
அறியாத
பெருமழையோய்வில்
வீடு
வெட வெடக்கிறது.
அற்பக் காரணங்களால்
அப்பாவும் அம்மாவும்
காயம்பட்டு
கண்ணீரும் உதிரமும்
வடிக்கிறார்கள்.
இடியோசை கேட்டு
மிரண்டு பதுங்கும்
சிட்டுக்குருவிகளாய்
அக்காவும் நானும்.
கூரையியிலிருந்து
டப்..டப்பென்று சொட்டி
பயத்தின் துடிப்பை
அதிகரிக்க வைக்கின்றன.
இறுக்கப்பட்ட அந்த சூழலுக்குள்
எப்படியோ நுழைந்த
நிலம் நனைந்த வாசனை
எங்களை
உறக்கத்திற்குள்
அழைத்துச் செல்வது
இதமாயிருக்கிறது.